கீற்றில் தேட...

நிழல்கள்
சந்தித்துக் கொள்வது போல
மனிதர்கள்
சந்தித்துக் கொள்கிறார்கள்
கை குலுக்குகிறார்கள்
கட்டித் தழுவுகிறார்கள்
தழுவியதும்
விடைபெறுகிறார்கள்

உருவம் கலைந்ததும்
வெற்றிடம் விரிகிறது
வெற்றிடத்தைக் கண்டால்
பூமி பெருமூச்சு விடுகிறது
யார் நிரப்ப?

எண்ணங்களின் நிழல் வழியே
நான் உனக்குள் இறங்குவேன்
நள்ளிரவில்

இந்த பால் கொடியை
பற்றிக் கொண்டு
மேலேறு உயிர் பூச்சியே!
உறவுச் சங்கிலிகள் ஆடுவது
இருள் நிழல் கயிற்றின்
துணை கொண்டுதான்

- தங்கேஸ்