மதவெறி கொண்டு மனிதரைக் கொன்று
வளருது பாசிஸம் இன்று
விதவித மாய்ப்பல பொய்கள் உரைத்து
விஷத்தை விதைக்குது வந்து
பதவியில் ஏறி முகமதி யரையே
பயமுறுத் துதுஅது இன்று
பதறிடச் செய்யுது பாமரர் தம்மை
பகுத்தறி வையது தின்று
திருப்பரங் குன்றம் முருகனைச் சென்று
தெருவில் இழுத்து நிறுத்தி
அருவெறுப் பான சனாத னம்தான்
அரசியல் செய்யுது மாற்றி
இருபேர் மதங்களைச் சேர்ந்தவர் இங்கு
இணக்கத் துடனே இருக்க
ஒருசிறு குன்றைத் தனதெனச் சொல்லி
ஒற்றுமை குலைத்திடப் பார்ப்பார்
ஒருமொழி என்றும் ஒருநா டெனவும்
உளறு கிறார்சிலர் இன்று
அருந்தமிழ் தன்னை வழக்கில் இருந்து
அகற்றிடு மேஅது கொன்று
இருமொழி யால்நாம் உயர்வை அடைந்தோம்
இதனைத் தடுத்திடத் தானே!
திருவிளை யாடல் புரிந்திடு கின்றார்
திணித்திட இந்தியை வீணே!
வடக்கது வாழவும் தெற்கது தேயவும்
மறுசீ ரமைப்பினைச் செய்து
கிடக்கும் தொகுதியைக் கூட்டிடத் தானே
கிளம்பிவிட் டார்கதை நெய்து
நடக்கும் இதுவெனில் நாடாளு மன்றம்
நமக்கில்லை என்பது உண்மை
சடக்கென வேநாம் சமர்செய் திடணும்
சமரசம் செய்தல் மடமை
(வெண்டளையான் அமைந்த எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
- மனோந்திரா