பறந்து போனதொரு குருவி! - இன்று
ஓலைச் சுவடிகளில் தூது தந்தபடி
உள்ளம் திறக்கிறாள் தலைவி!...
கண்ட பொழுதில் எனைக் கட்டிப் போட்டதொரு
காம தேசத்துப் புரவி! - எனைக்
கண்ட துண்டமெனக் கூறு செய்கிறாள்
காதல் வாள்கொண்டு தழுவி!...
“செல்லம்!” எனச் செல்லமாக விளித்த கிளி
திரும்பவில்லையே சௌதி! - இன்று
‘செல்’லில் மட்டும் அவள் செய்தி தரும் நிலையில்
செல்கிறது நூறு தேதி!...
பிரியமானதொரு ‘பருவ மேடு’தனைப்
பிரிய நேர்ந்ததொரு கெடுதி! - அவள்
கரிய மீன்விழிகள் காண எதுவரையில்
காக்க வேண்டும் நான் பொறுதி?...
கொண்ட காதலின் குறிப்(பு) உணர்த்தாத
கோழை அவள் கொடிய துறவி! - தமிழ்
உண்ட உதடிருந்தும் ஊமையானதேன்?
ஒன்றும் அறியாத பிறவி!...
ஒன்றிரண்டு தினம் செல்லம், உன் வீட்டில்
உணவருந்தியது வசதி! - அவண்
உன்றன் வாஞ்சை வயப்பட்டுப் போனதால்
உருவெடுத்ததொரு தகுதி!...
ஓரக் கண்வழி உகுத்த உன் பார்வை
ஓசையற்ற இசைச் சுருதி! - உனை
ஆரத் தழுவ மனம் ஆசை கொண்டிருந்தும்
அணுகவில்லை, பயம் கருதி!...
வண்ண மேனிதனைக் கண்ணினால் அளந்த
வண்ணம் நானடைந்த அவதி - இன்று
எண்ண மெங்கும் தலைதூக்கி விட்டதடி!
எங்கு காண்பதினி அமைதி?..
கனவுதொறும் உனது காட்சி கண்டு, கழி
காமம் பூண்டதடி குருதி! - எனை
உனது வசந் திருடி வைத்த செயல் கண்டு
உவகை பொங்குதடி மிகுதி!...
திருடித் திருடி எனைத் திணறடித்து வரும்
செல்லம்! நீ பெரிய திருடி! - பொறுத்
திருடி! உனைவிரைவில் தேடி வந்து நான்
திருமணம் புரிவ(து) உறுதி!!...
- தொ.சூசைமிக்கேல் (