நேற்றைய அழுத்தமும்
நெடுநாளைய அலுப்பும்
நீட்டிக்கும் தூக்கத்தில்
சுகம் காண இயலாது.
குறித்த நேரத்திற்குள்
கூடுமிடம்
வாய்க்காது போனால்
வேலையற்ற நாளாக
வேதனையில்
அன்றைய பாடு
திண்டாட்டம்தான்.
எவர் வீட்டு உணவோ
எந்தக் கடையின்
பலகாரமோவென்று
நிர்ணயிக்க முடியாமல்தான்
வேலைகளின் பொழுதுகள் கழிகிறது
பசிக்கு உணவாக
படும் பாடுகளானதால்.
வேலைகளைத் தவிர
வேறொன்றும் அறிய
ஆசைகள் கொண்டதில்லை.
வந்துபோகும் தேர்தலில்
வாக்கு செலுத்துவதைத் தவிர.
வரியை வாங்கிக் கொண்டு
வஞ்சிப்பதைப்போல
உழைப்பையும்
இங்கு உறிஞ்சுகிறவர்கள்
இருந்தாலும்.
அவரதிகமாக பேசமாட்டாரென்பது
அசௌகரியங்கள் கொடுப்பதில்லைதான்
விவாதங்கள்
நேர விரயமெனக் கருதியதால்.
பெரியாரைப் பற்றி
பேசிய ஆண்மையில்
காந்தியைப் பற்றியும்
கருத்துக்கள் சொல்லுங்களென
கேட்கும் புரிதலுக்கும்
குறைவில்லை
எப்பொழுதும் வாழ்வியலோடு
இங்கு அரசியலும்
கலந்திருந்ததால்.
இரு மொழி ஏற்றது
ஏற்றங்கள்கொண்டபோது
மும்மொழி ஏற்றது
மூத்திரம் குடிக்கத்தானே
பயன்பட்டதென அறிவதற்கு
ஆக்ஸ்போர்டில்
படிக்கத் தேவையில்லை
அறமெனக் கொண்ட வாழ்வில்.
சுருண்டு கிடக்கும்
மனைவியைச் சுகமாக்க
மனக்கிலேசத்தை மறந்துவிட்டு
இன்றைய வேலை
எதுவானாலும் செல்லலாம்.
உழைப்பவனுக்கு உழைப்புதான்
முதல் தனமென
பகைகள் மறந்தும்.
எட்டரைக்குப் பிறகு
வேலைகள் கிடைக்காதபோது
இனி நிற்பது
பயனற்றதென நினைத்த தருணத்தில்
வந்து நின்ற வண்டியில்
விவரம் அறிந்தவர்கள்
ஏறிக் கொண்டார்கள்
புரட்சித்தலைவர் படத்திற்கு
டிக்கெட் எடுக்கும்
புது உற்சாகத்தில்.
வீட்டிற்கு கிளம்ப
சைக்கிளை எடுத்தபோது
ஓடி வந்து அழைத்தவரிடம்
ஒத்துவராதென கிளம்பி விட்டேன்
சுயாதீன பொறுப்பு
சுடரேற்றியதன்
பொருட்டு.
'அரசியல் மாநாட்டிற்கு
பணம் வாங்கிச் செல்லும்
பாதகத்தை மட்டும்
இதுவரை
செய்யத் தோன்றவேவில்லை
மனைவின் உடல் நோவைப்போல
முன்பும்
மன்றாட்டமாகவே
அன்றாடங்கள்
அமைந்திருந்த போதும்.
- ரவி அல்லது