தேசிய அளவில் உள் ஒதுக்கீடு விவகாரம் ஆதரவாகவும் எதிராகவும் விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. வட இந்தியாவில் பகுஜன் சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தி, பீம் ஆர்மி முதல் பிராந்திய அமைப்புகள் வரை உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் அறிவுச்சமூகம் உள்ளிட்ட சிறுகுறு தலித் அமைப்புகள் போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றன. இந்த நேரத்தில் உள் ஒதுக்கீட்டை மையச்சரடாகக் கொண்ட ‘கருமிளகுக்கொடி’ வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அம்பேத்கர் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி இந்தியா முழுமையும் 1990களின் தொடக்கத்தில் தலித்துகளின் செயல்பாடுகள் பல பரிணாமங்களில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. அதுவரை தலித்துகளிடம் இருந்து வந்த அரசியல் பார்வைகள், கலை வடிவங்கள் ஆகியன விசாலப்படுத்தப்பட்டு தலித்துகளின் திரட்சி, அதன் தேவை உள்ளிட்டவைகள் வலியுறுத்தப்பட்டன. இதன் விளைவாக உள்ளூர் அளவில் அரசியல், பண்பாட்டு இயக்கங்கள் உருப்பெறுவதும் அதை வழிநடத்தியவர்கள் உள்ளூர் அளவிலான தலைவர்களாகத் தங்களை வளர்த்தெடுத்துக் கொள்வதும் ஒருசேர நடந்தன. உதாரணமாக மஞ்சுநாத் தலைமைத்துவத்தில் பெங்களூரில் உருவான ஆதிஜாம்பவா அருந்ததியா தென்னிந்திய கூட்டமைப்பினைச் சொல்லலாம். 1990 இல் உருவான இவ்வமைப்பு, மாதிகா மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது, நிலைநிறுத்துவது என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த அமைப்போடு ஒருவகையில் தொடர்புடையவராக இருந்த மந்த கிருஷ்ண மாதிகா 1994 இல் ‘மதிமுக இடஒதுக்கீடு சமிதி’ (MRPS - Madiga Reservation Porata Samiti)யை உருவாக்கினார். இது தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டுப் பலன்கள் அனைத்து தலித் உட்சாதிகளுக்கும் சமமாக பங்கிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து களப்பணியாற்றியது. விரைவில் ஊழியர் கூட்டமைப்பு, மாணவர் கூட்டமைப்பு, யுவ சேனா, மதிகா மகிளா சம்க்யா முதலிய துணை அமைப்புகளை உருவாக்கி தம்மைப் பலப்படுத்திக் கொண்டது. கூடவே கலைகள் வழி உரிமைகளை மக்களிடம் விளக்கிச் சொல்வதற்குத் ‘தண்டோரா இயக்கம்’ உருவாக்கப்பட்டது. 2000 களில் இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் தண்டோரா இயக்கத்தில் இணைந்து பணியாற்றினர். கிராமங்களில் ஆதரவாளர்களைப் பெருக்கியது. உள்இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை வழியுறுத்தி மாபெரும் பேரணிகளை நடத்தி அரசின் கவனத்தைப் பெற முயற்சித்தது. சட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தியது. ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. அரசு வழக்கம் போல போலிச் செயல்பாடுகள், வாக்குறுதிகள் வழி தலித்துகளை நம்ப வைத்து ஏமாற்றியது. இந்த வரலாற்றை ஒரு குடும்பத்தின் கதையாகச் சொல்லி இருக்கிறது ‘கருமிளக்குக்கொடி’. டாக்டர் வி.சந்திரசேகர ராவ் தெலுங்கில் எழுதிய இந்நூலை க.மாரியப்பன் தமிழுக்குப் பெயர்த்திருக்கிறார்.
முதல் தலைமுறையில் படித்து அரசுப்பணிக்கு வந்த ஒரு தலித் (ராஜசுந்தரம் என்னும் ராஜய்யா) இந்நாவலின் முதன்மைப்பாத்திரம். அரசியல் வாழ்க்கைக்கு வந்துவிட்ட அவர், அதைத் தக்க வைப்பதற்கும், மேன்மையான பதவிக்காகவும் தொடர்செயல்பாடுகளாக இருக்கும் லாபிகள், அதனால் உருவாகும் மன உளைச்சல் ஆகியவற்றில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார். உண்மையில் அவர் உள்ளூர் அல்தலித்துகள் என்ன மாதிரியான எண்ணத்தில் தம்மை பார்க்கிறார்கள் என்பதை உணராமல் இருப்பதும், உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளாமல் இருப்பதுமான ‘பம்மல்’ மனநிலையே இந்நாவலில் முக்கிய கதைக்கூறாகி இருக்கிறது. ராஜய்யாவுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் கமலா, இளையவன் ரூமி. ராஜய்யாவின் தம்பி கருணா. இவர்களை மையமிட்டே கதை பின்னப்பட்டு இருக்கிறது. கதை முழுவதும் கமலாவின் குரலாய் ஒலிக்கிறது.
ராஜய்யாவின் வாழ்வில் குறையேதும் இல்லை. பலரது நினைவுகளில் நிலைத்துவிட்டவராகவே ராஜய்யா வருகிறார். அவரைக் கொண்டாட மக்கள் இருக்கின்றனர். அரசியல் எதிரிகள் கூட நண்பர்களாகப் பழகுகிறார்கள். ரூமியும் கருணாவும் ராஜய்யாவிடம் இருந்து முற்றிலும் வேறு குணாதிசயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கருணா தொடக்கத்தில் இடதுசாரி இயக்கத்தில் இருந்தவர். மக்களினுடைய நியாயத்தின் பக்கம் மட்டுமே நிற்க வேண்டும் என்னுக் கொள்கை கொண்டவர். பின்னாளில் தண்டோரா இயக்கத்தின் அபிமானியாகிறார். ரூமி தொடக்கத்தில் இருந்தே அப்பாவின் அரசியல் நிலைப்பாடுகளை வெறுத்து வருகிறவன். அதற்காக அப்பாவின் சொல்லொன்னா கொடுமைகளுக்கு ஆளானவன். தண்டோரா இயக்கத்தோடு அணுக்கம் கொண்டவன். இதனால் ராஜய்யா தனது தம்பி, மகன் மீது அளவில்லாத கோபம் கொள்கிறார். தனது அரசியல் வாழ்வில் அவர்களால் வீழ்ச்சி வருமோ என்று ஐயப்படுகிறார். தம்பியின் கொலைக்கும் மகனின் தற்கொலைக்கும் அவரே காரணமாக இருக்கிறார். அவரது பதவிக்கான பகடையாட்டம் ரத்த உறவுகளையே கொன்று முடிக்கிறது. தனது மனைவியையும் ராஜய்யா கொடூரமாகத் தாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் வெளியுலகம் அவரை ரட்சகராக நம்புகிறது. நம்ப வைப்பதற்கான வேலைகளைத் திட்டமிட்டுச் செய்கிறார். அவரைத் தேடி வரும் கட்சித் தொண்டர்கள், பிரமுகர்களிடம் அதீத உன்னதமானவராகக் காட்டிக்கொள்கிறார். அதற்கு முற்றிலும் முரணாக குடும்ப வாழ்வில் நடந்துகொள்கிறார்.
இந்நாவலில் தனித்துவமான தலித் அரசியலையும் அது தம்மை நிறுவிக்கொள்வதற்கான போராட்டங்களையும் குடும்பத்திற்குள்ளேயே உருவாகும் எதிரியையும் உணர்த்துவதற்கு இந்த முரண் தான் பெரும்பங்காற்றியிருக்கிறது. இடையிடையே வாசக மனத்தை நிரப்பக்கூடிய ஏராளமான இடங்களைப் பார்க்க முடிகிறது. உதாரணமாக புறா, மூதாய், ஆறு முதலியன பல இடங்களில் உருவகங்களாக விரிந்திருக்கின்றன. ரூமி புறாவை விரும்பி வளர்க்கிறான். அவை அடுத்தடுத்து இறந்து விழும்போது துடித்துப் போகிறான். பின்னாளில் அந்தப் புறாவைப் போல அவனும் இறந்து போகிறான். விடுதலைக்கும் சமாதானத்திற்கும் குறியீடாகச் சொல்லப்படும் புறாவும் அதை விரும்பி வளர்த்த ரூமியும் இறந்து போவதன் வழி தலித் அரசியல் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை வாசகமனம் எளிதாக பெற்று விடுகிறது.
ஐரோப்பிய இலக்கியத்திலும் பண்பாட்டியும் திராட்சைக் கொடி வளமையின் குறியீடாக வரும். விருந்துகளில் திராட்சை ரசம் பரிமாறுவது கெளரவத்தின் அடையாளமாகப் பாவிக்கப்படும். விவிலியத்தில் வளமையின் குறியீடாக திராட்சைக்கொடி இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். ஒரு திருமண விருந்தில் இயேசு தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றினார் என்பார்கள். அதே மாதிரிதான் திராவிட பண்பாட்டில் மிளகு வளமை, செழிப்பின் குறியீடாக இருக்கிறது. தெலுங்கு, மலையாள இலக்கியங்களின் ஒருவரின் செழிப்பை மிளகுத் தோட்டத்தின் பரப்பளவை வைத்தும் விளக்கிப் புனையும் போக்கு உண்டு. இந்நாவலில் ரூமியின் மரணத்தைக் கண்டு பதறும் அவனது அக்கா கமலா ‘என் கருமிளகுக்கொடி எரிந்து போகிறது. இளந்திராட்சைப் பந்தல் எரிந்து போகிறது’ என்று அதற்றுகிறாள். தலித் அரசியலின் வளமையும் எதிர்கால நம்பிக்கையும் வீழ்த்தப்படுவதை உணர்த்த கருமிளகுக் கொடியும் திராட்சைப் பந்தலும் உருவகங்களாக வருகின்றன. இது மாதிரி இன்னும் நிறையச் சொல்ல முடியும்.
போராட்டங்களை மையமாக வைத்து தமிழில் நிறைய நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. உதாரணமாக, வெண்மணி படுகொலையை விவரிக்கும் ‘குருதிப்புனல்’, அரச பயங்கரவாதத்தைப் பேசும் ‘சோளகர் தொட்டி’, ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணியமாக்கிய இந்திய குடியரசு கட்சியை மையப்படுத்திய ‘வல்லிசை’ முதலியன எதோ ஒருவகையில் மக்களின் போராட்டங்களைப் பதிவு செய்திருக்கின்றன, இவையெல்லாம் தமிழில் எழுதப்பட்டவை. இதே மாதிரியான தலித் அரசியலைப் பேசும் நாவல்கள் இந்திய மொழிகளில் ஏராளமாக உண்டு. அவையெல்லாம் தமிழுக்கு இன்னும் கொண்டு வரப்படவில்லை. அந்தக் குறையை ஓரளவுக்குக் ‘கருமிளகுக்கொடி’ நிவர்த்தி செய்கிறது. இதுமாதிரியான படைப்புகளை மாரியப்பன் தொடர்ந்து தமிழுக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கான தேவைகள் எப்போதும் இருந்தபடியே தான் உள்ளன.
ஆசிரியர் (தெலுங்கில்) |
: |
டாக்டர் வி.சந்திரசேகர ராவ் |
தமிழில் |
: |
க.மாரியப்பன் |
பதிப்பகம் |
: |
காலச்சுவடு |
விலை |
: |
ரூபாய் 250 /- |
வெளியிட்ட ஆண்டு |
: |
செப்டம்பர் 2024 |
- ஞா.குருசாமி