கீற்றில் தேட...

போட்டிக்குப் போட்டியாக
புகைப்படம் வைக்கிறாய்
மேட்ச்க்கு மேட்ச் புரிந்து விட்டதா

*
பியானோ கட்டைகள்
உன் கண்கள்
இமை மூடி இசை திறக்கிறது

*
உன் சொல்லருவிக்குள்
உருளும்
கல் குருவி நான்

*
கண்ணுக்கு சரி
வெட்கத்துக்கும் மை இடுகிறாய்
எப்படி

*
தினம் ஒரு மலர் போல
தினம் ஒரு நீ
உன் வீடே ஒரு பூச்செடியா

*
எதிர்ப்பட்ட மயில்
தோகையை உனக்குத் தந்து
உன் துப்பட்டாவை வாங்கிக் கொண்டதாம்

*
எங்களை நனைக்கிறது
உன்னை மினுக்குகிறது
ஓரவஞ்சனை ஓடையிடம்

*
நீ திரும்பிப் பார்க்காவிட்டாலும்
பரவாயில்லை
குறுநகை இதழில் இருந்தால் போதும்

*
விழுங்குவது போல
பார்க்காதே என்கிறாய்
மனப்பாம்பு வேறென்ன செய்யும்

*
ஒவ்வொரு வளைவிலும்
நீயே வா
ஹாரன் ஆராரோ ஆகட்டும்

- கவிஜி