
வரிகட்குள்ளடக்கிய விரல்களுக் கென்ன தரலாம்?
எழுதியெழுதி ஓய்ந்தன வென்று இதழ்களால்
ஒத்தடம் தரவா? எனக்கும் பங்குண்டென்று
என் விரல்களுடன் பிணைக்கவா?
நட்பின் புனிதத்தைப் பலப்படுத்தியதால்
கண்களில் ஒற்றவா?
என்ன தரலாம்?
மண்ணை நான் பார்க்கும் போது
என்னை அளவெடுக்கும் கள்ளக்
கருவிழிகட் கென்ன தரலாம்?
பிற பிம்பங்களைப் பிரதிபலிக்கத்
தடை கூறி நாளும்
எம் உருவமே பதிந்திருக்கப்
பணிக்கவா?
என்ன தரலாம்?
முத்தமிடக் கன்னங்களைத்
தந்தால் இதழ்களைக் குறிபாக்கும்
குறும்பனுக் கென்ன தரலாம்?
நிதமும் எம் அழகைப்
பாடும் ஆஸ்தான கவியாக்கி
ஆணைப் பிறப்பிக்கவா?
என்ன தரலாம்?
காடோ, கழனியோ, குன்றோ, குறுநிலமோ,
மணியோ, மகுடமோ, மண்ணோ, மாளிகையோ,
எதைத் தருவேன் நட்பே,
எதுவும் ஈடில்லை எனக் கண்டு
இதயம் கொள்ளா அன்பைத் தந்தேன்
பெற்றுக் கொள் என் அன்பே!
- அ.மல்லி. (