உலகம் முழுவதும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள் ஆண்டிற்கு 423 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்துகின்றன. பூமியின் உயிர்ப் பன்மயத் தன்மை மற்றும் உயிர்களின் வாழ்விற்கு இவை அச்சுறுத்தலாக மாறியுள்ளன என்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஐநா ஆய்வறிக்கை கூறுகிறது.
புல்லினங்கள் முதல் சுண்டெலிகள் வரை
கடற்பறவைக் குஞ்சுகளை உண்ணும் சுண்டெலி முதல் அந்நிய நாட்டில் இருந்து ஹவாய் தீவிற்கு ஆக்கிரமிப்பு உயிரினமாக நுழைந்து அங்கு வரலாற்று காணாத கடும் காட்டுத்தீயை ஏற்படுத்திய புல்லினத் தாவரங்கள் வரை இந்த உயிரினங்கள் சூழல் மண்டலத்திற்கு பெருத்த நாசத்தை ஏற்படுத்தி வருகின்றன. மனிதக் குறுக்கீடுகள் மற்றும் வணிகத்தின் மூலம் உலகளவில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் 3500 தீமை தரும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த உயிரினங்களின் தாக்கம் மனிதர்களுக்கும் வன உயிரிகளுக்கும் அழிவை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது உயிரினத்தின் இன அழிவிற்கும் காரணமாகிறது. அந்த சூழல் மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்முறையில் நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்துகிறது. ஆக்கிரமிப்பு உயிரினங்கள் உருவாக்கியுள்ள அச்சுறுத்தல்கள் உலக மக்களால் இன்னும் சரிவர அங்கீகரிக்கப்படவில்லை, குறைவாக மதிப்பிடப்படுகிறது, உரிய முக்கியத்துவத்துடன் ஏற்கப்படுவதில்லை.
37 ஆயிரத்திற்கும் கூடுதலான அந்நிய உயிரினங்கள் இதுவரை உலகம் முழுவதும் மனிதச் செயல்களால் ஆக்கிரமிப்பு இனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 200 இனங்கள் ஒவ்வொரு ஆண்டும் அவை புகுந்த இடங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றன.
இந்த உயிரினங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு உயிரினங்களாக மாறுவதில்லை என்றாலும் இவற்றில் பெரும்பாலானவை உள்ளூர் மற்றும் உலகளவிலான இனங்களின் நிரந்தரமான அழிவிற்குக் காரணமாகின்றன.
இவை மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன என்று ஆய்வுக் குழுவின் முன்னணி ஆசிரியர்கள் பேராசிரியர் ஹெலன் ராய் (Prof Helen Roy) பேராசிரியர் ஆனிபல் பாச்சார்டு Prof Anibal Pauchard) மற்றும் பேராசிரியர் பீட்டர் ஸ்டோட் (Prof Peter Stoett) ஆகியோர் கூறுகின்றனர். இதை வெறும் ஓர் உயிரி ஆக்கிரமிப்பாக மட்டும் கருதி யாரோ ஒருவரை மட்டும் பாதிக்கும் பிரச்சனையாக நினைப்பது மிக மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடிய ஒரு விலையுயர்ந்த தவறு என்று ராய் கூறுகிறார்.
இந்த உயிரினங்கள் இயற்கையில் மீளமுடியாத பெரும் நாசத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் உண்டாகும் சேதங்கள் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. உயிர்ப் பன்மயத்தன்மை அறிவியல் தொடர்பான ஐநாவின் முன்னணி ஆய்வு அமைப்பான உயிர்ப் பன்மயத்தன்மை மற்றும் சூழல் மண்டல பாதுகாப்பிற்கான பன்னாட்டு அரசுகளுக்கு இடையிலான அறிவியல் கோட்பாட்டிற்கான தளத்தால் (IPBES) இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வுகளில் விஞ்ஞானிகள், ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 86 நிபுணர்கள் நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டனர். ஜெர்மனி பான் நகரில் சமீபத்தில் இவை குறித்து நடந்த பன்னாட்டு அரசுகளின் கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாசுபடுதல், காலநிலை மாற்றம், ஆக்கிரமிப்பு உயிரினங்கள், உயிரினங்களை நேரடியாக சுரண்டுதல், நிலப்பகுதி பயன்பாட்டில் மாற்றங்களால் ஒரு மில்லியன் உயிரினங்கள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன என்று 2019ல் வெளிவந்த எச்சரிக்கையைத் தொடந்து இந்த ஆய்வுகள் நடந்தன.
நீர்வாழ் தாவரம் முதல் எலிகள் வரை
மனிதனுக்குத் தெரிந்த அனைத்து வகை உயிரினங்களில் 40% உயிரினங்களின் அழிவிற்கு ஆக்கிரமிப்பு உயிரினங்களே காரணம். இது பற்றிய விரிவான ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. ஆக்கிரமிப்பு உயிரினங்களின் பட்டியலில் தென்னமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட, நீர் நிலைகளில் நீரோட்டத்தை தடுத்து மீன் வளத்தை பாதிக்கும் நீர் வாழ் ஹையசிந்த் (water hyacinth) என்ற ஒருவகை பூங்கோரை தாவரம், லண்டானா (lantana) என்ற பூக்கும் புதர்த்தாவரம் மற்றும் கறுப்பு எலிகள் (Black rat) ஆகியவை முதலிடத்தில் இடம்பெற்றுள்ளன.
வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile) காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் ஆல்பபிக்ட்டெஸ் (Aedes albopictus) மற்றும் ஜிகா வைரஸ் (Zika virus) காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) ஆகிய கொசு இனங்கள் பிற எடுத்துக்காட்டுகள். உலகளவில் அமெரிக்காவில் 34%, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 31%, ஆசிய பசுபிக்கில் 25% மற்றும் ஆப்பிரிக்காவில் 7% ஆக்கிரமிப்பு உயிரினங்கள் உள்ளன.
இதில் மூன்றில் ஒரு பங்கு தரை மேற்பரப்பில் வாழ்கின்றன. இவற்றில் பெரும்பாலானவையும் மரங்கள் அடர்ந்த பகுதிகள் மற்றும் அதிக குளிருள்ள உயரமான இடங்களில் வளரும் காடுகளில் காணப்படுகின்றன. 1970கள் முதல் இந்த உயிரினங்களின் ஊடுருவல் ஒவ்வொரு பத்தாண்டிலும் 400 மடங்கு அதிகரிக்கிறது. வரும் ஆண்டுகளில் இது இப்போது உள்ளதைவிட அதிகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு சமூகத்திற்கே உரிய உயிரினங்களின் தனிச்சிறப்பு மிக்க வாழ்க்கை முறை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகில் இத்தகைய உயிரினங்கள் அதிகமாகப் பரவும்போது சமூகங்களின் தனி அடையாளம் மறைந்து போகும் ஆபத்து ஏற்படும். சூழல் மண்டலங்கள் சூழலை ஆக்கிரமிக்கும் உயிரினங்களுக்கு எதிராகப் போராடும் திறனை இழக்கும் நிலை உருவாகும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஹவாய் தீவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீ சம்பவம். இந்த உயிரினங்களைப் பரவாமல் தடுக்க வழிகள் உள்ளன. தீவுப்பகுதிகளில் இருந்து இத்தகையவற்றை ஒழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் 88% வெற்றி பெற்றுள்ளன.
எடுத்துக்காட்டு கரீபியன் பகுதியில் உள்ள ஆண்டிகுவா (Antigua) மற்றும் பார்புடாவிண் (Barbuda) பகுதியாக அமைந்துள்ள ஒரு மைல் நீளமுள்ள ரிடாண்டா (Redonda) என்ற பகுதி. இப்பகுதியை ஒரு காலத்தில் ஆக்கிரமித்திருந்த கறுப்பு எலிகள், காட்டு ஆடுகள் (feral goats) ஆகியவை 2017ல் நீக்கப்பட்டவுடன் இயற்கை தாவரங்கள், பறவைகள் மற்றும் ஊர்வன வகை விலங்குகள் இங்கு மீண்டும் வந்து வாழத் தொடங்கின. இதனால் தரிசாகக் கிடந்த இப்பகுதி மீண்டும் பசுமை எழில் கொஞ்சும் இடமாக மாறியது.
அதிக செலவு பிடிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்களைவிரட்டும் அல்லது ஒழிப்புத் திட்டங்களைக் காட்டிலும் இவை புதிய பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதே இப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு சொந்தமில்லாத ஒரு உயிரினத்தை நுழையாமல் தடுக்க உயிரி பாதுகாப்பு (biosecurity) வழிமுறைகளை கையாள வேண்டும். எல்லைக் கட்டுப்பாடு, அந்நிய உயிரினங்களின் வரவால் உருவாகக்கூடிய பாதிப்புகள் பற்றி மதிப்பிடுதல் போன்ற வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஐநா இதற்கான உலகளாவிய இலக்கை நிர்ணயித்து வலியுறுத்திய போதிலும் இது பற்றிய எந்த தேசிய திட்டமிடலும் இல்லாமல் உலகில் 84% நாடுகள் உள்ளன. ஆனால் நியூசிலாந்து போன்ற ஒரு சில நாடுகள் இதில் சிறப்பாக செயல்படுகின்றன. நியூசிலாந்து இந்நூற்றாண்டின் பாதிக்குள் அந்நாட்டின் தீவுகளில் ஊடுருவியுள்ள அனைத்து உயிரினங்களையும் அப்புறப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதை மற்ற உலக நாடுகள் முன் மாதிரியாகக் கொண்டு பின்பற்றினால் மட்டுமே உயிர்ப் பன்மயத் தன்மையும் மனிதன் உட்பட எல்லா உயிரினங்களும் வருங்காலத்தில் பூமியில் நீடித்து நிலையாக வாழ முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்