உலோகங்களை உருக்கும் அளவு வெப்பம், நச்சுத் தன்மையுடைய, போர்வை போல மூடியிருக்கும் வளி மண்டலத்தைக் கொண்ட வெள்ளி கோள், சூரிய மண்டலத்தில் உயிர்கள் வாழ இயலாத கோள்களின் பட்டியலில் உள்ளது. ஆனால் விண்வெளியியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்த இரண்டு வாயுக்கள் அதன் மேகங்களில் அலைந்து திரிவது அங்கு உயிரின் வடிவங்கள் வாழலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளியின் மேகங்களில் பாஸ்பின்
இங்கிலாந்து ஹல் (Hull) என்ற இடத்தில் நடந்த தேசிய விண்வெளி அறிவியல் கூட்டத்தில் (national astronomy meeting) சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் வெள்ளியில் எரிச்சலை ஏற்படுத்தும் வாசனை உடைய பாஸ்பின் (phosphine) வாயு இருப்பதை வலுவான ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியது. இந்த வாயுவின் இருப்பு அதிக சர்ச்சைகளுக்கு உள்ளானது.
பூமியில் உயிரியல் செயல்பாடுகள், தொழில்துறை செயல்முறைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அமோனியா வாயு அங்கு இருப்பதை மற்றொரு ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்தனர். பாஸ்பின் வாயுவின் இருப்பை வைத்து வெள்ளியில் நாம் முன்பே அறிந்த வளி மண்டலத்தை, புவியின் செயல்கள் போல அங்கும் நிகழக்கூடிய செயல்களைப் பற்றி நம்மால் விவரிக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
உயிர்கள் வாழ்வதற்கான அடையாளமாகக் கருதப்படும் இந்த வாயுக்கள் வெள்ளியில் இருப்பதை வைத்து நாம் அதை அந்நிய கிரக வாசத்திற்குத் தகுதியான கோளாகக் கருத முடியாது. ஆனால் இந்த உற்றுநோக்கல்கள் அந்தக் கோள் மீதான ஆர்வத்தை தீவிரப்படுத்தும். அதன் வளி மண்டலத்தின் ஒரு சில இடங்களில் சமீப கடந்த காலத்தில் தற்காலிகமாக உயிர்கள் உருவாகியிருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
“வெள்ளிக் கோள் வெதுவெதுப்பும் ஈரப்பதமும் உள்ள சூழ்நிலையைப் பெற்றிருந்தால் அதன் ஆரோக்கியமான பகுதிகளில் மட்டும் உயிர்கள் தோன்றியிருக்கலாம். இதை வெள்ளியின் மேகங்கள் எடுத்துக் காட்டுகின்றன” என்று இலண்டன் இம்பீரியல் கல்லூரி விண்வெளி இயற்பியலாளர் டாக்டர் டேவ் க்ளமெண்ட்ஸ் (Dr Dave Clements) கூறுகிறார். ஈயம், துத்தநாகம் போன்ற உலோகங்களை உருக்கும் அளவு வெள்ளியின் தரை மேற்பரப்பு 450 டிகிரி செல்சியர்ஸ் வெப்பத்தைக் கொண்டுள்ளது.
இதன் வளி மண்டலத்தின் அழுத்தம், பூமியின் அழுத்தத்தை விட 90 மடங்கு அதிகம். அங்கு சல்ஃபுரிக் அமில மேகங்கள் காணப்படுகின்றன. ஆனால் தரைப்பரப்பிற்கு 50 கிலோமீட்டர்/31 மைல் தொலைவிற்கு மேற்பகுதியில் வெப்பநிலையும் அழுத்தமும் பூமியில் இருப்பது போல உள்ளன. இந்தச் சூழலில் மிகக் கடினமான நுண்ணுயிரிகள் உயிர் வாழ முடியும். பூமியில் பாஸ்பின் வாயு ஆக்சிஜனற்ற சூழ்நிலையில் பேட்ஜர் கட் (badger gut) போன்றவற்றால் உற்பத்தி செய்யப்படுகிறது.
அமோனியா
எரிமலை வெடிப்புகள் போன்ற நிகழ்வுகளால் உயிர்கள் வாழ்வதற்கான அடையாளமாக கருதப்படும் இந்த வாயு போதுமான அளவு உற்பத்தியாவதில்லை. 2020ல் பாஸ்பின் வாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின் அது உறுதி செய்யப்படாததால் இது தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
ஆனால் இப்போது கோளின் பகல் இரவு சுழற்சியின் மூலம் பாஸ்பின் வாயு இருப்பதை ஆய்வாளர்கள் ஹவாய் ஜேம்ஸ் க்ளார்க் மேக்ஸ்வெல் விண்வெளி தொலைநோக்கியைப் (James Clerk Maxwell telescope (JCMT)) பயன்படுத்தி உறுதி செய்துள்ளனர். இதனால் இந்த சச்சரவுகள் முடிவிற்கு வந்தன.
“வெள்ளியின் வளி மண்டலம் சூரிய ஒளியின் அதி தீவிர வெப்பத்தால் குளிப்பாட்டப்படும்போது பாஸ்பின் வாயு அழிக்கப்படுகிறது. இந்த வாயு வெள்ளியில் உள்ளது என்பதை மட்டுமே இப்போது நம்மால் கூறமுடியும். இந்த வாயுவை உற்பத்தி செய்வது எது என்று தெரியவில்லை. இதன் பின் உள்ள வேதியியலையும் உயிரின் தோற்றத்தையும் நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை” என்று க்ளமெண்ட்ஸ் கூறுகிறார்.
கார்டிஃப் (Cardiff) பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளியியலாளர் பேராசிரியர் ஜேன் க்ரீவ்ஸ் (Prof Jane Greaves) தங்கள் ஆய்வுக் குழுவின் முதன்மை உற்றுநோக்கல்களை கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
க்ரீன் பேங்க் (Green bank) தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆராய்ந்தபோது வெள்ளியில் அமோனியா இருப்பதை இந்த ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். பூமியில் அமோனியா தொழில்துறை நடவடிக்கைகள் அல்லது நைட்ரஜனை வேதிவினை புரிந்து அமோனியாவாக மாற்றும் பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.
“இது கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த மாயாஜால நுண்ணுயிரிகள் வெள்ளியில் வாழ்வதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. அவை அங்கு இப்போது வாழ்கின்றனவா என்பதும் நமக்கு உறுதியாகத் தெரியாது” என்று ஜேன் கூறுகிறார்.
“மூலக்கூறுகள் இணைந்து உயிரைத் தோற்றுவிக்க உதவும் ஆரோக்கியமான சமிஞ்ஞைகள் வெள்ளியில் உள்ளன என்பதை பொதுவான சான்றுகளுடன் இந்த இரண்டு ஆய்வுகளும் வலியுறுத்துகின்றன. இந்த கண்டுபிடிப்புகள் உறுதி செய்யப்பட்டால் இது பற்றி வருங்காலத்தில் மேலும் ஆய்வுகள் நடைபெறும்.பாஸ்பின் மற்றும் அமோனியா வாயுக்கள் உயிர்களின் தோற்றத்திற்கு ஆரோக்கியமான முறையில் உதவும். இதன் மூலம் புதிய தகவல்கள் கிடைக்கும். இது எல்லாமே நேர்மறை நம்பிக்கையின் அறிகுறிகளே” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி இயற்பியலாளர் பேராசிரியர் நிக்கு மாட்யுஸஃபன் (Prof Nikku Madhusudhan) கூறுகிறார்.
“இந்த கண்டுபிடிப்புகள் பரவசப்படுத்துபவை. ஆனால் இது பற்றி மேலும் தீவிர ஆய்வுகள் நடைபெற வேண்டும். இந்த கண்டுபிடிப்புகள் வெள்ளியில் உயிர்கள் வாழ்வதற்கான அடையாளங்களை அல்லது இது வரை அறியப்படாத வேதியியல் செயல்முறைகளை எடுத்துக் காட்டுகின்றன” என்று ராயல் விண்வெளியியல் சங்கத்தின் துணை செயல் இயக்குனர் டாக்டர் ராபர்ட் மாசி (Dr Robert Massey) கூறுகிறார்.
இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டும் உண்மைகள் வரும் நாட்களில் நிரூபிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
** ** **
- சிதம்பரம் இரவிச்சந்திரன்