விண்வெளி வரலாற்றில் மிகப் புதுமையான, வழக்கத்திற்கு மாறான மரத்தாலான செயற்கைக்கோளை ஜப்பானிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். லிக்னோ செயற்கைக்கோள் விண்கலன் (LignoSat satellite) என்ற இந்த சிறிய செயற்கைக்கோள் மக்னோலியா (Magnolia) வகையைச் சேர்ந்த மரத்தால் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் அமெரிக்க ஏவுவாகனத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ள இதன் நிலைத்தன்மையும், விரிசல்கள் ஏற்படாமல் இருக்கும் பண்பும் பன்னாட்டு விண்வெளி ஆய்வுநிலையத்தில் (ISS) பரிசோதித்து கண்டறியப்பட்டது.

எல்லா செயற்கைக்கோள்களும் இப்போது உலோகத்தால் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் இவற்றுக்கு மாற்றாக சூழலிற்கு நட்புடைய கலன்களை உருவாக்கும் நோக்கத்துடன் கயோட்டோ (Kyoto) பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுமிட்டோமோ வனவியல் மர நிறுவனத்துடன் இணைந்து (Sumitomo Forestry) இந்தப் புதிய செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர்.

பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது இன்றுள்ள செயற்கைக்கோள்கள் அனைத்தும் எரிந்து நுண்ணிய அலுமினா துகள்களை உருவாக்குகின்றன. இத்துகள்கள் மேல் அடுக்கு வளிமண்டலத்தில் பல ஆண்டுகள் மிதக்கின்றன. “இந்தத் துகள்கள் பூமியின் சூழலை வெகுவாகப் பாதிக்கும்” என்று கயோட்டோ பல்கலைக்கழக விண்வெளி பொறியியலாளர் மற்றும் விண்வெளி வீரர் டக்கா டாய் (Takao Doi) சமீபத்தில் எச்சரித்தார்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண கயோட்டோ ஆய்வாளர்கள் ஏவுதலின்போது ஏற்படும் கடுமையான மாற்றங்கள் பற்றியும் நீண்ட காலம் பூமியைச் சுற்றி வரும்போது மரத்தால் கட்டப்படும் செயற்கைக்கோள்கள் எவ்வாறு தாக்குபிடிக்கின்றன என்பதைப் பற்றியும் கயோட்டோ ஆய்வாளர்கள் பல வகை மரங்களை பயன்படுத்தி பரிசோதித்தனர்.

விண்வெளியில் இருப்பது போன்ற சூழ்நிலை செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு முதல் பரிசோதனைகள் நடந்தபோது மரத்தின் நிறையில் வேறுபாடு ஏற்படவில்லை. மக்குதல் அல்லது சேதம் ஏற்படவில்லை.

காஃபி கோப்பையின் அளவில்

“விண்வெளிச் சூழலை சமாளிக்கும் மரத்தின் திறன் திகைக்க வைக்கிறது” என்று திட்டத்தின் தலைவர் கோஜி முராட்டா (Koji Murata) கூறுகிறார். சோதனைகள் முடிந்த பின் மரத்தின் மாதிரிகள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டு ஏறக்குறைய ஓராண்டு காலம் வரை அங்கு வைத்து பரிசோதிக்கப்பட்டன. பிறகு பூமிக்குக் கொண்டு வந்து ஆராயப்பட்டபோது விண்வெளியில் ஆக்சிஜன் இல்லை, விண்வெளியில் அவற்றை அழுகச் செய்ய எந்த உயிரினமும் இல்லை என்பதால் அவற்றில் மிகச் சிறிதளவு சேதம் மட்டுமே ஏற்பட்டிருந்தது.

விண்வெளியில் செயல்படும்விதம் போன்ற பல சோதனைகள் ஜப்பானிய செர்ரி மரம் உள்ளிட்ட பல வகை மரங்களில் நடத்தப்பட்டபோது மக்னோலியா மரமே வலுவுடையது என்று கண்டறியப்பட்டது. செயற்கைக்கோள்கள் விண்வெளியில் வடிவம் மாறுவதை ஆராய்வது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். ஒரு திசையில் மரம் உறுதியுடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்கும் என்றாலும், மற்றொரு திசையில் வடிவ மாற்றத்தை அடைந்து விரிசல்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளது என்பதால் இத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மர செயற்கைக்கோளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் ஏவு வாகனம் பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த செயற்கைக்கோள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு விரைவில் செல்லவிருக்கும் ஆர்பிட்டல் சயன்ஸஸ் சிக்னஸ் விநியோக விண்வெளிக் கப்பல் (Orbital Sciences Cygnus supply ship) அல்லது ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் டிராகன் (Dragon) வாகனத்தின் மூலம் அனுப்பப்படலாம்.

ஒரு காஃபி கோப்பையின் அளவு உள்ள இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் ஆறு மாதங்கள் வரை செயல்படும். பிறகு மேலடுக்கு வளிமண்டலம் வழியாக பூமியை நோக்கி பயணம் செய்யும். இந்தத் திட்டம் வெற்றி பெறும்போது பல புதிய செயற்கைக்கோள்களை உருவாக்க ஒரு முக்கிய கட்டுமானப் பொருளாக மரம் பயன்படும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சூழல் நட்புடைய செயற்கைக்கோள்

திரும்பி வரும்போது பூமியின் மேலடுக்கு வளிமண்டலத்தில் இப்போது உள்ள செயற்கைக்கோள்கள் வெளிவிடும் அலுமினியத் துகள்கள் ஏற்படுத்தும் படிவுகள் வருங்காலத்தில் ஒரு முக்கிய சூழல் பிரச்சனையாக மாறும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். இந்த அலுமினா படிவுகளால் சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து பூமியைக் காக்கும் ஓசோன் அடுக்கில் ஓசோன் வாயுவின் அளவு குறையும். வளிமண்டலத்தின் வழியாக பூமிக்கு வரும் சூரியனின் கதிரியக்கக் கதிர்களின் அளவு அதிகமாகும்போது பூமியில் எல்லா உயிரினங்களும் பாதிக்கப்படும்.

ஆனால் லிக்னோ சாட் போன்ற மரத்தால் செய்யப்பட்ட செயற்கைக்கோள்கள் அவற்றின் திட்ட இறுதியில் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது மக்கக்கூடிய மிக நுண்ணிய சாம்பல் தூளை மட்டுமே உருவாக்கும் என்பதால் இந்த பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. மனிதச் செயல்பாடுகளால் குப்பை மேடாகி வரும் விண்வெளியின் சூழலைக் காக்க இந்த புதிய மரச் செயற்கைக்கோள்கள் பெருமளவில் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்