கீற்றில் தேட...

பேச்சற்று வெளியேற நேர்ந்தது
இறுகிய உதடுகளின் இருண்மையை
தந்து நின்ற போது..

பசித்தலையும் சிந்தனைகளை அதட்டி
தாகம் தீர்க்க கொடுப்பதற்கு
கைவசம் வார்த்தைகள் இல்லை..

காரணங்களின் வேர்களைத் தேடுதல்
சாத்தியமற்ற நிழலின் ஆழம் போல
வெயில் வேறெங்கோ உயரத்தில் எரிகிறது..

தனிமை அறைக்கு திரும்புதல்
அர்த்தமிழந்த ஒளியை பொழியச் செய்கிறது
சிறுமையின் இருள் மூலைகளில்..

மென்மையாகத் தட்டப்படும் கதவுக்கு அப்பால்
ஒரு பிசாசையோ பூதத்தையோ
எதிர்பார்க்கிறது செவி..

மீண்டும் சில அவச் சொற்கள்
பூங்கொத்தாக நீட்டப்படலாம்
பரிசென வாங்கிக் கொள்ளும்படியான
உத்தரவாக..!

- இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)