கீற்றில் தேட...

இதை வீடென்றும் அழைக்கலாம்
இங்கு தான் சில சோத்து மூட்டைகள்
அடங்கியுள்ளன.
உயரமான மதிற்சுவர்கள் சூழ,
 கணமான கட்டிட்த்திற்குள்,
காவலாளி துனையுடன் மிகவும் பாதுகாப்புடன்
அடக்கம் செய்யபட்டுள்ளன.

காலையில் இமை திறந்து
தன் உயிர்பை உறுதி செய்யும்,
தொடங்கி விட்டது
சோத்து மூட்டைகளின் தினம்.

உறக்கம் கலைந்த மறு நிமிடம்
கண்கள் தேட ஆரம்பிக்கும் பண மூட்டையை,
பல் துலக்கும் போதும்,குளிக்கும் போதும்,
மனைவியை அனைக்கும் போதும்
மூலைக்குள் ஓடுவதெல்லாம்
பணத்தின் பிம்பங்களே.

சோத்து மூட்டையின் கண்களுக்குள்
ஏதேதோ காட்சிகள் விழுந்தாலும்
விழித் திரையில்
தெரிவது மட்டும் பணத்தின் குறியீடுகள் மட்டுமே.

சோத்து மூட்டைக்கும்
பசிக்கும் !.
வேட்டை நாய் எச்சிலாய் பார்த்த தெல்லாம்
தின்னத் தோன்றும்.
கடைசியாய் நாலு இலைதளைகள்,
பாதி வெந்த்து, வேகாதது என மேய்ந்து விட்டு போகும்.
ஆனால் பத்து பேர் பசியடக்கும் உணவை
எவன் வாயிக்கும் போகமல் வீணடிக்கும்.

காசு தேட கல்லறையை விட்டு கிழம்பும்
இந்த பிண மூட்டை!
மூலை ஒழுது சாலையை மெருகூட்டும் வெயில்
ஆனாலும், இந்த பிணமூட்டை
கொஞ்சமும் கசங்காமல்
புத்துணர்சியுடன் குழு,குழு சவப்பெட்டியில்
பயணம் செய்யும்.
சாலையோர மணிதர்கள் எல்லாம்
அருவருப்பாய் பார்கப்படும்
வேற்று கிரகவாசிகள்.

சோத்து மூட்டைக்கு
சிரிக்கவும் தெரியும்!
பற்கள் சில்லறையாய் மிளிர
வாய் பிடறி மயிரை தொட சிரிக்கும்

ஒவ்வொரு இளிப்பிற்கும் பணம் கிடைக்கும்
என்பதால் இளித்த வாய் மூட மறுக்கும்.
பண மூட்டை வருவதற்கு கொஞ்சம் தயங்கினால்
முதுகுதண்டை வளையமாக்கி
கண்ணில் படுமாறு இளிக்கும்.
வேண்டுமென்றால் பணமூட்டையை
நக்கி இழுக்க கொஞ்சம்
”நா” பசை தடவிகொள்ளும்.

சோத்து மூட்டைக்கு
காதல் வரும்!
பெண் மூட்டைக்குள் ஆண் மூட்டையை
திணித்து இன்னும் சில குட்டி மூட்டைகள்
அவதரிக்கும்.
நிறைய பண மூட்டைகளை அடைகாக்க
வாரிசு சோத்து மூட்டைகள்
அவதரிக்கும்.

சோத்து மூட்டைக்கு
பக்தி வரும்!
இதை கொடு அதை தருகிறேன்,
அதை கொடு இதை தருகிறேன்
கல் சாமியிடம் பேரம் பேசும்.
அரண்டு போன கல் சாமி
இருக்க பொத்தி கொண்டு
கண் திறக்க மறுத்து நிலைத்துவிடும்.
ஆனாலும் என்ன?
கார்பரேட் போலி சாமி கைகொடுக்க
”ஆளுக்கு பாதி” ஒப்பந்தத்துடன்
கருப்பு மூட்டைகளுக்கு
வெள்ளையடிக்கபடும்

பண வேட்டையில்  நிறைவு இல்லாமல்
மீண்டும் கல்லறைக்கு வந்து
அடங்கி கொள்ளும்.
இது “சோத்து மூட்டைகளின்” தினம்.
                                              
- மால்கம் X இராசகம்பீரத்தான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)