மகிமா சுவாமியைப் பின்பற்றுகிறவர்கள் சிறிய ஆரஞ்சு நிற உடையை இடுப்பில் கட்டுகிறவர்கள். எளிய வாழ்க்கையின் அடையாளம் இந்த ஆரஞ்சு ஆடை.
19 ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியில் மகிமா சுவாமிகள் மகிமா தர்ம வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்துகிறார். அப்போது இருந்த பார்ப்பனிய ஆதிக்கம், இறுக்கமான சாதி அமைப்பு போன்றவற்றை எதிர்த்து இவர்கள் முழுக்க எதிர் அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலும் துறவிகள் என்று சொல்லப்படுகிறது. ஆண்கள் மட்டுமே துறவிகள் ஆக முடியும் என்ற கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். தங்கள் செய்தியைப் பரப்புவதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் அந்தச் செய்தி, அன்புதான் அனைவரையும் இணைக்கும், ஜாதிகள் இல்லை என்று வலியுறுத்துகிறார்கள். இவர்களிலும் பக்தர்கள் இருக்கிறார்கள். முதல்நிலை பக்தர்கள் ஒரு ஆரஞ்சு துணியை இடுப்பில் கட்டி இருக்கிறார்கள். இரண்டாவது பக்தர்கள், மூன்றாவது பக்தர்கள் என்று வருவோர்கள் மரத்தின் பட்டையிலிருந்து வடிவமைக்கப்பட்ட துணிகளை அணிகிறார்கள். அந்த வகையில் அவர்கள் சூரியனை வணங்குவது இவர்களின் முக்கியமான கடமை என்கிறார்கள்.
கோவில்கள் என்பது அறியாமையின் அடையாளம். புத்திசாலிகள் போகும் இடமல்ல அது. உள்ளமே கோவில் என்கிறார்கள். பீகார், அசாம், சட்டிஸ்கர் போன்று ஆறேழு வடகிழக்கு மாநிலங்களில் வலிமையானதாக மகிமாதர்மம் போற்றும் இந்த இயக்கம் இப்போது திசை மாறிவிட்டது.
பழைய நாட்டுப்புற வழிபாட்டு முறை போன்றவற்றை ஞாபகப்படுத்தும் இவர்களின் நம்பிக்கையைத் தொடர்கிறார்கள். பிரபஞ்ச உரிமை, ஆன்மீக நம்பிக்கையில் மனிதர்கள் எல்லோரும் சமமாகவும் இருக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள்.
இவர்கள் சமீபமாய் காவியால் கபளீகரம் செய்யப்படுகிறார்கள்.
எப்படி?
*
பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகிமா சுவாமியைப் பின்பற்றுகிறவர் பீமா பாய் என்ற ஒரு துறவி.. அவர் உலகத்தில் சாதிகள் இரண்டு.. ஆண் சாதி, பெண் சாதி …மூன்றாவது சாதி என்று எதுவுமே இல்லை என்று மக்களை ஒரே சாதியாகக் காட்டியவர். முன்னவர் சொன்ன சாதி உருவ வழிபாடு, பக்தி யாத்திரை முறைகள், சமூகப் படிநிலைகள் காரணமான அரசியல் அதிகாரம் இவற்றை எதிர்த்து இயக்கங்களை நடத்தி இருக்கிறார். இந்த கருத்துக்களை முன்வைத்து வடகிழக்கு மாநிலங்களில் இவருடைய சீடர்கள் எப்போதும் யாத்திரைகளும் பிரச்சாரங்களும் செய்து வருகிறார்கள். அவர்கள் சைவ உணவைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள். சூரியன் அஸ்தமானத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும் போன்ற பழக்கங்களை வலியுறுத்துகிறார்கள். இப்படி மதம் இல்லாத ஒரு மதமாக அவர்கள் உருவாகி வளர்ந்து நிற்கிறார்கள்.
ஆரஞ்சு, காவி உடை தான், அவர்களுக்கு தலை மொட்டை தான்.. வாழ்க்கையில் பிடிப்பு என்பது மற்றொருவரை அரவணைப்பது, அன்பு செலுத்துவது என்று இந்த இயக்கம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கு அந்த இயக்கத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது
இப்போது இந்த இயக்கத்தின் அடிப்படை இந்து தர்மம் தான் என்று திரும்பத் திரும்ப ஆர் எஸ் எஸ் தலைவர்கள் வலியுறுத்துகிறார்கள். அவர்களின் மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். அவர்களை தங்களுடைய நிலைப்பாடுகள் இருந்து மாற்றிக் கொள்வதற்கான நிறைய செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து ஒன்றிய அரசின் மத ரீதியான செயல்பாடுகளும் மற்றும் ஒன்றிய அரசு சார்ந்த கட்சியினரின் தொடர்ந்த கருத்து ரீதியான தாக்குதல்களும், நிதியுதவிகளும் தாக்குப் பிடிக்காமல் இந்த இயக்கம் தன் பழைய தத்துவங்களை எல்லாம் கைவிட்டு இந்து மதம் சார்ந்த ஓர் இயக்கமாக மாறிவிட்டது
இந்த அவலத்தை இயக்குனர் டேபா ரஞ்சன் என்ற ஒடிய இயக்குனர் ஆவணப் படமாக எடுத்திருக்கிறார்.
சமீபத்தில் ஆர் பி அமுதன் ஏற்பாடு செய்திருந்த மதுரை குறும்பட ஆவணப்பட விழாவில் இந்தப் படத்தை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.
தொடர்ந்த அழுத்தங்கள் மூலம் ஒரு சாதாரண இயக்கம் நீர்த்துப் போய் இருப்பதையும், இந்துத்துவா இயக்கப் போக்குக்குள் வந்து விட்டதையும் காண முடிந்தது. தங்களை கடவுளாக நினைத்துக் கொள்வதற்கு எதிராக சாதாரண மக்களை கடவுளாக அழைக்கச் சொல்லி மகிழ அவர்கள் வலியுறுத்துகிறவர்கள், இந்து மதம் சார்ந்த அழுத்தங்களால் புதையுண்டு போகிறார்கள். ஆடு மேய்ப்பராக இருந்தவர் பார்வையில்லாமல் தடுமாற்றம் காரணமாக கிணற்றில் விழுந்து விட்டார். அந்த இடம் கோவிலாக விட்டது, கும்பிடுகிறார்கள் என்று ஒருவர் இதில் பேசுகிறார். ஆனால் கோவிலுக்கு எதிரானவர்கள் என்கிறார்கள். இதில் உள்ள ஒருவர் பற்றிய குறிப்பு அது.
ஆடு மேய்ப்பவர்கள், விவசாயிகள் என பலர் இந்த ஆவணப் படத்தில் பேட்டி தந்திருக்கிறார்கள். அந்தப் பேட்டிகளில் அவர்கள் வலியுறுத்தும் விஷயம் சகோதரத்துவம், அன்பு என்ற அரவணைப்புதான். ஆனால் இன்றைக்கு இந்த இயக்கம் இந்து மதவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. பலருக்கு அதிர்ச்சியை தரக்கூடிய விஷயமாகத்தான் இருக்கிறது. அந்த அதிர்ச்சியை இந்த ஆவணப்படம் சொல்கிறது.
இது போல் இந்துத்துவாக்குள் தள்ளப்பட்ட பல இயக்கப்போக்குகளை இனி நாம் பார்க்க இருப்பதன் துயர அடையாளம் இப்படம் . எங்கெங்கெல்லாம் இருந்து இதற்கான அழுத்தங்கள் கிடைக்கின்றன என்பதை நாமும் சமீபமாய் நிறையத் தெரிந்து கொள்கிறோம்.
இதன் இயக்குனர் டேபா ரஞ்சன் இந்துத்துவாவாதிகளின் கடுமையான பார்வையில் சிக்கியிருப்பவர். ஒடிய ஆதிவாசிகள், சுரங்கத் தொழிலில் சுரண்டல், விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகள் சார்ந்து முன்னரே பல முறை காவல்துறையின் அச்சுறுத்தலுக்கும் ஆளானவர், கைது செய்யப்பட்டவரும் கூட
- சுப்ரபாரதிமணியன்