ஆண் பூவும் பெண் பூவும் உள்ளபோது மகரந்த சேர்க்கைக்கு குளவிகளை எதற்காக அழைக்க வேண்டும்? அத்திப் பழம் பூவா? காயா? அத்தி மரத்தில் அத்திப் பழங்கள் எப்போதும் காய்களே. அப்படியென்றால் பூக்கள் இல்லையா? எங்கே அவை காணப்படுகின்றன? எவ்வாறு அவை மகரந்தச் சேர்க்கை செய்கின்றன? நம் நாட்டில் சுலபமாக எல்லா இடங்களிலும் வளரும் ஒரு மரமே அத்தி (Fig tree). சந்தையில் பல அமைப்பு, வடிவங்களில் பல வகை கலப்பின ரகங்கள் உள்ளன. இதன் பழங்கள் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.fig treeஹைப்பாந்தோடியம்

சாதாரண நாட்டு அத்தி ரகங்கள் ஐந்தாறு ஆண்டுகள் வளர்ந்த பிறகே காய்க்கின்றன. புதிய கலப்பின ரகங்கள் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் வளர்ந்து குலை குலையாக காய்க்கின்றன. இதன் பூக்கள் எங்கே உள்ளன? இவை ஆல் குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள். ஆலின் காய் போலவேதான் இதன் இனப்பெருக்க சுழற்சியும் நடைபெறுகிறது. அத்தி உட்பட உள்ள ஆல் குடும்பத்தைச் சேர்ந்த மரங்களின் இனப்பெருக்கம் குறித்து சுவாரசியமான ஒரு கதை உண்டு.

உண்மையில் அத்திக் காய் சிறிதாக இருக்கும்போதே வளர்ச்சியடைந்த பூங்கொத்தை நாம் காணலாம். இதில் ஆல் மரத்தில் இருப்பது போல பார்ப்பதற்கு காய் போலத் தோன்றும் ஹைப்பாந்தோடியம் (Hypanthodium)) என்ற சிறப்பு மிக்க பூங்கொத்தில்தான் உள்ளன. பூவின் மேற்பகுதிகள் சேர்ந்தே காயின் மேலோடாக மாறுகிறது. இது ஒரு குடம் போல காணப்படுகிறது. இதனுள் ஏராளமான ஆண் பெண் பூக்கள் தோன்றுகின்றன.

இது அத்தியின் காய் பக்குவமடைவதற்கு முன்புள்ள நிலை. இவை உருண்டை முதல் முட்டை போன்ற வடிவங்களில் காணப்படுகின்றன. குடம் போன்ற அமைப்பை உடையது இது. இதன் உட்பகுதி வெறுமையாக இருக்கும். ஒரு சிறிய வாய்ப்பகுதி வெளிப்பக்கமாகத் திறந்து குடத்தின் மேற்பகுதியில் காணப்படும். உள் பக்கமாகத் திரும்பி நிற்கும் ஏராளமான உரோமங்கள் வாய்ப்பகுதியில் உள்ளன.

ஹைப்பாந்தோடியத்தின் உள்ளே அதன் அடியில் ஏராளமான பெண் பூக்களும் வாய்ப்பகுதியில் ஏராளமான ஆண் பூக்களும் காணப்படுகின்றன.

அத்தி உட்பட உள்ள ஆல் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை செய்ய ஃபிக் குளவிகளால் (Fig wasps) மட்டுமே முடியும். இந்த இனக் குளவிகள் மட்டுமே ஹைப்பாந்தோடியத்தின் வாய்ப்பகுதி வழியாக உள்ளே நுழைய பரிணாமம் அடைந்துள்ளன. ஒவ்வொரு ஆல் குடும்ப தாவரத்தின் மகரந்தச் சேர்க்கைக்கும் உதவ வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த குளவி இனங்கள் உள்லன.

உள்ளே நுழையும் பெண் குளவி மற்றொரு மரத்தின் ஹைப்பாந்தோடியத்தில் இருந்து வருகிறது. வரும்போது அவை அந்த மரத்தின் ஆண் பூவின் மகரந்தத் தூளை கொண்டு வருகிறது. அப்போது ஹைப்பாந்தோடியத்தில் பெண் பூக்கள் மட்டுமே முழு வளர்ச்சி அடைந்திருக்கும். ஆண் பூக்கள் வளர் நிலையில் இருக்கும். வெளியில் இருந்து பெண் குளவியால் கொண்டு வரப்பட்ட மகரந்தத் தூளைப் பயன்படுத்தி அது சில பெண் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடத்தும்.

கூட்டு வாழ்க்கை

பிறகு குளவி மீதி இருக்கும் பூக்களில் முட்டையிடும். ஒரு முறை உள்ளே நுழைந்தால் பிறகு பெண் குளவியால் வெளியில் வரமுடியாது. ஹைப்பாந்தோடியத்தின் வாய்ப்பகுதியில் பின்னோக்கி வளைந்து வளர்ந்திருக்கும் உரோமங்களே இதற்குக் காரணம். இதனால் முட்டையிட்டு முடிந்த பின் பெண் குளவிகள் ஹைப்பாந்தோடியத்திற்குள் இருந்து உயிரிழக்கின்றன.

சில பூக்களில் நடந்த மகரந்தச் சேர்க்கை மூலம் ஹைப்பாந்தோடியம் வேகமாக முதிர்ச்சியடைந்து பழுக்க உதவும் வேதிமாற்றங்கள் நிகழத் தொடங்கும். முட்டை விரிந்து உண்டாகும் இளம் புழுக்கள் மீதமிருக்கும் பெண் பூக்களைத் தின்று வளரும். ஹைப்பாந்தோடியம் பழுக்கும்போது முழு வளர்ச்சியடைந்த புழுக்கள் ஆண் பெண் குளவிகளாக மாறும். இதில் பெண் குளவிகளுக்கு மட்டுமே இறக்கைகள் உண்டு.

இறக்கைகள் இல்லாத ஆண் குளவிகள் பெண் குளவிகளுடன் இணை சேர்ந்த பிறகு ஹைப்பாந்தோடியத்திற்குள் இருந்து உயிரை விடுகின்றன. அப்போது ஹைப்பாந்தோடியத்தில் ஆண் பூக்கள் மலரும். அதன் மகரந்தத் தூள்கள் வெளிவரும். இணை சேர்ந்த பெண் குளவிகள் இந்த மகரந்தத் தூளை சேகரித்து காயைத் துளைத்து இன்னொரு மரத்தின் ஹைப்பாந்தோடியத்தை நோக்கிச் செல்லும். இந்த வாழ்க்கைச் சுழற்சி தொடர்ந்து கொண்டேயிருக்கும். மகரந்தச் சேர்க்கை நடந்த காயில் புதிய விதைகள் தோன்றும்.

வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்ய மரத்திற்கும் குளவிக்கும் இடையில் நிலவும் இந்த கூட்டுயிரி வாழ்க்கை உதவுகிறது. மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு பெண் பூக்கள் சிறிய விதைகளாக மாறுகின்றன. மேல் தோடு ஒரு பழமாக உருமாற்றம் அடையும். பழமாவதுடன் அதன் நிறம், சுவை, மணத்தில் பெரிய வேறுபாடுகள் ஏற்படும். பல சமயங்களிலும் நாம் பறித்து எடுக்கும் அத்திப் பழத்தில் ஆண் குளவிகளின் உடற்பகுதிகளும் குடத்தைவிட்டு வெளியேறாத பெண் குளவிகளின் உடற்பகுதிகளும் இருக்கலாம்.

இதனால்தான் அ த்திப் பழத்தை பறித்து சாப்பிடும்போது உட்பகுதியைப் பரிசோதித்த பிறகு சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இயற்கையின் படைப்பில் எல்லா உயிரினங்களும் ஏதேனும் ஒரு வகையில் மற்றொன்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு துணியின் நூலிழைகள் போல இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதில் ஒரு கண்ணி அறுந்தால் நூலிழைகள் அறுந்து போவது போல அதனுடன் பிணைக்கப்பட்டுள்ள எல்லாம் தகர்ந்து போகும்.

அத்தியின் அற்புத மகரந்தச் சேர்க்கை

இதனால்தான் உயிரினங்கள் இன அழிவைக் கண்டு அறிவியல் உலகம் அஞ்சுகிறது. குளவியினம் ஏதாவது ஒரு காரணத்தால் அழிந்து போனால் அது மகரந்த சேர்க்கை செய்து கொண்டிருந்த தாவர இனமும் கூடவே அழிந்துபோகும். அப்போது அந்த தாவரத்தை வேறு தேவைகளுக்காக நம்பி வாழும் மற்ற உயிரினங்களும் அழிந்து போகும். இது ஒரு சங்கிலித்தொடர் போலத் தொடரும்.

அத்தி மரங்கள் எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்து குளவிகளை மகரந்தச் சேர்க்கைக்கு நம்புகின்றன? அதுவும் ஒரு ஹைப்பாந்தோடியத்தில் ஆண் பூவும் பெண் பூவும் இருக்கும்போது இவை எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு குளவிகளை மகரந்தச் சேர்க்கைக்குப் பயன்படுத்துகின்றன? தன் மகரந்தச் சேர்க்கை என்பது ஒரு தாவரம் அதன் மகரந்தத் தூளை அதே தாவரத்தின் சூலகத்தைப் பயன்படுத்தி செய்யும் மகரந்தச் சேர்க்கை.

ஆனால் இதன் மூலம் உருவாகும் வாரிசுகளுக்கு புதிய பண்புகள் எதுவும் கிடைப்பதில்லை. ஒரு ஆண் பூவின் மகரந்தத் தூள் அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் பூவின் சூலகத்தைச் சென்றடைகிறது. இது அயல் மகரந்தச் சேர்க்கை. இதனால் புதிய வாரிசுகளுக்கு பல சிறப்பு பண்புகள் கிடைக்கின்றன. பரிணாமத்தின் இயக்கு விசை (driving force) தாவரத்தில் உருவாகும் மாறுபாடுகளால் (variation) ஏற்படுகிறது.

தாய் தந்தையிடம் இருந்து வாரிசுகள் சிறப்புப் பண்புகளாக பெறுபவை மாறுபாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதற்கு பல வழிகள் உள்ளன. திடீர்மாற்றம் (mutation), மரபணுக்களின் மறு இணைப்பு genetic (recombination) போன்றவை இவற்றில் ஒரு சில. தாவரங்களில் மாறுபாடுகளை ஏற்படுத்த காரணமாக அமையும் வழியே அயல் மகரந்தச் சேர்க்கை.

இதனால் பெரும்பாலான தாவரங்கள் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு பல வழிகளைப் பின்பற்றுகின்றன, பூச்சிகளைப் பயன்படுத்துகின்றன. சில தாவரங்கள் முதலில் அயல் மகரந்த சேர்க்கை செய்ய முயற்சிக்கின்றன. அது இயலாவிட்டால் தன் மகரந்தச் சேர்க்கை செய்து இனம் அழியாமல் பாதுகாக்கின்றன. ஆனால் சில தாவரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கை மட்டுமே இனப்பெருக்கத்திற்கான ஒரே வழியாக உள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டு அலங்காரத் தாவரங்கள். இயற்கையின் படைப்பில் அத்தி மரத்தின் மகரந்தச் சேர்க்கை ஓர் அற்புதமே!

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/fig-tree-flowers-pollination-symbiosis-1.10015893

- சிதம்பரம் இரவிச்சந்திரன்