நீ எதனால் மலர்ந்தாயோ
அதனால் தான்
அவன் வாடுகிறான்.
நீ எதனால் உடுத்தினாயோ
அதனால் தான்
அவன் நிர்வாணமாய் நிற்கிறான்.
உனக்கு எதனால் அஜீரணமோ
அதனால் தான்
அவனுக்குப் பசி.
நீ எதனால் அங்கு நிற்கிறாயோ
அதனால் தான்
அவன் இங்கு நிற்கிறான்.
உன்னிடம் எதனால் இருக்கிறதோ
அதனால் தான்
அவனிடம் இல்லை.
நீ எதனால் கொடுக்க மறுக்கிறாயோ
அதனால் தான்
அவன் எடுக்கிறான்.
நீ எதனால் உயர்த்தப்படுகிறாயோ
அதனால் தான்
அவன் தாழ்த்தப்படுகிறான்.
நீ எதை அபகரித்தாயோ
அதுவே அவனுடைய உரிமை.
நீ எதனால் அமைதியாய் இருக்கிறாயோ
அதனால் தான்
அவன் ஆர்ப்பரிக்கிறான்.
எதனால் அவன் குரல் உனக்குக்
கேட்கவில்லையோ
அதனால் தான்
நான் என் மெளனத்தை உடைக்கிறேன்
- அ.சீனிவாசன்