பொதுவாக எழுத்தை புத்தகமாக்குவது எப்போதுமே சவாலான ஒன்று. அந்த வகையில் இந்த வருடத்தின் நான்கு சவால்கள். இதுவரை மொத்தமாக 14 சவால்கள். சவால்களில் வென்று விட்டதாகவே நம்புகிறேன்... அடுத்த வருடம் 5 என்ற இலக்கோடு.
நான் எப்போதும் சொல்வது தான். எனது வாழ்வு நண்பர்களால் ஆனது. அவர்கள் இன்றி இந்த நிகழ்வு சாத்தியம் இல்லை. அந்த வகையில் என் நண்பர்கள் அன்பர்கள் தோழர்கள் நண்பர்களின் நண்பர்கள் உறவுகள் குடும்பம் அனைவரும் நிகழ்வுக்கு வந்திருந்து சிறப்பித்தார்கள்.
நிகழ்வை மலை போல நின்று நடத்திய தம்பி காதலாரா... அன்பன் விவெ ... டியர் சுகன் சேகுவேரா... தங்கை சரண்... தோழர் வேம்பு.... கவிஜி படைப்புலகம் 2024 ன் சிறகுகள். இவன் வானம் மிதந்தது.நெல்லையில் இருந்தாலும்.. எங்களில் இருந்தார் எங்கள் அமர். வெளிநாட்டில் இருந்தாலும் எப்போதும் நினைவில் இருந்தார் தோழர் மஹா பர்வின். கிருஷ்ணகிரியில் இருந்தாலும் அரங்கத்தில் தான் இருந்தார் இந்த மயிலைக் கொண்டாடும் பேரன்பர் பிரபு சங்கர். உடலளவில் நம்மோடு இல்லை என்றாலும் நினைவோடும் கவிதையோடும் நம்மோடு இருந்த கிறிஸ்டிக்காவை இந்த அறிவுக்குட்டியால் உணர முடிந்தது.
இருத்தலே பிரதானம். இருப்போரே நமக்கு முக்கியம். குறிப்பிட்ட நேரத்தில் விழா தொடங்கியது. நண்பர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். MSN அரங்கம் நமக்காகவே அமைந்திருப்பது போன்று அப்படி ஒரு கனக்கச்சிதம். அரங்க ஊழியர்களே அத்தனை வேலைகளையும் செய்து விட்டார்கள். பேனர் அடிப்பது வரை. ஓனர் தங்கமானவர்.
நிகழ்வை அதியமான் குழுமத்தில் ஒருங்கிணைத்து நடத்தி தொகுத்து வழங்கினான் தம்பி காதலாரா. மிக அழகாக கேமரா பண்ணி நிகழ்வை காலத்தில் நிறுத்தினார் எங்கள் அன்பு மீசை- ஜெயபால் சார்.
தங்கை சரண் வரவேற்புரை நல்க... முதலில் நான் மேடை ஏறினேன். பிறகு பேச இருப்போர் ஏறினார்கள். எதிரே அரங்கம் கிட்டத்தட்ட நிறைந்து விட்டிருந்தது. இலக்கிய நண்பர்களை விட என் இதய நண்பர்கள் நிறைய இருந்தார்கள். குடும்ப உறுப்பினர்கள் அடுத்த கதைகளில் போட்டு தாளித்து விடும் சந்தர்ப்பத்தை எனக்கு கொடுக்காமல் வந்து விட்டிருந்தார்கள்.
நிகழ்வை தலைமை தாங்கி தலைமை உரையை நிகழ்த்தினார் கவிஞர் காமு அவர்கள். வழக்கம் போல சிரிப்பும் சிலிர்ப்புமாக காமு சாரின் பேச்சில் அரங்கம் நிகழ்வில் தன்னை இலகுவாக இணைத்துக் கொண்டது. வாய் நிறைந்த பேச்சும் இதயம் நிறைந்த மூச்சுமாக சுவை பட பேசினார். ஆலமர தலைமையின் கீழ் ஒரு கோல மயில் போல எனை உணர்ந்தேன்.
அடுத்து.... வாழ்த்துரை பேசியது அன்பன் விவெ. குட்டிக்கதை சொல்லி சிரித்துக் கொண்டே பேசியது சிக்கனம் என்றாலும் அக்கணத்தில் வனம் சூட்டியது போல இருந்தது. காட்டில் யாராம்... நாமே என்றது மத யானை அல்ல. மன யானை.
அடுத்து துருவன் பாலா சாரும் வாழ்த்துரைக்கு தான் திருப்பூரில் இருந்து வந்திருந்தார். சற்றே பெரிய வாழ்த்துரை. இன்னும் கொஞ்சம் வாழச் செய்யும் வலிமையுரை. கவிஜியை கம்யூனிஸ்ட் என்றதும்... மார்க்சியவாதி என்றதும் மனம் சிலிர்க்க ஒப்புக்கொண்டது அனிச்சை. பிறந்ததில் இருந்தே இடது சிந்தனையோடு தான் இருந்திருக்கிறேன் என்பதை எப்போதோ உணர்ந்திருக்கிறேன். அதை அவர் சொல்கையில் எனது கொள்கையின் பிடி இன்னும் இறுகியது. இறுதியில் பாட்டோடு முடித்தார். இடையே ஒரு முடிச்சும் அவிழ்த்தார். கவிஜிக்கான உயரமும் அங்கீகாரமும் இன்னும் எங்கேயோ வழி தடுமாறுவதை சுட்டிக்காட்டினார். அதை உணர்ந்தே இருக்கிறோம். இலக்கிய கள்ள மௌனம் சரிக்கு சமகாக நம்மை சூழ்ந்திருப்பதை காலம் தான் கலைக்க வேண்டும். களைப்பின்றி உழைத்துக் கொண்டிருக்கும் நாம் என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதாக தொடர்ந்து எழுதிக் கொண்டுதானிருக்கிறோம். இருப்போம்.
அடுத்து நூல்களின் அறிமுக உரை. ஒரே உரையில் நான்கு கத்தி போல. நடுவில் ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்தார் சிவப்பு சட்டையில் வந்திருந்த காமு சார்.
பச்சை மலைப் பூவும் உச்சி மலைத் தேனும் - காதலாரா / மினுக் மிட்டாய்கள்- வேம்பு / சொர்ணபுரி - சன்மது / சினிமா உலக சினிமா - கங்காதர் - நால்வருமே அவரவர் மொழியில் பேசினார்கள். தாளோடு மேடையேறிய நூல்களுக்கு சிறகு முளைத்ததாக தான் நம்பினேன். சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருந்த போதிலும் சித்திரம் சிதறிய சுவற்றை நான்கு கைகளும் அழகாய் பிடித்து தூக்கி காட்டினார்கள். நடுவே எழுத்தாணியோடு நான் அழகாய் தெரிந்தேன். அவரவர் வேலையை தள்ளி வைத்து விட்டு என் ஒருவனுக்கு இசை கூட்டும் வேலையை செய்த இதயங்களை கொண்டாடுகிறேன்.
தம்பி காதலாரா... தொகுப்புரையும் செய்து கொண்டு நூல் பற்றியும் உரையாடியது வலிமை. கவிதைகளை எடுத்தாளும் வல்லமை அபாரம். அவன் மொழியில் சங்கம் கலந்து கட்டிய ஆட்டம் என மேடையை ஆரம்பத்தில் இருந்தே அலேக்காக தூக்கி கதகளி ஆடினான் என்றால் தகும். காதலாரா பேச்சின் இறுதி நிமிடங்களில் மின்சாரம் போய் விட அப்போதும் தன் சாரம் குறையாமல் செல்போன் டார்ச்சை கொண்டு டவர் ஏறிக் கொண்டிருந்தான். மொத்த நிகழ்வுக்கும் இரண்டு தோள்கள் தந்தான். இரண்டிலும் பேரன்பு.
தோழர் வேம்பு சிறுகதைகளை பேசி பேசியே சிறந்த கதைகளாக ஆக்கி விட்டார். ஒரு கட்டத்தில் அருள் வந்தாடுவது போல இருந்தது அவரின் உடல்மொழி. கவிஜியின் கதைக்கும் எழுதிய கவிஜிக்கும் ஒரு சமநிலை கொடுத்து பேச்சைக் கொண்டு சென்றது சிறப்பு. நண்பன் வள்ளுவோடு இணைத்து பேசுகையில் உள்ளே படபடப்பு நமக்கு என்றாலும்.. அந்த வேகத்தின் ஒப்பீடு ரசிக்கும்படியாக இருந்தது. நம்மை நாமே பெருமைப்பட்டுக் கொள்வதில் என்ன இருக்கிறது. சக மனிதர்கள் கொண்டாடுகையில் தான் பெருமையின் பொருள் பொருள்படும். சுய பெருமையில் இருந்து தொலை தூரத்தில் மலை உச்சியில் தவம் கொள்ளும் ஊர் தரும் பெருமை. சுயபெருமை உளறும். உளறித் தட்டும். கவனச் சிதறலில் சிக்கி சீக்கி அடிக்கும். ஆனால் வேம்புவின் சொற்களில் ஒரு கலைஞனுக்கு தரும் மரியாதை இருந்தது. அவன் நல் கதைகளுக்கு சூட்டும் கிரீடம் இருந்தது. தன்னை மறைத்துக் கொண்டு எடுத்த காரியத்தை முன் வைத்த அவரை பெருமையோடு பார்க்கிறேன். சிரித்துக் கொண்டே பேசுகையில் அரங்கத்தின் இதயங்களில் அடுத்தடுத்து சென்று அமர்ந்து விட்டார். இந்த எழுத்தாளனிடம் கோபம் கொள்ளாதீர்கள். உங்களுக்கு தான் நட்டம் என்றார். கொப்பளிக்கும் கண்ணீரை அடக்கிக் கொண்டேன்.
நண்பர் சன்மது சொர்ணபுரி காம்பவுண்டில் மிக அழகாக சுற்றினார். இரவும் மர்மமுமாக இருந்த கதையின் போக்கில் நின்று நிதானமாக தியானம் செய்தார். தியானம் கடக்க கடக்க நேரம் ஓடி விட்டதென்பதால்... கொஞ்சம் சீக்கிரமாகவே முடித்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. சொர்ணபுரிக்குள் அலையும் காற்றுக்கு சோதனை வந்த தருணம் தோழர் கங்காதர்... சினிமா உலக சினிமா நூல் குறித்து பேச தொடங்கிவிட்டார். தோழர் கங்காதர் சினிமாவை எத்தனை நேசிக்கிறார் என்று அறிவேன். அதன் உயரத்தையும் ஆழத்தையும் அவர் பேச்சிலும் கண்டோம். இயல்பாக பேசுவது போல தான் அவரின் மேடை பேச்சும் இருந்தது. அது நெருக்கத்தை கொடுத்தது. எந்தவித மன கிளர்ச்சிக்கும் உள்ளாகாத அமைதியோடு நூலுக்குள் சென்றது நுட்பம். சினிமா எப்படி மனிதனை பண்படுத்துகிறது... எப்படி அதன் வழியாக கற்றல் நடைபெறுகிறது என மெல்லிய வேகத்தில் மிக கவனமாக பேசி விட்டு சென்றார். உண்மைக்குள் உணர்வு ஆழ்கடல் அமைதியிலும் வெளிப்படும் என்று உணர்ந்தோம்.
அடுத்து ஏற்புரை வழங்கினேன். மேடை சோம்பேறித்தனம் எனக்கு எப்போதுமே ஏற்புரையில் வந்து விடும். அதற்காகவே எழுதி வைத்துக் கொள்வது. படிப்பது போல படிப்பது.. அப்படியே பேசுவது போல பேசுவது... இரண்டுக்கும் இடையே போர்டியத்தை இறுக்கி பிடித்துக் கொள்வது என்று 10 நிமிடமும் எந்த சிந்தனையும் இல்லாத தியான நிலைக்குள் நின்று விட்டேன். அது தான் அந்தந்த நூல்களை பற்றி அவரவர் பேசி விட்டார்களே. நாம் எதற்கு பேச வேண்டும் என்று எப்போதுமே நினைப்பதுண்டு. இருந்தும் சுவை கூடிய உணவின் கடைசி வழிப்பை போல சில விஷயங்களைக் குறிப்பிட்டேன்.
முகநூலில் எழுதிய சின்ன சின்ன கவிதைகளைப் பார்த்துட்டு அகன் சார்.. "குரு இதெல்லாம் கொஞ்சம் தொகுத்து அனுப்பு.. நூலாக்கிடலாம்" என்றார். அவ்வாறே விரைவு விழைவில் நிகழ்ந்த நூல் "பச்சை மலைப் பூவும் உச்சி மலைத் தேனும்". மூன்று வரி கவிதைகள்.. பிறகு நான்கு ஐந்து ஆறு என்று 20 வரி வரை செல்லும் ஒரு வகைமை இதில் அதுவாகவே அமைந்து விட்டது. நூலுக்கான அட்டைப்படம் நமக்கு பிடிச்ச மேல்முடியில் மூச்சுணர்ந்து அப்படியே பிரமித்து நிற்கும் போது நண்பன் கமல் எடுத்த போட்டோ. "பச்சை மலை பூவு இது உச்சி மலைத் தேனு" வரிகளை இதயம் முணுமுணுத்தது.
"மினுக் மிட்டாய்கள்" நூலில் இந்த தலைப்பில் இருக்கும் கதை ஒரு ஜென். எனக்கு நெருக்கமான கதை. அதனால் தான் அந்த தலைப்பையே நூலுக்கும் வைத்தது. இருபது கதைகளும் இருபது வாழ்வு. வேறு வேறு மனிதர்களிடம் இருந்து வேறு வேறு உலகம் சுழற்றும் கதைகள்.
அடுத்து சொர்ணபுரி- நாவலின் முடிச்சுகளை மீண்டும் கொஞ்சம் சேர்த்து போட்டேன்.
பணம் இருக்கறவன்.. பணம் இல்லாதவன்... மேல இருக்கறவன் கீழ இருக்கறவன்னு காலங்காலமா இருக்கற இந்த கோட்டில் நடக்கும் கதை. இந்த நாவலின் விதை 8 வருசத்துக்கு முன்ன விழுந்தது. அது மெல்ல மெல்ல வளர்ந்து நூல் ஆவதற்கு இத்தனை காலம் ஆகியிருக்கிறது. கனிந்த பழம் விழுந்தே தீரும் இல்லையா. அப்படி.. சொர்ணபுரி தன்னை விதைத்துக் கொண்டது. இது தொடர் கதையாக இருக்கும் போதே நண்பர்கள் படித்து தொடர்ந்து உற்சாகம் கொடுத்தார்கள். அந்த உற்சாகம் தான் இந்த நாவலை அவ்ளோ சீக்கிரம் எழுத வெச்சுது. ஒரே இரவில் நடக்கும் கதை. கொள்ளை... கொலை.. காதல்... வன்மம்... AI... தங்க மரம் புரட்சி துப்பாக்கின்னு போகிற கதை. படிக்க எடுத்துட்டா வைக்க முடியாது. அடிச்சிட்டு போயிட்டே இருக்கும். நான் உத்திரவாதம்.
அடுத்து சினிமா உலக சினிமா
தகவு இதழில் தொடர் கட்டுரையாக 53 மாதங்களைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டுரைகளில் முதல் 25 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
சினிமாவுக்கும் நமக்குமான உறவு நண்பர்களுக்கு தெரியும். எனக்கு சினிமா தான் முதல்ல. அதுல இருந்து தான் எனக்கு இலக்கியம் வந்துச்சு. முதல்ல அகிரா தான். அப்புறம் தான் தாஸ்தாவெஸ்கி. முதல்ல ஹிட்ச் ஹாக். அப்புறம் தான் டால்ஸ்டாய். சே வை முழுசா அறிமுகம் செய்ததே சினிமா தான். அவர் மூலமா தான் நெருடா தெரிய வர்றார். சினிமா குடுத்த ரெபெரென்ஸ்ல தான் தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடி கவிதையே தெரிய வந்துச்சு. வீட்ல ரெண்டு மூட்டை டிவிடி வெச்சிருக்கேன். OTT வந்தப்புறம் இப்போ டிவிடி அதிகமா வாங்கறது இல்ல. உள்ளூர் சினிமால ஆரம்பிச்சாலும்.. உலக சினிமா நம்மள இன்னும் தேடல் உள்ளவனா மாத்துச்சு. அதுல கிடைச்ச பொக்கிஷம் தான் இந்த சினிமா உலக சினிமா நூல்.
நான்கு நூல்களின் பதிப்பகங்கள் ஒரு துளிக் கவிதை, ஒரு துளிக் கவிதை, வேரல், படைப்பு -க்கு நன்றிகளை சொல்லிக் கொள்ளலாம். நிறைய பேசி விட்டோம். இனி படிக்க விடுவோம்.
அடுத்து நன்றியுரை வழங்கினான் சுகன் சேகுவேரா. நன்றியுரையா அது. பின் டிராப் சைலன்ட்க்கு அரங்கம் சென்றது. 15 நிமிடம் சரவெடியாக முன்னே பேசியவர்களை எல்லாம் சரித்து விட்டான் என்றே நம்ப செய்தது. அத்தனை அடுக்கு. அத்தனை ஆழம். படிப்பின் தேவையை... ஒரு நூல் என்ன செய்யும் என்ற பார்வையை... முத்து முத்தாய் எடுத்து வீசினான். கலை பாதிக்கப்பட்டவன் பக்கம் இருக்க வேண்டும் என்ற நோக்கும்... கவிஜி எழுத்துக்களில் சிவப்பு இல்லை என்ற பொத்தாம் பொது கருத்தை பிளந்து அதற்கு மேலும் சிவப்பே பூசியும்... கொடுத்த நேரம் குறைவு. செய்த வேலை நிறைவு. நிஜத்தின் பக்கம் இருப்பவனுக்கு சொற்கள் தானாக கொட்டும். கொட்டியது. சில இடங்களில் அருவியாக. சில இடங்களில் தேளாக. முன்னே ஆங்காங்கே சில இடங்களில் தவற விட்ட புரிதல்களை மிக அழகாக லாவகமாக சொல்லி நிகழ்வை சமநிலைப் படுத்தினான். செய்ய வேண்டியவர்கள் செய்ய தவறினால்.. அறிவின் வினை தானாக அச்செயலை ஆற்றும். உளி சிறுசு தான். மலையை சாய்ச்சிரும். சுகன் சேகுவேரா எனும் வெடிகுண்டு இனி மேடைகளில் முழங்கும்.
வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு நண்பர்கள் கவிக்குயில், இந்து ராம், அறிஞர் கோமளவள்ளி... துரை விஜய், பிரபு, கோபி, கவி, கமல்.... கிறிஸ்ட்டிக்காவின் "கிறிஸ்டினா அருள்மொழி கவிதைகள்" நூலை பரிசளித்து சிறப்பு செய்தார்கள்.
வந்திருந்த அனைவருக்கும் மனம் நிறைந்த இதயம் நெகிழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்வு நல்லபடியாக 1.30 க்கு திட்டமிட்டபடி நிறைவடைந்தது. மதியம் வரை வர வேண்டாம் என்ற வேண்டுதலை மழை நிறைவேற்றி இருந்தது. விரிக்காத குடையோடு கவிதை காட்டினேன்.
நன்றி வணக்கம்
எழுதுவதால் வாழ்கிறேன். எழுதுவதற்கே வாழ்கிறேன்.
- கவிஜி