திருடிச் சென்றாலும்
குழந்தை போல்
தூக்கி வைத்திருந்த
திருடனை
மன்னித்து விட்டது
கடவுள் சிலை
*
அதுவா
அதே போல வேறயா
கண்டுக்காம போகிறது
இல்ல அதே தான்
எனக்குத் தெரியாதா
இந்தக் கையாள
சோறு போட்ருக்கேன்
தெளிவாகவே
சொல்கிறாள் அம்மா
அம்மாவின் அம்னீசியா
தெரிந்தது தான்
ஆனாலும் தோன்றுகிறது
ஏன் நாய்க்கு
மறதி வரக்கூடாதா என்ன...!
*
மலை உச்சியில்
பெரும் கல்லாய் அமர்ந்து
வானம் முழுக்க
நீலமாய் படர்ந்து
கடல் தாண்டும் சிறகில்
காற்றாய் நுழைந்து
இனிதான்
செய்ய நிறைய இருக்கிறது
- கவிஜி