கீற்றில் தேட...

இன்று என் மௌனங்களுக்கு
உயிர்ப்பு இருந்தால்
உன் கனவில் வந்து
தட்டி எழுப்பட்டும்

உடலையும் மனதையும்
தனித் தனியாக இம்சிக்கும்
ஒரு பார்வையினால்
நான் படும் வேதனைகளை
வார்த்தைகளில்லாமலேயே
உனக்கு புரிய வைக்கட்டும்

உன்னால் சிறகில் இருந்து
பிய்த்து எறியப்படும் இறகாக
என் ஒவ்வொரு நாட்களும்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன
என்பதை உனக்கு எப்படி சொல்வது ?

"ஈரம் சொட்டச் சொட்ட சிறகுகளை
உதறாமல் நீர்த்துளிகளை
அடைகாக்கும் மழை காக்கை
நான் என்பதை நீ அறிந்தால்
என் சிறகுகள் முழுவதும்
தழும்பி நிற்கும் திவளைகள்
முழுவதும் உன் நினைவுகள் தான்
என்பதையும் நீ அறிவாய்"

இதை உன் காதில் கிசுகிசுத்து விட்டு
அது ஒரு சருகைப் போல உன்னிடமிருந்து
விடை பெறட்டும்

- தங்கேஸ்