நிலவின் ஒரு துண்டு என்று கருதப்பட்ட, பூமிக்கு வந்த மினி நிலா பூமியை விட்டு மறைகிறது. சூரியனை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியுள்ள, ஸ்கூல் பஸ் அளவுக்கு இருக்கும் 2024 பிடி5 (2024 PT5) என்ற விண்கல் இப்போது பூமியில் இருந்து 2 மில்லியன் மைல் / 3.2 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது பூமியின் மினி நிலா என்று வர்ணிக்கப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பிறகே மறையும் இயல்புடைய விண்கல் இது.

விண்கல் மோதிய நிலவு

கடந்த 2024 செப்டம்பர் முதல் விண்வெளியில் உள்ள இது, சூரியனை நோக்கிய தன் மீள் பயணத்திற்கு இப்போது தயாராகி வருகிறது. மீண்டும் இது 2055ல் பூமிக்கு வருகை தரும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலவில் ஒரு ராட்சத விண் பாறை மோதியதால் உருவான இது ஒரு பெரிய பாறைத்துண்டு என்று விண்வெளியியலாளர்கள் கருதுகின்றனர். இது இப்போது நிலவில் இருந்து ஒன்பது மடங்கு தொலைவில் உள்ளது.

இதுவரை இந்த விண்கல் பூமியின் ஈர்ப்புவிசை மண்டலத்திற்கு அருகில் வரவில்லை. என்றாலும் விடைபெற்றுச் செல்லும் இதன் பயணத்தின்போது இது பூமிக்கு நெருக்கமாக 1.1 மில்லியன் மைல் தொலைவுக்கு அருகாமையில் வருகை தரும். ஜனவரி 2025ல் சூரியனின் ஈர்ப்பு விசை ஆழ் விண்வெளிப் பரப்பிற்கு இதை வலிந்து இழுக்கும் முன் இதை ஆராய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

33 அடி அகலம் உள்ள இதன் சிறிய அளவும் தொலைவும் இதை ஒருபோதும் வெறும் கண்களால் மனிதரால் பார்க்க முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. வலிமை வாய்ந்த தொலைநோக்கிகளால் மட்டுமே இந்த வான் பொருளை பார்க்க முடியும். இதை முதல்முறையாக கடந்த ஆகஸ்ட் 2024ல் தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ஹவாய் பல்கலைக்கழகத்தின் தொலைநோக்கி கண்டுபிடித்தது.

நாசா இதை தனது ஆழ் விண்வெளி வலையமைப்பின் (Deep Space Network) உதவியுடன் கண்காணித்து வருகிறது. அப்போது முதல் இது பூமியின் ஒரு பங்காளியாக உள்ளது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளில்லை என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

“பூமி மற்றும் இதன் இயக்கத்தை ஒப்பிட்டு பார்த்து ஒற்றுமைகளை ஆராய்ந்ததில் நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு விண்கல் மோதி ஏற்பட்ட தாக்கத்தால் நிலவின் மேற்பரப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு ராட்சத பாறை இது என்று நாசாவின் புவி அருகு பொருட்கள் மைய (NEOs) விஞ்ஞானிகள் கருதுகின்றனர்” என்று விண்வெளி நிறுவனத்தின் கோள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத் திட்டப் பகுப்பாய்வாளர் ஜாஷ் ஹாண்டல் (Josh Handal) குறிப்பிடுகிறார்.

பூமியை விட்டு அகலும் மினி நிலா

“வரலாற்று நிகழ்வுகளாக கருதப்படும் ஏவு வாகனங்களின் பகுதிகள் பூமியின் சுற்றுவட்டப்பாதை போன்ற இத்தகைய பாதைகளில் காணப்படுகின்றன. ஆனால் இந்த விண்கல்லின் இயக்கம் பற்றிய பகுப்பாய்விற்குப் பிறகு 2024 பிடி5 இயற்கையாகத் தோன்றியதே என்று நம்பப்படுகிறது. இது கடந்த இரண்டு மாதங்களாக பூமியை குதிரை லாட வடிவ வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.

"சூரியனின் ஈர்ப்புவிசை முழுமையான தாக்கம் செலுத்தும்போது இதன் விசை அதிவேகமாக மாறும். கடந்த 2024 செப்டம்பரில் இருந்ததை விட இதன் வேகம் ஜனவரி 2025ல் இரண்டு மடங்காக அதிகரிக்கும்” என்று மாட்ரிட் கம்ப்ளூட்டன்ஸ் (Complutense) பல்கலைக்கழக விண்வெளி இயற்பியலாளர் ரவுல் டெ லாஃப் வெண்டே மார்க்கோஸ் (Raul de la Fuente Marcos) அசோசியேட்டட் ப்ரஸ் நிறுவனத்திடம் கூறினார்.

கலிபோர்னியா மொஹாவி (Mojave) பாலைவனத்தில் செயல்படும் கோல்டு ஸ்டோன் சூரிய மண்டல ரேடார் ஆண்டெனாவின் (Goldstone solar system radar antenna) உதவியுடன் நாசா ஜனவரி 2025ல் ஒரு வார காலம் இந்த விண்கல்லின் பாதையைக் கண்காணிக்கும். சூரியனை வலம் வந்த பிறகு 2055ல் இந்த விண்கல் திரும்பி வரும்போது மீண்டும் ஒரு முறை இது பூமியை தற்காலிகமாக பகுதியளவு மடிப்புடன் சுற்றி வரும்.

விண்வெளியின் ஆழ் பரப்பில் இருந்து வரும் இத்தகைய அதிசய வான் பொருட்கள் சூரியன் மற்றும் பூமியின் வரலாற்றை அறிய நமக்கு உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/nov/25/earth-mini-moon-to-disappear?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்