ஒரு மழைக்கு ஏங்கி நிற்கும்
நெகிழ்வுற்ற பூமி நான்
இப்போதே கொண்டல் மேகங்களும்
கூதற் காற்றும் என்னை
சூழ ஆரம்பித்து விட்டன
தரிசிக்கும் கணநேர முழுமையின்
கடல் கொள்ளா பரவசத்தில்
முற்றிலும் விநோதமானதொரு
பூவாக பூத்து நிற்பேன் உன் முன்பு
வெண் நாரைகள் போல
நுரைப் பூக்கள்
சிதறி ஓடட்டும் அப்போது
என் மேனியிலிருந்து
ஆதி அந்தமாய் ஐம்புலன்களோடும்
எதிரிலிருக்கும் உன்னை
ஒருமையில் தீண்டும் போது
சிலிர்ப்பில் கரையும் உன் இருப்பு
திடத்திலிருந்து திரவமாக
ஒரு அபூர்வமான நிகழ்த்துக் கலை
அப்போது வானில் பறவைகள்
பாடிய படியே பறக்கும்
வானம் என்பது எப்போதும் உயரமானதல்ல
மனதினை அறியும் மனதிற்கு
- தங்கேஸ்