கீற்றில் தேட...

நேர விரயத்தில்
காத்திருந்ததைத் தவிர
கைவரப் பெறவில்லை எதுவும்
எப் பிரயத்தனத்திலும்.

வலு கூட்டி
வீசிய வலையை
இழுத்துச் சோர்ந்தபோது
எஞ்சியது
களைப்பைத் தவிர
வேறில்லை.

தூண்டிலின்
தக்கையசைவில்
சிக்கிவிட்டதென நம்பியதும்
பொய்த்துப் போனது.

பகலைத் தின்னக் கொடுத்த
அலுப்பில் இரவெல்லாம்
வழிகிறது கண்ணீர்
தாகம் தணிக்கச் சொல்லி
இப்பெருங்கடலில்.

காத்திரமான
கவிதையொன்றை
எழுதிவிட
எனக்கு மட்டும்
ஏனோ சிக்கவில்லை
எந்த வார்த்தையும்
நிறைந்திருக்கும்
மௌனத்தில்
மிதப்பதைத் தவிர.

- ரவி அல்லது