காலநிலைப் பேரழிவுகளைத் தடுத்து மனித குலத்தைக் காக்க உதவும் புதிய நிதி ஒதுக்கீடு குறித்த உடன்படிக்கையுடன் அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்கு (Baku) நகரில் நவம்பர் 11, 2024 அன்று காலநிலை உச்சி மாநாடு (COP29) தொடங்கியுள்ளது. இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் உலகில் எந்த நாடும் காலநிலை பேரழிவில் இருந்து தப்பமுடியாது என்று மாநாட்டின் தொடக்க நிகழ்வில் பேசிய காப்29ன் தலைவர் மற்றும் அஜர்பைஜானின் சூழல் அமைச்சர் மக்ஃப்டர் பாஃபேயெஃப் (Mukhtar Babayev) எச்சரித்துள்ளார்.COP29 baku“குறைந்த அளவே கார்பனை உமிழும் ஏழை நாடுகளுக்கு பெரும் வணிக நிறுவனங்கள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையெனில் ஒட்டுமொத்த உலகமும் காலநிலைப் பேரழிவால் அழிய நேரிடும். அரசுகளின் கஜானாவை மட்டும் நம்பி செயல்பட முடியாது. வளரும் நாடுகளுக்கு தனியாரும் தங்கள் கோடிக்கணக்கான வருமான இலாபத்தில் இருந்து ஒரு சிறிய பகுதியையேனும் இதற்காக ஒதுக்க வேண்டும். தனியாரின் பங்கேற்பு இல்லாமல் காலநிலை பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வும் ஏற்படாது. உலகம் உடனடியான அதிக நிதியை எதிர்பார்க்கிறது. வரலாறு இதையே எடுத்துக் காட்டியுள்ளது. இப்போதைய தேவை அரசுகளின் அவசர செயல்பாடு மட்டுமே" என்று அவர் மேலும் கூறினார்.

இம்மாநாட்டில் உலகின் 200 நாடுகளின் தலைவர்கள், உயர் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் நன்னம்பிக்கையுடன் கூடிய செயல்பாடுகள் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து விலகும் என்றும், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் அகற்றப்படும் என்றும் கூறிய டொனால்டு ட்ரம்பின் தேர்தல் வெற்றி மூலம் அவநம்பிக்கையின் நிழல் படர்ந்துள்ளது என்று சூழல் போராளிகள் அஞ்சுகின்றனர்.

2015 பாரிஸ் காலநிலை மாநாட்டில் புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வரலாற்று ஒப்பந்தம் ஏற்பட்டது.

அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ள புதிய அரசின் பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து விலகும் முடிவால் பூமியின் வெப்பநிலை மேலும் உயரும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்த மாநாட்டில் பசுமைக் குடில் வாயு உமிழ்வை கட்டுப்படுத்த உதவும் புதிய நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் காலநிலை அச்சுறுத்தல் தீவிரமாகும்போது அதை சமாளிக்க உதவும் வகையிலான நிதியை செல்வந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு ஒதுக்கி வழங்கும் புதிய திட்டங்கள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. இதற்காக 2035ம் ஆண்டுக்குள் செல்வந்த நாடுகள் ஆண்டுதோறும் 100 மில்லியன் முதல் ஒரு டிரில்லியன் டாலர் வரை நிதி ஒதுக்க வேண்டும். இதற்கு அமெரிக்கா பெரும் தடையாக எழுந்துள்ளது என்று சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தனியார் நிறுவனங்கள் நிதி வழங்கும்போது அதற்கும் பெரும் தொகை வட்டியாக வசூலிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும். இத்தகைய திட்டங்களுக்கு இலாபம் பார்ப்பதையே நோக்கமாக இருக்கும். இவ்வாறு நிகழ்ந்தால் ஏழை நாடுகள் மேலும் கடன் சுமையில் மூழ்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படும் என்று அஞ்சப்படுகிறது. “அரசு வழங்கும் நிதியே தனியாரின் நிதியை விட மேலானது. அரசாங்கங்கள் மட்டுமே நிதியுதவியை மானியமாகக் கொடுக்க முடியும். இது மட்டுமே வளரும் நாடுகளின் அதிகரித்து வரும் நிதித்தேவையை நிறைவு செய்யும். தனியார் எதிலும் இலாபம் பார்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுபவர்கள்” என்று கிறிஸ்ட்டியன் எய்டு அமைப்பின் (Christian Aid) பிரதிநிதி மரியானா பவுலி (Mariana Paoli) கூறுகிறார். வளரும் நாடுகள் கோரும் நிதி ஒன்று திரட்டப்பட்ட புதிய அளவிலான நிதிக்கான குறிக்கோள் (New Collective Quantify Goal NCQG) என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் காலநிலை பேரழிவின் பாதிப்புகளைக் குறைப்பதில் தனியார் நிறுவனங்களின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என்று சிறிய நாடுகளுக்கான கூட்டமைப்பின் பேச்சாளர் கூறுகிறார். “புதைபடிம எரிபொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைத்தால் காலநிலை மாற்றத்தினால் நிகழும் அழிவுகளைக் குறைக்க முடியும் என்பதுடன் பொருளாதாரத்தையும் மேம்படுத்தலாம். உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் உடனடியாக காலநிலையை சீர்படுத்த முயற்சிக்காவிட்டால் பிறகு உலக நாடுகள் அனைத்தும் இதற்கான விலையைக் கொடுக்க வேண்டும். காலநிலை தீவிரத்தைக் குறைக்க வழங்கப்படும் நிதியுதவி ஒரு அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நன்கொடை இல்லை” என்று ஐநா காலநிலை மாற்றத்திற்கான தலைவர் சைமன் ஸ்டீல் (Simon Stiell) மாநாட்டில் பேசியபோது கூறினார்.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின் உட்பட பல்வேறு மேற்கித்திய நாடுகளில் சமீபத்தில் நிகழும் புயல்கள், வெள்ளப்பெருக்குகள், மிதமிஞ்சிய வெப்ப உயர்வு போன்ற சீரழிவுகள் இனியும் இது போல் தொடராமல் இருக்க, பல காலங்களாக வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகள் கோரும் நிதியுதவியை வழங்க ஒப்புக்கொள்ளும் உடன்படிக்கையுடன் இம்மாநாடு ஒரு சரித்திர சாதனை படைக்கும் என்ற என்ற எதிர்பார்ப்புடன் உலகம் அஜர்பைஜானின் தலைநகரை உற்றுநோக்குகிறது.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2024/nov/11/developing-world-needs-private-finance-for-green-transition-says-cop-president?

சிதம்பரம் இரவிச்சந்திரன்