கீற்றில் தேட...

நான் ஒரு
பாடலைப் பாடும் போது
பாடலும் ஒரு பாடலைப் பாடுகிறது

மேகம்
ஒரு மழைப் பாடலை
பாடும் போது
நதி
ஒரு நுரைப்பாடலை
பாடும் போது
நிழல் மட்டும்
மெளனத்தின் பாடலை பாடாதோ?

பறவையின் உட்புற நிழல்
தரையில் விழும் போது
என் இரகசிய நிழல் எனக்குள்
தானே விழவேண்டும்

நான் சிந்திப்பது போலத்தான்
என் நிழலும் சிந்திக்கிறதா?
என்றால் என் மன நிழல்தானா
இந்தக் கவிதையை
எழுதிக் கொண்டிருப்பது?

உங்களின் மனநிழல்தானா
இந்தக் கவிதையை
வாசித்துக் கொண்டிருப்பது?

- தங்கேஸ்