தரைப்பரப்பின் மேற்பகுதியில் காணப்படும் பெரும் தாக்கத்தால் உண்டான பள்ளத்தைக் கொண்டிருப்பதால் சனியின் நிலவுகளில் ஒன்று, ஸ்டார் வார்ஸ் படங்களில் ஒன்றில் வரும் இறந்த நட்சத்திரம் போல காணப்படுகிறது. அதன் உடைக்கப்பட்ட மேலோட்டிற்கு கீழ் ஒரு கடல் மறைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.saturn moon

(Photograph: Frédéric Durillon/Animea Studio/Observatoire de Paris/IMCCE)

சனியின் நிலவில் கடல்

எதிர்பாராத இந்த கண்டுபிடிப்பு 250 மைல் அகலமுடய பனிக்கட்டி பந்து போன்ற மிமாஸ் (Mimas) என்ற சனியின் இந்த சிறிய நிலவு சனிக்கோளின் டைட்டன் (Titan), என்சலாடஸ் (Enceladus) மற்றும் வியாழனின் ஈரோப்பா (Europa), கனிமீட் ( Ganymede) ஆகிய தனிச்சிறப்பு மிக்க நிலவுகளின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இணைத்துள்ளது.

இந்நிலவுகளின் தரைப்பரப்பிற்கு கீழ் கடல்கள் உள்ளன. “இக்கண்டுபிடிப்பு வியப்பூட்டும் ஒன்று. மிமாஸ் நிலவின் பரப்பிற்கு கீழ் ஒரு கடல் மறைந்துள்ளது தெரியாத விதத்தில் அமைந்துள்ளது. இது போன்ற அமைப்பை உடைய நிலவு மிக அரிது” என்று பிரான்ஸ் வானியல் மையத்தின் (Observatoire de Paris) விஞ்ஞானி வலேரி லேனி (Valéry Lainey) கூறுகிறார்.

இதன் தனித்துவமான இந்த பண்பிற்கு பனியால் மறைக்கப்பட்ட நீளமான மேலோட்டை பெற்றிருப்பது அல்லது இதனுள் அமைந்திருக்கும் ஒரு உட்கடல் அதன் வெளிப்பகுதியை சுதந்திரமாக மாற அனுமதித்திருப்பது காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நாசாவின் கசினி (Cassini) ஆய்வுக்கலனால் அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான பிம்பங்களை பகுப்பாய்வு செய்தபோது ஆய்வுக்குழுவினர் ராட்சச வாயுக் கோளான சனியை வளையமிட்டு சுற்றி வரும் இந்நிலவின் துல்லியமான சுழலும் வேகத்தையும் சுற்று வட்டப் பாதை இயக்கத்தையும் மறுகட்டமைப்பு செய்து ஆராய்ந்தனர்.

மிமாஸின் கடினமான உள்ளமைப்பையும் இதன் வேகத்தையும் சரியான முறையில் விளக்க வழியில்லை என்று லேனி கூறுகிறார். 15 மைல் கனமுடைய பனிப்படலத்திற்கு கீழ் கடலின் அடித்தட்டுக்கு அருகாமை பகுதியில் பல டிகிரி செல்சியர்ஸ் வெப்பமுள்ள, 45 மைல் ஆழமுள்ள கடல் மறைந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த கடலின் கன அளவு மிமாஸின் கன அளவில் பாதிக்கும் மேல் உள்ளது.

மிமாசில் உயிரினங்கள்

இது குறித்த ஆய்வுக் கட்டுரை நேச்சர் (Nature) இதழில் வெளிவந்துள்ளது. வானியல் அளவுகளின்படி மற்றவற்றுடன் ஒப்பிடும்போது மிமாஸின் கடல், கடந்த 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்பதால் இது ஒரு இளம் வயதுடைய கடலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சனிக் கோளின் வலிமையான அலைகள் பெரும் வேகத்துடன் இந்த நிலவின் மேற்பரப்பை ஒரு ச்குவாஷ் பந்து போல மசாஜ் செய்து வெப்பமுடையதாக மாற்றியுள்ளது.

சூடான இப்பரப்பு அதற்கு மேலிருந்த பனிப்படலத்தால் உருக்கப்பட்டது. இது அங்கு ஒரு கடலை உருவாக்கியது. இதனால் மிமாஸ் நிலவின் மேற்பரப்பு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக ஒரு ராட்சச பள்ளம் உருவானது. இது 1789ல் முதல்முறையாக இந்நிலவை அடையாளம் கண்ட வில்லியம் ஹெர்ஷல் என்ற விண்வெளியியலாளரின் நினைவாக ஹெர்ஷல் பள்ளம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சனி மற்றும் வியாழனின் நிலவுகளில் கடல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்படுவது விண்வெளியியலாளர்களிடையில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலவுகளில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை ஆராய பல விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. வியாழனின் என்சலாடஸ் நிலவில் நூற்றுக்கும் மேற்பட்ட வெந்நீர் ஊற்றுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கு நீராவி வெடிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தரை மேற்பரப்பில் விரிசல்கள் உருவாகியுள்ளது. இந்த சின்னஞ்சிறிய நிலவில் முன்பு ஒருவேளை உயிரினங்கள் தோன்றியிருந்தால் அந்நிய இடங்களில் இருந்து வந்திருக்கக் கூடிய நுண்ணுயிரி இனங்கள் வெந்நீர் ஊற்றுகளில் இருந்து வரும் புகைப்படலத்தால் வெளியே தள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் மிமாஸ் நிலவுக்குச் செல்லும் ஆய்வுக்கலன்கள் அதைக் கண்டுபிடிக்கும்.

“வெப்பமான பாறைகளுடன் தொடர்புடைய நீர் இருப்பதால் மிமாசில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூற்றை மறுக்கமுடியாது. ஆனால் மறைந்திருக்கும் கடல் ஒரு சில பத்தாண்டுகளுக்கு முன்பு மட்டுமே தோன்றியதாக இருந்தால் உயிரினங்கள் உருவாக வாய்ப்பில்லை. இதன் வயது பற்றி இன்னும் கண்டறிய முடியவில்லை என்று லேனி கூறுகிறார்.

நம்பிக்கையூட்டும் ஈரோப்பாவும் என்சலாடஸும்

“இந்நிலவில் கடல் தரைப்பரப்பிற்கு கீழ் உள்ளது என்றாலும் இது பூமிக்கு அப்பால் உயிர்களை தேட பெரிதும் உதவும். உயிர்கள் வாழ சாத்தியமான உட்கடலுக்கும் தரைக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. என்சலாடஸில் கண்டுபிடிக்கப்பட்டது போல இங்கு உயிர்கள் உள்ளனவா என்று கண்டரியலாம். ஈரோப்பாவிலும் இது குறித்த ஆய்வுகள் நடக்கின்றன” என்று ஓப்பன் (Open) பல்கலைக்கழக புவிக்கோள் அறிவியல் பிரிவு பேராசிரியர் டேவிட் ராதரி (David Rothery) கூறுகிறார்.

இந்த நிலவில் உயிர்கள் வாழும் வாய்ப்பு இருந்தால் அது 20 கிலோமீட்டர் அளவுள்ள உடையாத பனிக்கட்டியால் மூடப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த கடல் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே உருவானது என்றால் உயிர்கள் தோன்ற அது போதுமான காலமாக இருக்காது. ஈரோப்பா மற்றும் என்சலாடஸ் நிலவுகள் மிமாஸை விட நம்பிக்கையூட்டும் நிலவுகளாக உள்ளன என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பூமிக்கு அப்பால் சூரிய குடும்பத்தில் உள்ள பிற கோல்கள், நிலவுகளில் வாழ இயலுமா என்ற விஞ்ஞானிகளின் தேடலுக்கு மிமாஸ் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/feb/07/saturn-death-star-moon-mimas-hidden-ocean?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்