கீற்றில் தேட...

சமயத்தில் உதவாத
புத்திசாலித்தனத்தை
காகிதப் பந்தாய் சுருட்டி
குப்பைக் கூடையில் எறிந்து விட்டு
அலமாரியில் அணியாத துணிகளுக்குள்
ஒளிந்திக்கும் கிறுக்குத் தனத்தை எடுத்து
அணிந்து கொள்வேன்

நீ திட்டும் போது புன்னகைப்பேன்
தெரு நாய்களின் பிடறியைக்
கொஞ்சம் தடவி விடுவேன்
உன் மமதைக்கு கால் பிடித்து
சுளுக்கெடுக்கும் போது
விரல் நகங்களுக்குள் கட்டெறும்பை
முத்தமிட அனுப்பி வைப்பேன்

நீ கண்ணயரும் நேரம்
பகலில் நீ துப்பிய
வார்த்தைகளைக் கோர்த்து
உனக்கொரு மாலை தொடுப்பேன்

புகைப்படத்தில் சிரிக்கும்
காலத்தை எடுத்து
இரகசிய முத்தமிட்டு
பந்தலேறிப் பாயும்
அவரைக் கொடி மீது
விட்டு விட்டு நழுவிப் போவேன்

காலமற்ற சட்டகத்தில் உன் பிம்பம்
வறண்ட புன்னகை சிந்த
ஓடும் நதியில் நீச்சலறியா
கன்றுக்குட்டி போல் பாய்வேன்
பொடி மீன்களின் காதுகளை உரசி
கிச்சு கிச்சு மூட்டுவேன்
பாசம் படர்ந்த பாறையில் வழுக்குவேன்
நீர்ப் பாம்பு தலை தூக்கி கீறும்
காலமெல்லாம்
நீ தந்த கற்பாறைகளை
உருட்டி உருட்டி மழுக்கி
கூழாங்கல்லாய் மாற்றுவேன்

- தங்கேஸ்