உலக உணவு முறையை நீடித்த நிலையான வளர்ச்சி உடையதாக மாற்றினால் ஆண்டிற்கு பத்து டிரில்லியன் டாலர் அளவு பொருளாதார நன்மை ஏற்படும். மனித ஆரோக்கியம் மேம்படும். காலநிலை மாற்றத்தின் தீவிரம் குறையும். இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் பயிர் நிலங்களை வன உயிரினங்கள் கூடுதலாக வாழும் இடங்களாக மாற்றுவர். பயிர் நிலங்கள் கார்பனை உறிஞ்சும் தொட்டிகளாக (Carbon sinks) மாறும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.

அழிவை உண்டாக்கும் உணவு முறைகள்

இப்போது உள்ள உற்பத்தி முறைகள் நன்மைகளை விட ஆரோக்கியம், சூழல் வள இழப்புகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உணவு முறைகளால் ஏற்படும் இழப்புகள் பற்றிய முதல் விரிவான ஆய்வு இதுவே. இன்று நடைமுறையில் இருக்கும் உணவு முறை மருத்துவம் மற்றும் சூழலில் மறைந்திருக்கும் செலவுகளை (hidden costs) ஏற்படுத்துகின்றன.rice terrace 700மறைந்திருக்கும் செலவுகள் என்பவை ஏற்கனவே நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்துள்ள பயனர் வாங்குதல் அல்லது பதிவு பெறுதல் செயல்முறைக்கு வரும்வரை அவரிடம் இருந்து மறைக்கப்படும் கட்டணங்கள் அல்லது செலவுகளைக் குறிக்கிறது. இதனால் கூடுதல் மதிப்பை உருவாக்குவதைக் காட்டிலும் இன்று உள்ள உணவு முறைகள் அதிக இழப்பையே உண்டாக்குகிறது.

இதனால் வருங்கால இயற்கை வளங்களை நாம் இன்று கடனாக வாங்கி செலவிடுகிறோம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் மூன்றில் ஒரு பங்கு பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்விற்கு உணவு முறைகளே காரணம். இது இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.7 டிகிரி செல்சியர்ஸ் வெப்ப உயர்வை ஏற்படுத்தும். வேளாண்மையில் இது தீயவிளைவை உண்டாக்கும் சுழற்சிக்கு காரணமாகும்.

உயர் வெப்பநிலை மேலும் அதி தீவிர காலநிலை மாற்றங்களை உண்டாக்கும். அறுவடையில் இது பெரும் சேதத்தை ஏற்படுத்தும். உணவுப் பாதுகாப்பின்மை மருத்துவ முறைகளின் சுமையை அதிகரிக்கும். இந்த உண்மைகளைப் பொருட்படுத்தாமல் மனித குலம் இப்போது செயல்படுவதைப் போல தொடர்ந்தும் செயல்பட்டால் 2050ம் ஆண்டிற்குள் 640 மில்லியன் பேர் எடைக் குறைவால் பாதிக்கப்படுவர். உடற்பருமன் 70% அதிகரிக்கும்.

“உணவு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது, மறுசீரமைப்பது போன்றவை அரசியல்ரீதியாக சவாலானது என்றாலும் அது மிகப்பெரிய பொருளாதார மற்றும் ஆரோக்கிய நன்மைகளைத் தரும்” என்று இது பற்றி ஆராய்ந்த பன்னாட்டு ஆய்வாளர் குழு கூறுகிறது. 2006ல் பிரிட்டிஷ் அரசால் முன்னாள் உலக வங்கி பொருளாதார நிபுணர் சர் நிக்கோலஸ் ஸ்டேர்ன் தலைமையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் செலவுகள் பற்றி ஆராய்ந்த குழு அறிக்கை (Stern review) இதையே வலியுறுத்தியது.

“உலக உணவு முறையே வருங்காலத்தில் பூமியில் மனிதனின் வாழ்வைப் பிடித்து வைத்திருக்கிறது. உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பெருமளவில் மரங்களை வெட்டி காடுகளை அழித்து விவசாயம் செய்யும் ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறைக்கு கொடுக்கப்படும் மான்ய உதவிகள் பயிர் நிலங்களை கார்பனை உறிஞ்சும் இடங்களாகவும், வன உயிரினங்கள் வாழத் தகுதியான இடங்களாகவும் மாற்றும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு திசை திருப்பிவிடப்பட வேண்டும். உண்ணும் உணவில் மாற்றம் ஏற்படுத்துவது மற்றொரு முக்கிய அம்சம்.

தீமை தரும் உமிழ்வுகளைக் குறைக்க உதவும், திறனை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்யப்பட வேண்டும். 2050ம் ஆண்டிற்குள் உணவுப் பாதுகாப்பின்மை குறையும்போது உலகில் இன்று பல உடல் நலப் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் சத்துப் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும். 174 மில்லியன் குறைப் பிரசவங்கள் தடுக்கப்படும். 400 மில்லியன் விவசாயிகள் வேளாண்மையின் மூலம் போதுமான வருமானத்தைப் பெற முடியும்.

இதனால் தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பிருந்தது போல புவி வெப்ப உயர்வு 1.5 டிகிரியாக கட்டுப்படுத்தப்படும். பயிர் நிலங்களில் வளம் மிக்க நைட்ரஜன் சத்து இழக்கப்படுவது (Nitrogen run-off) தடுக்கப்படும்” என்று பாட்ஸ்டம் காலநிலை ஆய்வுக்கழகத்தின் (Potsdam Institute for Climate Impact Research ) ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவருமான ஜோஹன் ராக்ஸ்டெர்ம் (Johan Rockström) கூறுகிறார்.

உணவு முறை மாற்றங்களுக்கு ஆண்டிற்கு உலக உள்நாட்டு உற்பத்தியில் 0.2 முதல் 0.4% வரை செலவாகும் என்று ஆய்வுக்குழு கணித்துள்ளது. பொருளாதாரத்தில் உணவுத் துறையே மிகப் பெரிய பங்கு வகிக்கிறது என்று முந்தைய ஆய்வுகளில் ராக்ஸ்டெர்ம் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர் கண்டறிந்திருந்தனர். பூமியால் தாங்கக்கூடிய வரையறையை உடைத்தெறிந்து காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நிலப்பகுதி பயன்பாட்டில் மாற்றம், உயிர்ப் பன்மயத்தன்மை அழிவு, 70% நந்நீர் வளம் குறைய உணவுத் துறையே முக்கியக் காரணியாக அமைகிறது.

இந்த ஆய்வறிக்கை பாட்ஸ்டம் கழகம், உணவு மற்றும் நிலப் பயன்பாட்டிற்கான கூட்டமைப்பு (The Food&Land use Coaalition), ஈட் எனப்படும் ஸ்டாக்ஹோம் உணவு முறை ஆய்வு கூட்டமைப்பு (EAT, a holistic food-system coalition of the Stockholm Resilience Centre), வரவேற்பு அறக்கட்டளை (the Wellcome Trust), ஸ்ட்ராபெரி அமைப்பு (Strawberry Foundation) மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டன் பொருளாதாரப் பள்ளி உள்ளிட்ட கல்விக்கூடங்களின் நிபுணர்கள் இணைந்து தோற்றுவித்த உணவு முறைகள் மற்றும் பொருளாதார கமிஷனால் ((Food systems Economics commission) தயாரிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம், மனித ஆரோக்கியம், சத்துகள் மற்றும் இயற்கை வள மூலங்களால் உணவுத்துறையில் மறைக்கப்படும் செலவுகளின் மதிப்பு 15 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனித குலத்தின் திறனைப் பொறுத்து காலப்போக்கில் இந்த செலவுகள் எவ்வாறு மாறலாம் என்பதை கணித்துக் கூற ஆய்வாளர்கள் புதிய மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

2023ல் அதிகாரப்பூர்வ பதிவேடுகளின் கணக்கீடுகளுக்கு அப்பால் உலகளவிலான உணவுப்பொருட்களின் மதிப்பு பத்து டிரில்லியன் டாலர்களுக்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறிய ஐநா உலக உணவுக் கழக அறிக்கையின் தொடர்ச்சியே இந்த ஆய்வறிக்கை.

“உணவு முறை மாற்றத்திற்கான பிராந்திய மற்றும் உலகளவிலான பொருளாதார வாய்ப்புகளை இந்த ஆய்வு முதல்முறையாக எடுத்துக் கூறுகிறது. உணவு முறைக்கான மாற்றம் சுலபமானதில்லை. ஆனால் உலகளவில் மாற்றம் நிகழவில்லை என்றால் அதனால் அதிகரிக்கும் செலவுகள் வருங்காலத்தில் பொருளாதாரத்தில் பெரும் சுமையை ஏற்படுத்தும். இது நாளை மனிதகுல நன்மைக்கு பெரும் ஆபத்து” என்று ஆக்ஸ்போர்டு சுற்றுச்சூழலியல் மாற்றத்திற்கான ஆய்வுக் கழகத்தின் நிபுணர் டாக்டர் ஸ்டீபன் லார்ட்உ (Dr Steven Lord) கூறுகிறார்.

மனிதன் மாறவில்லை என்றால் உயிர் வாழ அவன் உற்பத்தி செய்யும் உணவு முறைகளால் உருவாகும் இழப்புகளே எதிர்காலத்தில் அவனை அழிக்கும் ஆயுதமாக மாறும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2024/jan/29/sustainable-food-production-economic-benefits-study?

சிதம்பரம் இரவிச்சந்திரன்