கீற்றில் தேட...

plantஅந்தரத்தில் நடனமிடும்

பச்சைத் தேவதையாயும்

அணில்பிள்ளைகள் ஆடிமகிழும்

ஊஞ்சலாயும்

பூபிஞ்சுகளை அள்ளிச்சுமந்தவாறே

மெலிந்த தந்துக்கரங்கள் வீசியபடி

பிரிசுவர் தாண்டியும் மிகமென்மையாய்

நடைபயிலுது அயல்வீட்டுப் பீர்க்கங்கொடி.

ஜன்னல் திறந்ததுமே புன்னகைக்கும்

அதனுடனான என் ஸ்னேகிதம்

அண்மையானதும் மிக ஆழமானதுங்கூட.

என்னைப்போலவே தினமதுவும்

மதியஉணவு சமைக்கிறது ஆனாலும்

காற்றுவெளியை அது கார்பன் மயமாக்குவதில்லை.

நம் கழிவுக்காற்றையே தன் அடுப்பு விறகாக்கித்

தூய குளிர்காற்றால் முற்றம் நிரப்புகிறது.

கொத்தான அதன் மஞ்சள் பூக்களிலே

எழுதி வைத்திருக்கிறது பலநூறு  கவிதைகள்

தூக்கணாங்குருவிக் கூடுபோலத்

தொங்குமதன் காயைக் காண்கையிலோ

ஞாபகச்சுவரை

முட்டிமோதிக்கொண்டே நாவூறச்செய்கிறது

சின்னவெங்காயமும் கடுகும் தாளித்தமணம்

கூரைக்கு மேலாயும் வழிந்தோட

வற்றாளையும் வெள்ளிறாலும் சேர்த்தாக்கிய

உம்மம்மாவின் பீர்க்கங்காய் பால்கறிதான்.

 

- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)