கீற்றில் தேட...

வான்மேகக் கூட்டமொன்று வந்தென்னைத் தீண்டியது
கூன்நிலவு மீன்களுடன் கூடிவிளை யாடியது
தேன்வழியும் கானமதைத் தேக்கிவைத்த தென்றலது
நான்பருகக் கானமதை நல்கிவிட்டுச் சென்றதங்கு

சோலையிலே நின்றிருந்தேன் சோகமது நீங்கியது
பாலைவன மானவாழ்வில் பாலுடன்தேன் ஓடியது
மாலையிலே வர்ணஜாலம் வானமதில் தோன்றியது
காலமது எந்தனது கண்மறைத்து ஓடியது

தன்நிலைதான் நான்மறந்தேன் தாகம்பசி தான்துறந்தேன்
மின்மினிகள் என்தலைக்கு மேல்பறக்க நான்ஜொலித்தேன்
இன்றெனக்கு இவ்வின்பம் எப்படித்தான் வந்ததென்று
நன்குணரச் சிந்தித்தேன் நானொன்றைக் கண்டடைந்தேன்

வயிறாரச் சோறுண்ண வாய்த்ததனால் தானே!
உயிரோடு மண்ணில்இ ருக்கின்றேன் நானே!
உயிரோடு மண்ணில்இ ருப்பதனால் தானே!
துயரின்றிச் சோலையிலே தூங்குகிறேன் நானே!

எனதுபசி போக்கிடத்தான் எத்தனைபேர் மண்ணில்
தினம்உழைத்து வாடுகிறார் தென்படார்என் கண்ணில்
தனமனைத்தும் உண்டுபண்ணி தான்உண்ணார் வாழ்வில்
அனலில்தான் வேகின்றார் அன்றாடம் வீணில்

எப்படியோ இவ்வெண்ணம் என்நெஞ்சில் தோன்றிட
அப்படியே நான்எழுந்தேன் ஆற்றாமை பொங்கிட
இப்படியோர் பூமியிலே ஏழையென்று வாழ்ந்திட?
ஒப்பவில்லை சோலையிலை ஓய்வெடுத்துத் தூங்கிட

(தரவு கொச்சகக் கலிப்பா)

- மனோந்திரா