மாமர உச்சியிலாடும்
மாம்பூக்களில்
தேனுறுஞ்சிடும்
கருஞ்சிட்டுகளின் மீது
தழுவிடும் மாசி மாத
பனிவெயில்
மினுக் மினுக்கென்று மின்னுகிறது.
ஆழ்நிலை தியானத்தில்
மௌனிக்கும் தென்னை,
மா மரங்களில் சறுக்கி
விளையாடும் வெயில்
குருவிகளின் பாடலுடன்
வரைகிறது காற்றில் பகலை .
சுள்ளெனத் தாக்கி
இலை நுனியில் சொட்டும்
வெயிலுக்கு வேரைச்
சுற்றிலும் நிழலையே
சுரக்கிறது மரம்.
என்னுள் நீ சுரந்திருப்பது போலவே
- சதீஷ் குமரன்