கீற்றில் தேட...

அடிக்கடி அறை வந்து விடும்
வான்கோவை
சமாளிப்பது கடினம்
வரைந்து தள்ளுவான்
நிறைந்து நிற்க வேண்டும்
எழுத இருக்கிறது
கிளம்பு என்றால்
வரைய இருக்கிறது
விளம்பு என்பான்
ஜன்னலை சுவற்றில் செய்து
சூரியன் நிரப்புகிறவனிடம்
ஒவ்வொரு முறையும்
இரண்டு முறை பேச வேண்டும்
ஒன்று அவனுக்கு ஒன்று எனக்கு
பசியில்லை தூக்கமில்லை
பரவாயில்லை நிறமுண்டு
அதிலும் மஞ்சள் நிரம்ப உண்டு
என்பவனிடம்
வரைய இருக்கும்
ஓர் ஓவியமாய் அமர்ந்திருப்பேன்
போன முறை வந்த போது
போதமுற்ற பிரிய நாயகியை
அழைத்து வந்திருந்தான்
அவளுக்கும் ஒரு காதில்லை
தெரிகையில்
நான் இன்னும் கத்திப் பேச
வேண்டியிருந்தது
சத்தத்தில் காணாமல் போவது
நன்றாக இருக்கிறது
புத்தனின் வயிறோட்டிய
எலும்பு வரிசையில்
ஊர்ந்து கொண்டிருந்த
சொற்களுக்குள்
ஒளியூட்டிக் கொண்டிருந்த
அவன் தான்
இப்போது அறையில் இருக்கிறான்
நான் எங்கே....!

- கவிஜி