கீற்றில் தேட...

இது போன்றதொரு சாதாரண நாள் தான்
எத்தனை மகத்தானதாக மாறிவிடுகிறது
ஒரு சந்திப்பில்?

கறிக்கடை சந்தின்
முக்கில் இருக்கும பிள்ளையார்
தன் துதிக்கையை அசைத்தபடியே
அன்போடு உன்னை அழைக்கிறார்

தெருவில் செல்லும் அழகிய யுவதிகள்
உனக்கென்று ஒரு சிறிய புன்னகையை
உதட்டோரம் கசியவிட்டு செல்கிறார்கள்

கடன்காரனோ உன்னைக் காணாதது போல
முகத்தை வேறுபக்கம் திருப்பிய படி
இருசக்கர வாகனத்தில் விரைந்து செல்கிறான்

பார்த்ததும்
வள்ளென்று விழவேண்டிய
தெரு நாய் நட்பாக
வாலை ஆட்டியபடி வருகிறது

பழைய வாசல் கோலத்தின் மீது
மஞ்சள் அரளிப் பூக்கள்
புள்ளிகளாக விழுந்து கிடக்கின்றன

என்றுமில்லாத வழக்கமாக ஓடி வந்து
உன் கழுத்தை கட்டிக்கொள்கிறார்கள்
குழந்தைகள்
இல்லாள் ஒரு புன்னகையோடு
உன்னிடம் தேநீர்க் கோப்பையைத் தருகிறாள்

எல்லாவற்றிற்கும் ஒரு சந்திப்பு தான்
காரணம் என்றால்

அது யாரென்று கேட்டால்
மட்டும்
கடைசி வரையிலும்
நீ
தெரியாது என்றே சொல்வாய்
தெரிந்தால் தானே சொல்வதற்கு

- தங்கேஸ்