கீற்றில் தேட...

மண்வாசம் வரும் போது
தூரத்தில் மழை பெய்கிறதா
என வானத்தை
நோக்குகையில்
புழுதியைக் கிளப்பியவாறு
செல்கின்றன
மணல் லாரிகள்

***

வேண்டுதல்

தினமும் வேண்டிக் கொள்கிறது
கோயில் யானை
அங்குசமில்லா வாழ்வு

***

யதார்த்தம்

உதாசீனப்படுத்த
முடியவில்லை
உதாசீனம் ஏற்படுத்திய
வலியை

***

கள்ளமௌனம்

பேசாமல் போகிறாய்
நானும்
பேசாமல் போகிறேன்
ஆங்கே...
அகங்கார வேலிக்குப் பின்
ஏங்கித் தவிக்கின்றன
வார்த்தைகள்

***

நேசம்

நம் கைகளில்
எப்போதும்
ஒரு நேசம் இருக்கிறது
ஆனால் நாம் தான்
இறுக மூடியிருக்கிறோம்
கைகளையும்
மனதையும்

***

தவம்

பற்றற்றல்
தவப்பலன்
இறுகப் பற்றுதல்
தவம்

- பா.சிவகுமார்