கீற்றில் தேட...

குழந்தைகள் பூங்கா ஒன்றின்
கூண்டிற்குள் அடைபட்ட
வெள்ளை முயல் குட்டியென
சுருண்டு படுத்திருக்கிறது
இன்றைய மாலைப் பொழுது

வான்காவின் சூரியகாந்திஒவியமும்
இரத்தச் சிவப்போடு
மேற்கில் மூழ்கிவிட்டது
அதோடு
அதன் மந்திரச் சேர்க்கையும்
புதைந்து விட்டது

அந்தகாரங்களைத் திறக்க
பிரத்தியேக சாவியோடு
முன்னதாகவே வந்து
காத்திருக்கிறது
இன்றைய இருள்

இன்றும் உன் நினைவை
கடக்க முடியாதபடி
முதல் புள்ளியாக அங்கே
விழுந்து விட்டது
விண்மீண்

இருளின் ஆக்டோபஸ் கரங்களில்
இன்றும் நான் சிக்கியிருக்கிறேன்
வன்முறை கொண்ட குழந்தையின்
விரல்களில் சிக்கியிருக்கும்
கையடக்க பார்பி பொம்மையாக

இருள்நதியின் கட்டற்ற பிரவாகத்தில்
கடைசி துளியாகவும்
நான் முழுமையாக மாறியிருக்கக்கூடும்
இந்த கவிதை முடியும் தருணத்தில்

- தங்கேஸ்