நகரம் முழுக்க
மட்கிப் பெருகும் இந்தப் பாவிகளை
இரட்சிக்கும்படி கையேந்துகின்றோம்
ஏதேன் தோட்டத்தின்
சாபக் குழியிலிருந்து
மீண்டெழ கை கொடுங்கள்..
கரை படிந்த
வெண்ணிற அங்கிகளை
அடித்துத் துவைக்க
அவைகளை
கழுதைகளின் மீதேற்றி
கூவக் கரைக்கு அனுப்பிவிட்டோம்
எங்கள்
நடைபாதைக் கல்லறைகளில்
உறங்கும் அழுக்கு மனிதர்களின்
ரத்தத் துளிகளை
காணிக்கையாக்குகிறோம்
நாறி அழுகிவிடும்
பிண்டங்களை
உமக்காக
விட்டுவைத்திருக்கிறோம்
இதயத் துடிப்பு
இன்னும் நிற்கவில்லை..
எல்லாம் இருக்கட்டும் -
சீக்கிரமாய்
பாவங்களை மன்னிக்க
வலைக் கூண்டின்
மறுபக்கம் வந்தமருங்கள்..
எங்களுக்கு நேரமாகிறது..
மேற்கொண்டு
பாவங்கள் செய்ய
புறப்பட்டாக வேண்டும்..
- இளங்கோ (