
கணினிச் சொடுக்குகளால்
ஜிமெயில் பிளந்து
மின் துடிப்புகளுக்கிடையில்
கண் துடித்தேன்
வெற்றுகள் கூடி
துக்கம் விசாரிக்க
என் விழியே
என் விழி பார்த்துக் கேட்கிறது
"எங்கே என் கணிக்குயில்?"
வலைப்பூ வனப்பாய்
விழுதுகள் பரப்பி
கிளைத்து வளர்கின்றன
உயிர் இணையத்தில்
பசும் பொல்லா நினைவுகள்
வாலறுந்த கணியெலிபோல்
அவளின் உணர்வுக் கணிக்குள்
எதைச் சொடுக்கவும்
வழியற்று வலிபெற்று நான்
யுனித்தமிழ்ச் சொல்தேடும்
கூகுள் எந்திரம் போல்
கடுவிழியலைந்து தவிக்கிறேன்
கூட்டுக்குள் அடையா ஏக்கங்களோடு
என் மூச்சானவள் மனம் தேடி
மௌனமும் அல்லாத
பேச்சும் அல்லாத
இடைப்பட்ட மொழியில்
வினோதமாய்ப் புதிர்கிறாள்
நாளும் பொழுதும் இவள்
மௌனமெனில்
நம்பிக்கைத் திசையில்
அவளை என் விருப்பம்போல்
நகர்த்திக்கொள்வேன்
பேச்செனில்
இதுதான் இவளென்று
வெள்ளைத்தாள் எழுதி
உறுதியாவது செய்து கொள்வேன்
மௌனமுமல்லாத பேச்சுமல்லாத
இவளின் முட்பூ முத்தம்
உயிரின் உள்ளுதடுகளையும்
கிழிக்கின்றது
அதன் மூர்க்க வாசம்
அணுக்கள் ஒவ்வொன்றையும்
இரண்டிரண்டாய்ப்
பிளந்தெடுத்துக்கொண்டே
ஓய மறுக்கின்றது
கண்ட்ரோல்+ஆல்டர்+டெலீட்டால்
பில்கேட்சின் பிழைகளைச்
சரி செய்வதைப்போல
இவ்வதைகளையும் சரிசெய்ய
நெஞ்சப் பொறிக்குள்ளும்
பொத்தான்கள் இல்லையா?
காணத்துடிக்கும் உயிரோடு
என் உயிருக்கு
இந்த உயிர் மடலும்
விரைந்து போய்ச் சேரட்டும்
திறக்கப்படாத
திறந்தாலும் வாசிக்கப்படாமல்
அழித்தல் பொத்தானால்
தூக்கிலிடப்படும்
அவளின் மின்னஞ்சல்
வருகைப் பெட்டிக்குள்
- புகாரி (