இப்போதெல்லாம்
இல்லாத ஏரியையும்
ஏரிக்குள் இறங்கியும்
நுழைந்தும் தாண்டியும்
வளர்ந்த ஊரைக்
காவல் காப்பதில்லை
வேட்டைக்குச் செல்வதுமில்லை
எல்லைக் கருப்பன்.
காதலையும்
காதலர்களையும்
காவல் காப்பதிலேயே
அவன் பொழுது
உறைந்து விடுகிறது
துருப்பிடித்த அரிவாளொடு
சாதிய ஆணவச் சகதியில்
எலுமிச்சையென அறுத்து
உருளும் தலைகள்
மண்டிய நிலத்தில்
பதற்றமாய் பட்டாக் கத்தியுடன்
உட்கார்த்திருக்கிறார் ...
அச்சமேதுமற்று
அவர் கடா முறுக்குமீசையின் மீது
கூடுகட்டிக் கொண்டிருக்கிறது
காதல்மிகு கரிச்சான் குருவிகள்.
- சதீஷ் குமரன்