வீட்டின் உள் மற்றும் வெளிப்புறங்களில் நிலவும் ஒளி மாசு, இரவு நேரங்களில் குறிப்பாக 65 வயதுக்குட்பட்டவர்களின் அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கிறது. இந்த ஆய்வுகள் அமெரிக்க தேசிய ஆரோக்கியம் குறித்த ஆய்வுகளுக்கான நிதியத்தின் உதவியுடன் நடந்தது. இந்த ஆய்வுகள் இரவு நேர செயற்கை ஒளிக்கும் அல்சைமர்ஸ் நோய்க்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதை எடுத்துக் காட்டுகிறது. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை நியூரோ அறிவியல் முன்னேற்றங்கள் (Frontiers in Neuroscience) என்ற இதழில் வெளிவந்துள்ளது.உள்ளுக்குள் இயங்கும் உயிர் கடிகாரம்
அமெரிக்காவில் 19 மாகாணங்களில் ஒளி மாசு கட்டுப்பாட்டு சட்டங்கள் நடைமுறையில் உள்ள போதிலும் பல இடங்களிலும் இது அதிகமாக உள்ளது. தெரு விளக்குகள், சாலை விளக்குகள், ஒளியூட்டப்பட்ட விளம்பரப் பலகைகள் போன்றவை சாலைகளை பாதுகாப்பானதாகவும் நிலப்பரப்பை தெளிவாகக் காட்ட உதவும் வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும், தடங்கள் இரவு முழுவதும் எரியும் இவ்விளக்குகளின் ஒளி சூழலியல், நடத்தையியல் மற்றும் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் 2012 முதல் 2018 வரை செயற்கைக்கோள்கள் மூலம் பெறப்பட்ட ஒளி மாசின் அளவுகள், அல்சைமர்ஸ் நோய் விவரங்கள் ஆராயப்பட்டன. சர்க்கரை நோய், உயர்ந்த இரத்த அழுத்தம் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது இரவு நேர ஒளி மாசு குறைவான அல்சைமர்ஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆல்கஹால், தீவிர நாட்பட்ட சிறுநீரக நோய்கள், மன அழுத்தம், இதய செயலிழப்பு, உடற்பருமன் ஆகியவற்றை விட இரவு நேர ஒளி மாசு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
65 வயதுக்கும் குறைவானவர்களில் வேறெந்த நோயை விட இரவு நேர ஒளி மாசு அல்சைமர்ஸ் நோய்க்கு அதிக காரணமாகிறது. இளம் வயதினர் இந்த மாசினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
“சில வகை மரபணுக்கள் உள்ளவர்கள் உயிரியல் ரீதியான அழுத்தங்கள் காரணமாக அல்சைமர்ஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் இவர்கள் இரவு நேர ஒளி மாசை எதிர்கொள்ள பலவீனமானவர்களாக வாழ்கின்றனர். நகரப்பகுதிகளில் இளம் வயதினர் அதிகமாக வாழ்வதால் அவர்கள் இரவு நேர ஒளி மாசுக்கு அதிகம் ஆளாக நேரிடுகிறது. நம் உடலுக்குள் இயங்கும் உயிர் கடிகாரத்தை சரி வர இயக்குவதில் இரவு நேர ஒளி முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுப்புற சூழலில் ஏற்படும் ஒளியளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நம் மூளையில் செயல்படும் இந்த கடிகாரம் நாம் தூங்குவதையும் விழித்தெழுவதையும் சமிஞ்ஞைகள் மூலம் ஒழுங்குபடுத்துகிறது. இந்த கடிகாரத்தின் சீரிசையை இரவு நேர ஒளி பாதிக்கிறது. இதனால் இளம் வயதினரிடையில் இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்று ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரும் ரஷ் (Rush) பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் இணை பேராசிரியருமான டாக்டர் ராபின் வாய்க்ட்-ஸ்யுவாலா (Dr Robin Voigt-Zuwala) கூறுகிறார்.
“உறக்கம் மற்றும் உயிர் கடிகாரத்தின் இயக்கத்தை ஒளி கட்டுப்படுத்துகிறது. மோசமான தூக்கத்தால் இந்த நோய் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இரவு நேரம் தீவிரமான ஒளியுள்ள இடத்தில் வாழ்வது, குறைவான தூக்கம், பகல் நேரத்தில் அதிக உறக்கநிலை பாதிப்பு, தரமற்ற தூக்கம் பற்றிய அதிருப்தி போன்றவற்றை ஏற்படுத்துகிறது” என்று நியூயார்க் மவுண்ட் சைனாய் (Mount Sinai) அல்சைமர்ஸ் மைய நிபுணர் சாமுயெல் காந்தி (Samuel Gandy) கூறுகிறார்.
“தரமான நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம். இரவு நேர ஒளி மாசு மூளையின் செயல்பாட்டில் குறுக்கிடுகிறது. மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவும் தூண்களில் ஒன்றான உறக்கம் பற்றிய இந்த ஆய்வு முக்கியமானது” என்று பென்சில்வேனியா பல்கலைக்கழக பென் நினைவாற்றல் ஆய்வு மையத்தின் இணை இயக்குனர் டாக்டர் ஜேய்சன் காலாவிஷ் (Dr Jason Karlawish) கூறுகிறார்.
“சாளரங்கள் வழியாக வரும் ஒளி, சூரிய ஒளி, சமூக, ஆரோக்கியத் துறையில் வேறுபாடுகள், வீட்டுக்குள் இருக்கும் ஒளியால் ஏற்படக்கூடிய பாதிப்பு, கிராம, நகர்ப்புற ஒளி மாசு வேறுபாடு போன்றவற்றை மேலும் தீவிரமாக ஆராய வேண்டும்” என்று அமெரிக்காவில் உள்ள மேயோ (Mayo) க்ளினிக்கல் நரம்பியல் நிபுணர் டேவிட் நாக்மேன் (David Knopman) கூறுகிறார்.
ஒளி மாசால் உருவாகும் தீமைகளை தடுக்க கறுப்பு நிறத் திரைச்சீலைகளைப் பயன்படுத்துதல், முகக்கவசங்களை பயன்படுத்தி கண்களை மூடிக் கொள்வது போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை மக்கள் அனைவரும் பின்பற்ற இந்த ஆய்வுகள் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/us-news/article/2024/sep/06/light-pollution-alzheimers-study?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்