
அதிகாலை விடியலைத்
தட்டி எழுப்புகிறது
எங்கள் தேசத்தலைவர்களின்
வாக்குறுதிச் சேவல்கள்.
கண்ணாடிக்கூண்டுக்குள்
கறுப்பு கண்ணாடிக் காவலில்
உடைபடாத பாதுகாப்பு வளையங்கள்
உதிர்க்கின்றன உறுதிமொழிகளை
59வது தடவையாக.
இந்தியா வல்லரசாகும்
இனிய கனவுகள்
நாளை நடக்கலாம்!
வாஷிங்டனும் லண்டனும்
எங்கள் செங்கோட்டைக் கதவருகில்
காத்துக்கிடக்கலாம்
சாக்கடை பெருகிஓடும்
சந்துகள் மறைந்து
மாதுங்கா பூக்கடைகள்
தாராவி மண்ணுக்கு
மாற்றப்படலாம்..
ரசிகர் மன்றங்களின்
போதைகளிலிருந்து
எங்கள் இளையசமுதாயம்
மீட்கப்படலாம்!
கற்பழிப்பு நடக்காத
இந்தியத் தலைநகரம்
இருப்பதாகவே
உறுதிசெய்யப் படலாம்!
அரசியல் தலைவர்களின்
அதிரடி அறிக்கைகளில்
கிழிபடாதச் செய்திகள்
காலையும் மாலையும்
வாசிக்கப்படலாம்
தலைவனுக்கு கோஷமிட்டு
தீக்குளிக்கும் தொண்டன் கதை
இருந்ததாக மட்டுமே
வருங்காலம்
வரலாறு படிக்கலாம்
இந்திய நாடு இயந்திரமயமாகலாம்
கணினிமயமாகலாம்
அணுமயமாகலாம்
அறிவியல்மயமாகலாம்
எப்போது வேண்டுமானாலும்
இதெல்லாம் நடக்கலாம்
நடக்கலாம் நடக்கலாம்
நம்பிக்கை இருக்கிறது..
ஆனால்-
எப்போது நடக்கும்
எங்கள் கீரிப்பட்டி கிராமத்தில்
சின்னய்யாவின் தேர்தல்!
எப்போது எந்திரமயமாகும்
எங்கள் துப்பரவுத்தொழிலாளி
தோள்களில் சுமக்கும்
மனிதக் கழிவுகளின் ஈரம்?
எங்கள் செங்கோட்டை
தலைவர்களின்
சிறுகுடல் பெருங்குடல்கள்
மலம் சுமப்பதில்லையோ
அவர்கள்
மலம் கழிப்பதுமில்லையோ?
எந்த விடுதலைநாளில்
இந்தியச் செங்கோட்டையில்
உறுதிமொழியிலாவது
உறுதிச்செய்யப்படும்
எங்கள் மனிதர்களின் விடுதலை?
அப்போது பாடுவோம்
நமக்கான நம் விடுதலைக் கீதத்தை.
- புதிய மாதவி, மும்பை (