இடைக்காலப் பாண்டியர்கள் கி.பி. 575 முதல் கி.பி. 950 வரை ஆண்டனர். அதன்பின் பாண்டியப் பகுதிகள் சோழர் ஆட்சியின் கீழ் வந்தன. கி.பி. 1190க்குப்பிறகு அவர்கள் எழுச்சி பெற்று, பாண்டியப் பேரரசை உருவாக்கினர். முதலாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி. 1190-1218) என்ற பாண்டிய மன்னன் சோழர்களை எதிர்த்துப் போரிட்டுத் தோற்ற போதிலும் மீண்டும் பாண்டிய அரசைப் பெற்று ஆண்டான். அடுத்து ஆட்சிக்கு வந்தவன் இவனது மகனான முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1216-1244). இவன் மூன்றாம் குலோத்துங்கன் இறந்த பிறகு கி.பி. 1218இல் சோழநாட்டின் மீது படையெடுத்து உரையூரையும் தஞ்சையையும் தீக்கிரையாக்கினான். மீண்டும் சோழனுக்கே சோழ ஆட்சியைத் தந்து ஆள வைத்தான். சுந்தர பாண்டியன் மீண்டும் சோழநாட்டின் மீது 1227இல் படையெடுத்து வெற்றி பெற்றான். மறுபடியும் 1230இல் படையெடுத்து சோழர்களின் தலைநகரைக் கைப்பற்றினான். போசளர்கள் சோழர்களுக்கு உதவி, 1234இல் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து 20 ஆண்டுகள் தமிழகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் 1244 வரை பாண்டிய அரசனாக இருந்தான்.
இவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்களில் பேராற்றல் படைத்த பேரரசன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1250-1284). இவன் தான் உண்மையில் பாண்டியப் பேரரசை நிறுவியவன். இவன் சோழனுக்கு உதவிய போசள மன்னன் வீர சோமேசுவரனை விரட்டியடித்தான். போசளரின் தமிழ்நாட்டுத் தலைநகராக இருந்த கண்ணனூர் கொப்பத்தைக் கைப்பற்றினான். கருநாடக அரசனை அழித்தான். கப்பம் கட்ட மறுத்த இலங்கை மன்னனை மீண்டும் வெற்றி கொண்டான். காடவ மன்னனை பலமுறை வென்றான். காகதீய மன்னன் கணபதியை வென்றான். தெலுங்குச்சோழ மன்னனை வென்றான். சேரனை வென்றான். இவன் காஞ்சியையும், நெல்லூரையும், கொங்கு நாட்டையும், திருவாங்கூரையும் கைப்பற்றித் தனது ஆட்சிப்பரப்பில் கொண்டுவந்தான். இவன் ஆட்சியில் இருந்த போதே இவனுடைய சகோதரர்களும் ஆட்சி செய்து வந்தனர் (1).
இவனுக்குப்பின் இவனது மகன் முதலாம் மாறவர்மன் குலசேகரன் ஆட்சிக்கு வந்தான் இவனுக்கு வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் என்று இரு மகன்கள் இருந்தனர். இந்தப் பாண்டியன். தவறான வழியில் பிறந்த வீரபாண்டியனுக்கு முடி சூடியதால் கோபமடைந்த பட்டத்துகுரிய சுந்தரபாண்டியன் தன் தந்தை குலசேகரனைக் கொன்று விட்டான் என்று வாசப் என்பவர் எழுதியது பொய்க் கதை. ஆய்வாளர் என்.சேதுராமன் கல்வெட்டுகளின் சான்றுகளைக் கொண்டு இருவரும் ஒற்றுமையுடன் அரசாண்டனர் என விரிவாக ஆய்வு செய்து கூறியுள்ளார். கல்வெட்டுகள் தான் மிகச்சிறந்த சான்றுகள். அவற்றைக் கொண்டுதான் உண்மையான வரலாற்றை எழுத இயலும். இந்த சுந்தரபாண்டியன் (கி.பி. 1303-1325) தனது அண்ணன் வீர பாண்டியன் (1297-1342) பெயரால் வீரபாண்டீசுவரம் என்ற கோவிலைக் கட்டினான் என நல்லூர்க் கல்வெட்டு கூறுகிறது. ஆகவே இரு சகோதரர்களும் ஒற்றுமையுடன் இருந்துள்ளனர் என்பதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது (2).
முதலாம் மாறவர்மன் குலசேகரன் (கி.பி. 1268-1318) ஆட்சி செய்தபோதுதான் வெனிசு பயணி மார்க்கோபோலோ பாண்டியநாடு வந்தார். இவன் காலத்தில் ஐந்து பாண்டியர்கள் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தனர். இவன் ‘மலைநாடும், சோணாடும், இருகொங்கும், ஈழமும் தொண்டை மண்டலமும் கொண்டருளியவன்’ என்று சேரமாதேவி கல்வெட்டு (கி.பி.1279) கூறுகிறது. இவனது மூத்த மகனான மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் இன்னொரு பெயர்தான் வீர பாண்டியன். இவனது இளைய மகனான நான்காம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பவனின் இன்னொரு பெயர்தான் சுந்தர பாண்டியன். இவர்கள் இருவரும் ஒற்றுமையுடன் அரசாளவில்லை என அமீர்குசுரு என்ற பாரசீகக் கவிஞரும் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சடையவர்மன் இராசராச சுந்தர பாண்டியன் (1310-1332) என்ற இன்னொரு பாண்டிய இளவல் தான் படையெடுத்து வந்த மாலிக்காபூருடன் சேர்ந்து, அவனுக்கு உதவினான் என தற்கால ஆய்வுகள் கூறுகின்றன. இவன் முதலாம் மாறவர்மன் குலசேகரனின் மகனல்ல. அவனது தம்பிகளில் ஒருவனுடைய மகனாக இருக்கலாம். ஆனால் இவனும் கி.பி. 1320க்குப்பின் பிற பாண்டியர்களோடு ஒன்று சேர்ந்து முகம்மதியர்களை எதிர்த்துப் போரிட்டுள்ளான். கி.பி. 1310இல் நடந்த மாலிக்காபூர் படையெடுப்பு பாண்டியப் பேரரசை வீழ்த்தியது (3).
அதன் பின்னரும் பல பாண்டிய வழித்தோன்றல்கள் பல இடங்களில் இருந்து ஆட்சி செய்துள்ளனர். இதன் பின்னர் 1375 வாக்கில் நடந்த விசயநகர அரச இளவல் கம்பணனின் படையெடுப்பு பாண்டியர் ஆட்சியை மதுரையில் இல்லாது ஒழித்தது. அதன்பின் பாண்டிய இளவல்கள் தென்பகுதிக்குச் சென்று விசயநகர அரசின் குறுநில அரசர்களாக ஆண்டு வந்தனர்.
ஊர், நகரம் நாடு: சோழ நாட்டில் இருந்தது போன்றே வேளாண் ஊர்களுக்கு ஊர்மன்றமும், பிரம்மதேய ஊர்களுக்கு சபையும் இருந்தன. அதுபோக நகரங்களுக்கான நகர மன்றங்கள் இருந்தது. பல ஊர்களும் சில நகரங்களும் சேர்ந்த நாடும் அதற்கான நாட்டார் மன்றமும் இருந்து. சபை தவிர மீதி அமைப்புகள் சங்ககாலம் முதல் இருந்து வருபவை. நாடுகளுக்கு மேல் மண்டலங்கள் இருந்தன. ஆனால் மண்டலங்களுக்கு நிர்வாக அமைப்பு இருக்கவில்லை. நாடு என்ற அமைப்பு நாட்டு மக்களை மைய அரசோடு இணைக்கும் இணைப்புச் சங்கிலியாக செயல்பட்டது. நாட்டார் மன்றங்கள் தான் வரிவசூலை மேற்கொண்டன. கடமை என்ற நிலவரி மைய அரசுக்கு தவறாமல் சென்றடைய வேண்டும் என்ற அன்றைய அரசு ஒழுகலாறு நாட்டார் மன்றத்தால் கடைப்பிடிக்கப்பட்டது. நாட்டார் மன்றம் நிறைய அதிகாரங்களைக் கொண்டிருந்தது. நாட்டார் மன்றங்கள் ஒன்று சேர்ந்து பல பொதுக்காரியங்களைச் செய்தன.
ஊர்மன்றம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டுவரை ‘ஊரார்’ என்றே அழைக்கப்பட்டது. இந்த ஊரார் அமைப்பு தன்னாட்சித் திறன் கொண்டதாக இருந்தது. பார்ப்பனர்களின் சபையும் சுயாட்சியுடன் செயல்பட்டு வந்தது. நகர மன்றங்களும் சுய அதிகாரம் கொண்டவைகளாக இருந்தன. ஊரார், சபை, நகர மன்றம் ஆகிய இவைகளின் மேல் அமைப்பாக நாட்டார் மன்றம் இருந்தது. மைய அரசு நாட்டாரோடுதான் தொடர்பு கொண்டது (4). பாண்டிய நாட்டில் படைத்தலைவர், அரையர், நாடுவகை செய்வோர், வரியிலார், புரவுவரித் திணைக்களத்தார், திருமுகம் எழுதுபவர் எனப் பல அதிகாரிகள் இருந்தனர். இதில் அரையர் என்போர் நாடுகளின் தலைவராக இருந்த நாட்டதிகாரிகள். அதிகாரிகளுக்கு காவிதி, ஏனாதி, பாண்டியன் மூவேந்த வேளாளன், அரையன், விசையரையன், செழியதரையன், தென்னவன் தமிழ்வேள், பஞ்சவன் மாராயன், காலிங்கராயன் போன்ற பல பட்டங்கள் வழங்கப்பட்டன (5).
பாண்டிய பேரரசு காலச் சமூகம்:
பாண்டியப் பேரரசில் பார்ப்பனர், வேளாளர், வணிகர், கம்மாளர், கைக்கோளர், இடையர், பறையர், பள்ளி, வலங்கை-இடங்கை பிரிவுகள், நடனமாதர், பரத்தையர் போன்றோர் இருந்தனர். பார்ப்பனர் மிகச்சிறுபான்மையினராக இருந்தனர். பிரம்மதேயங்களும் மிகக்குறைவாகவே இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. சோழர் பகுதியில் பல்லவர் காலத்தில் அதிகளவும் பின் சோழர் காலத்தில் ஓரளவும் பிரம்மதேயங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இங்கு அவை மிகமிகக் குறைவாகவே வழங்கப்பட்டிருந்தன. இவர்கள் கல்விப்பணியையும் சமயப்பணியையும் செய்துவந்தனர். ஒருசிலர் அரசு அதிகாரிகளாக இருந்தனர். பாண்டிய நாட்டுக் கோயில்களில் சித்தர் பாண்டாரங்கள்தான் தமிழில் வழிபாடு செய்து வந்தனர். பழனிமுருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், இராமேசுவரம் கோயில் போன்றவற்றில் 17ஆம் நூற்றாண்டுவரை சித்தர் பாண்டாரங்கள்தான் தமிழில் வழிபாடு செய்து வந்தனர் என்பது முன்பே சொல்லப்பட்டுள்ளது. ஆகவே பார்ப்பனர்கள் பாண்டிய நாட்டுக் கோயில்களில் வழிபாடு செய்யும் பணியில் மிகக்குறைந்த அளவே இருந்தனர் அல்லது அவர்கள் அப்பணியில் இல்லை எனலாம். அவர்கள் அதிகளவு கோயில்களில் சமையல்காரர் போன்ற பிற பணிகளையே செய்து வந்தனர். சான்றாக மதுரை மாவட்டம் திருவாதவூர் திருமலைநாதர் கோயிலுக்கு சமையல் பணிக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை உருத்திரபட்டன் என்ற பார்ப்பனன் பெற்றுக் கொண்டு அக்கோயிலின் பிரசாதம் தயாரிக்கத் தேவையான பொருட்களைக் கொடுத்து வந்தான். சோழ நாட்டைச்சேர்ந்த திருப்பாப்புலியூர் (கடலூர்) கோயிலில் பார்ப்பனர்கள் கோயில்நிலத்தை அபகரித்துக்கொண்டனர் என்பது கண்டறியப்பட்டு அவை அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன (6).
13ஆம் நூற்றாண்டில் திருப்பத்தூரில் பார்ப்பனர்களைக் கொல்லும் நிகழ்ச்சிகள் நிறைய நிகழ்ந்துள்ளன. அதற்குக் கடுமையான தண்டனைகள் தரப்பட்ட போதிலும் தொடந்து பார்ப்பனக் கொலைகள் நடந்து வந்துள்ளன. அதுபோன்றே பிரம்மதேயங்களைத் தாக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. கி.பி. 1010இல் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சிரிவல்லபவ பச்சத்தூர் வேதிமங்களம் என்ற பிரம்மதேய ஊரில் நுழைந்து அதனை அழிக்க முயற்சித்தனர். பார்ப்பனர்களின் படைக்கலங்களைப் பறித்தனர், பார்ப்பனப் பெண்களின் தாலியையும் காதையும் அறுத்தனர். அதுபோன்றே கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் மங்களம் பகுதியில் இருந்த குலசேகரச் சதுர்வேதி மங்கலத்தில் இருந்த பிரம்மதேயத்தின் பிடாகையாக இருந்த மங்கலத்தை அழித்தனர். கோயிலில் இருந்த நில ஆவணங்களைக் கொள்ளயடித்தனர். இவற்றுக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன (7). ஆகவே பார்ப்பனர்கள் பாண்டிய நாட்டில் அதிகளவோ, செல்வாக்கு மிக்கவர்களாகவோ இருக்கவில்லை. அவர்களுக்குக் கடுமையான எதிர்ப்புகள் இருந்ததாகத் தெரிகிறது.
வேளாளர்கள் அரசர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தனர். பலர் அரசு அதிகாரிகளாக இருந்தனர். இவர்கள் உழவுத் தொழில் மட்டுமின்றி நெசவு போன்ற தொழில்களிலும் ஈடுபட்டிருந்தனர். தஞ்சைவாணன் என்ற வேளாளன் முதலாம் மாறவர்மன் குலசேகரனின் படைத்தலைவனாக இருந்தான். இவன் குறித்துப் பொய்யாமொழிப்புலவர் என்ற வேளாளர் ‘தஞ்சைவாணன் கோவை’ என்ற நூலை எழுதியுள்ளார். அன்றைய காலச்சமூகம் குறித்து அறிந்து கொள்ள இந்நூல் பயனுள்ளதாக இருக்கிறது. கம்மாளர், கொல்லர், தச்சன், தட்டான், கன்னான், கல்தச்சன் என்ற ஐந்து பிரிவுகளாக இருந்தனர். இவர்கள் பூணூல் அணியும் உரிமை பெற்றவர்களாக இருந்தார்கள். அக்கால சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாகவும் இருந்தனர் (8).
பறையர்கள் கோயில்களில் பறை கொட்டுவதற்காக நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மட்பாண்டங்கள் செய்தல், காவல் பணி செய்தல், துப்புரவு பணி செய்தல், விவசாயப் பணி செய்தல் போன்ற பல்வேறு தொழில்களையும் செய்து வந்தனர். இவர்கள் பாண்டியப் பேரரசின் நிர்வாகத்தில் முக்கியப்பங்கு வகித்தனர். இவர்கள் கிராம அதிகாரிகளாக இருந்து நிலவிற்பனை ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இவர்களில் பலர் கல்வியறிவு கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர் (9).
பாண்டிய நாட்டில் பறையர் அரசு, நாடு, ஊர் முதலியவற்றில் பணியாளர்களாக விளங்கியதை 10ஆம் நூற்றாண்டிலிருந்து காண முடிகிறது. 10ஆம் நூற்றாண்டில் பறையன் ஒருவன் அரசனது மெய்க்காப்பாளனாக பணி புரிந்திருக்கிறான். இவன் அரையன் அணுக்கரில் பூவன்பறையன் எனக் கல்வெட்டில் குறிப்படப்படுகிறான். இவன் பாழ்நிலத்தினை வாங்கி, அதனைத்திருத்தி குளமும் வயலும் அதில் தோற்றுவித்து கல்விச்சாலைக்குக் கிடைப்புறம் என்ற பெயரில் அளித்தான். பிற்காலப்பாண்டியர் காலத்தில் அரசியல் அதிகாரிகளாக இருந்த பறையர் சிலர் நிலவுடமையாளர்களாகவும் இருந்துள்ளனர். இக்காலத்தில் பாண்டிய அரசின் படைப்பிரிவில் பறையர்கள் பங்குபெற்றுச் சில இடங்களில் கோட்டைத் தலைவர்களாகவும் விளங்கியுள்ளனர் எனக் கூறுகிறார் வெ. வேதாசலம் (10). ஆகவே பறையர்கள் மிகச்சாதாரண நிலையிலும் இருந்துள்ள அதே சமயத்தில் சமூகத்தின் உயர்நிலையிலும் இருந்துள்ளனர். ஆகவே அன்று சாதிவேறுபாடு என்பது இல்லை.
பாண்டிய நாட்டில் உள்ள ஒரு கல்வெட்டு பொய்யாத்தமிழ்நம்பி என்ற பெயர்கொண்ட பறையர் ஒருவர் பூசாரியாக இருந்ததைக் குறிப்பிடுகிறது. இவைபோக அரசாங்க அதிகாரிகளாக, அரசனின் பாதுகாவலர்களாக பறையர் மக்கள் இருந்ததற்கான நிறைய சான்றுகள் உள்ளன. பண்டிய நாட்டில் இக்காலகட்டத்தில் பறையர்கள் நல்ல நிலையில் இருந்தனர் என்பதற்குப் பல கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. பாண்டியர்கால மணிக்கிரீவன் என்ற பெயரிலுள்ள சிலைகள் இன்றும் ‘காவல்பறையன்’ என அழைக்கப்படுகின்றன (11). ஆகவே பாண்டிய நாட்டில் பறையர்கள் கோவிலில் பூசாரிகளாகவும் ஊர்க்காவலர்களாகவும் அரசு அதிகாரிகளகவும் இருந்துள்ளனர்.
பாண்டிய நாட்டிலும் வலங்கை இடங்கைப்பிரிவுகள் இருந்துள்ளன. இதுகுறித்து வெ.வேதாசலம், ‘பிறப்பின் அடிப்படையில் அமைந்த வருணாசிரம பிரிவிற்கு மாறான முறையில் தென்னிந்தியாவில் தொழில் அடிப்படையில் பிரிந்திருந்த குடிமக்களின் சமூக மதிப்பை அளவிட்டுக் காட்டும் குறியீட்டுச் சொற்களாக வலங்கை இடங்கைச் சொற்கள் விளங்கியிருக்கின்றன’ எனக் கூறுகிறார் (12). இக்கூற்று பொருத்தமானது. இறுதியாக வெ.வேதாசலம், “இடைக்காலப் பாண்டிய நாட்டுச் சமுதாயம் நிலவுடைமையைப் பெற்ற பெருங்குடிகள், கைத்தொழில் செய்த இடைநிலைக்குடிகள், சமூகத்தின் அடிமட்டத்திலிருந்த கடைநிலைக்குடிகள் என்று பல அடுக்குகளைக் கொண்டதாக இருந்தது. நிலவுடமையாளராக ஒவ்வொரு ஊரிலும் இருந்த பெருங்குடிகளைச் சார்ந்தே இடைநிலை, கடைநிலைக்குடிகள் வாழ்ந்தனர். நால் வருணப்பாகுபாட்டில் அச்சமுதாயம் இயங்கியதாகத் தெரியவில்லை. குறிப்பிட்ட தொழிலை வழிவழியாகச் செய்துவந்த நிலவுடமை மற்றும் தொழில் அடிப்படையில் அமைந்த குடிமுறைச் சமூகமாகவே இடைக்காலப் (கிபி. 900-1400) பாண்டிய நாட்டுச் சமுதாயம் விளங்கியது எனக் கூறுகிறார் (13).
அஞ்சினான் புகலிடம் என்பது ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்தது. அச்சத்தின் காரணமாகவோ, துன்பத்தின் காரணமாகவோ தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியேறுபவர்கள் இங்கு வந்து தங்க வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு வரிச்சலுகைகள் போன்ற பல சலுகைகள் வழங்கப்பட்டன. வெள்ளக் காலங்களிலும், பஞ்சக் காலங்களிலும் இங்கு மக்களுக்கு புகலிடம் தரப்பட்டது. தேவையான உதவிகள் செய்யப்பட்டன. முதலாம் மாறவர்மன் குலசேகரன் கால திருவல்லிப்புத்தூர்க் கல்வெட்டு இவ்வூரின் வடபெருங் கோயில், சூடிக்கொடுத்தருளிய நாச்சியார் கோயில், கிராம மன்றம் ஆகியவை இப்பகுதியிலிருந்த பல நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அஞ்சினான் புகலிடம் அமைத்துக் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறது (14).
உதிரப்பட்டி என்பது பொதுத்தொண்டு செய்யும்பொழுது இறந்த குடும்பங்களின் நபர்களுக்கு உயிரிழப்பிற்கு ஈடாக நிலம் தரப்பட்டது. இந்த நிலம் உதிரப்பட்டி நிலம் என அழைக்கப்பட்டது. இராமநாதபுரம் கருங்குளத்தைச் சேர்ந்த பெருந்தேவப்பள்ளன் என்பவன் கடும் மழையின் போது குளத்தில் ஏற்பட்ட உடைப்பை அடைக்கும் பணியைச் செய்யும் பொழுது இறந்து போனான். அதற்கு இழப்பீடாக உதிரப்பட்டி நிலம் தரப்பட்டதோடு அவனுக்கு நினைவுச் சின்னமும் எடுக்கப்பட்டது. கோயில் திருப்பணி செய்யும்பொழுது காயம் பட்டவர்களுக்கும், தவறான தீர்ப்புகளால் மனவுளைச்சல் ஏற்பட்டவர்களுக்கும் இந்த உதிரப்பட்டி நிலம் வழங்கப்பட்டது. மணமான ஒரு பார்ப்பனப்பெண் நஞ்சு குடித்து இறந்து போனாள். அவளது கணவன்தான் அதற்குக் காரணம் என அவன் விசாரிக்கப்பட்டான். பின் அவன் குற்றவாளி இல்லை என்பதை அறிந்தபின் அவனது நல்ல பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்கும், மன உளைச்சல் ஏற்பட்டு மனநிம்மதி இழப்பிற்கும் ஈடாக அவனுக்கு உதிரப்பட்டி நிலம் வழங்கப்பட்டது. இது இராமநாதபுரம் திருப்பத்தூர் கல்வெட்டு சொல்லும் செய்தி (15).
பெண்கள்: பார்ப்பனப் பெண்கள் சொந்தமாக சொத்து வைத்திருந்தனர். கோயில்களுக்கு விளக்கு எரிக்க தானங்களை வழங்கினர். பார்ப்பன விதவைகளும் தனியாக இருந்த பெண்களும் சொத்து அவர்களுடையது எனினும் தானமோ கொடையோ தரும்பொழுதும் நிலத்தை விற்கவோ வாங்கவோ நேரிட்ட போதும் தங்கள் உறவினர் ஒருவரை முதுகண்ணாக வைத்தே இவற்றைச் செய்துள்ளனர். கோயில்களுக்கு அவர்கள் நிலங்களையும் தானமாகத் தந்துள்ளனர். அதுபோன்றே பிற உயர்குடிப் பெண்களும் சொத்துக்களைச் சொந்தமாகக் கொண்டிருந்ததோடு, அனைத்து வகைத் தானங்களையும் செய்துள்ளனர். இவர்கள் யாரையும் முதுகண்ணாக வைத்துக் கொள்ளவில்லை. இப்பெண்கள் துறவியாக இருந்து சமயப்பணிகள் பல செய்துள்ளனர். சமணப் பள்ளிகளில் ஆசிரியராகவும் குரத்தியராகவும் இருந்துள்ளனர். சாதாரணப் பெண்களும் கோயில்களுக்குத் தானங்களை வழங்கியுள்ளனர். அன்று பெண்ணை மணம் முடிக்கும் போது மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு சீதனம் வழங்கும் முறை இருந்து வந்தது. அதனால் பெண்ணுக்கு நிலங்கள் சீதனமாக வழங்கப்பட்டன. பெண்வீட்டாரும் தங்கள் பெண்களுக்கு நிலங்களையும் இதர செல்வங்களையும் வழங்கினர் (16). ஆகவே பெண்கள் சொத்துரிமை கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் அன்று சில ஆண்களும் பெண்களும் அடிமைகளாகவும் இருந்தனர் பாண்டிய நாட்டிலும் சிறிய அளவில் அடிமை முறை நிலவியது (17).
அஞ்சினான் புகலிடம், உதிரப்பட்டி ஆகியன அக்காலப் பாண்டிய சமூகத்தின் உயர்ந்த மனநிலையை வெளிப்படுத்தும் அதே சமயம் அக்காலத்தில் இருந்த அடிமை முறை அக்காலச் சமூகத்தின் தரம் தாழ்ந்த நிலையை வெளிப்படுத்துகிறது.
பாண்டியப்பேரரசும் தமிழ் மொழியும்:
சங்க காலப் பாண்டியர்களைப் போலவே பாண்டியப் பேரரசு காலப் பாண்டியர்களும் தமிழ் மொழி மீது பற்று கொண்டவர்களாக இருந்துள்ளனர். அவர்களது மெய்கீர்த்திகள் இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழ் குறித்துப் பேசுகின்றன. ‘இயல் இசை நாடகம் எழில்பெற வளர’ எனவும், ‘மூவகைத்தமிழ் முறைமையின் வளர’ எனவும் பாண்டியர்களின் மெய்கீர்த்திகள் குறிப்பிடுகின்றன. மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1216-1244) தனது மெய்கீர்த்தியின் 11ஆவது வரியில் ‘சுருதியும் தமிழும் சொல்வளம் குலவ’ எனக் குறிப்பிடுகிறான். அவனது மெய்கீர்த்தியின் 12ஆவது வரியில், ‘எழுவகைப்பாடலும் இயலுடன் பரவ’ எனக் குறிப்பிடுகிறான். பாண்டியர்கள் தமிழை இசையுடன் சேர்த்து வளர்த்தார்கள். பாண்டிய அரசனுடைய இருக்கைக்கு ‘இசையளவுகந்தான்’ என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. போர்க்களக் காட்சிகளையும் பாண்டியர்களின் மெய்க்கீர்த்திகள் ஆடல்பாடலுடன்தான் வர்ணிக்கின்றன.
பாண்டியர் காலத்தில் தேவாரம் ஓதுவதற்கு என்றே தனி மண்டபம் கட்டப்பட்டிருந்தது. ‘திருக்கைக்கோட்டி’ என்ற பெயரால் அதனை அழைத்தனர். இந்த மண்டபங்கள் குறித்து திருவீழிமிழலை கல்வெட்டும், கல்லிடைக்குறிச்சி கல்வெட்டும் பேசுகின்றன. அதுபோன்றே திருப்பதிகம் ஓதுவதற்கென்றே விசயபாண்டிய நல்லூர் என்ற கூத்தகுடியில் தனியாக வரி வசூலிக்கப்பட்டது. தலைசிறந்த ஆடல் அணங்குகளும், பாடகர்களும் தங்கள் நிகழ்வை நடத்துவதற்கென்றே நிருத்த மண்டபம் பாண்டியர் காலத்தில் இருந்துள்ளது. அக்காலத்தில் கோயில் பாடகன் நியமிக்கப்பட்டிருந்தான். பாடல்கள் ஓதுவதற்குத் தானம் அளிக்கப்பட்டது. பாண்டியர் காலத்தில் பஞ்சமரபு என்ற இசைநூல் அறிவனார் என்பவரால் எழுதப்பட்டது. அது முழுவடிவில் இன்று கிடைத்துள்ளது. கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குப் பின்பும் 12ஆம் நூற்றாண்டுக்கு முன்பும் அது எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் நுண்ணிய ஆழமான இசை இலக்கணத்தை பஞ்சமரபு இன்றி அறிந்திருக்க முடியாது என வீ.பா.க. சுந்தரம் கூறுகிறார். வைணவர்களுக்கே உரிய ஆன்மீக இசைவடிவம்தான் அரையர் சேவை. இராமானுசர் காலம் முதல் பாண்டிய நாட்டிலுள்ள 18 திவ்ய தேசங்களிலும் இந்த அரையர் சேவை நடந்து வருகிறது. இது வைணவத்திற்கே உரிய ஆடல், பாடல், நாடகம் ஆகியவற்றை உள்ளடைக்கிய ஒரு புதுமையான ஆன்மீக இசை வடிவம். இது பாண்டிய நாட்டில் தோன்றி வளர்ந்து பேணிப் பாதுகாக்கப்பட்டது. இன்றும் அதன் எச்சம் பாண்டிய நாட்டில் உள்ளது (18).
தமிழ்க்கடிகை: செங்கல்பட்டுக் கோட்டத்தில் கோகர நாட்டில் காவனூர் எனும் பொய்யாமொழி மங்கலம் என்ற ஊரில் ஒரு கடிகை இருந்துள்ளது. இக்கடிகையில் இருந்த அறிஞர்களில் ஒருவர்தான் முத்தமிழ் ஆசிரியரான தமிழ் கரை கண்ட சாத்தனாருடைய சந்தானத்தில் பெருநம்பிகள் என்பவர் இவருக்குக் காணியாக பொய்யாமொழி மங்கலம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு. தமிழ்ப்புலவர் ஒருவருக்கு ஒரு ஊரே காணியாக வழங்கப்பட்டுள்ளது என்பது சிறப்பாகும். கடிகைகள் பொதுவாக வடமொழி சார்ந்ததாகவே இருக்கும். ஆனால் இது தமிழ்மொழிக்கான கடிகை. இக்கடிகை மிக நெடுங்காலத்திலிருந்தே இயங்கி வருகிறது. இக்கடிகைக்கு பாண்டிய மன்னர்கள் புத்துயிர் அளித்துள்ளனர். பாண்டியர் காலத்தில் சரசுவதி பண்டாரம் எனப்படும் நூல்நிலையங்கள் கோயிலில் அமைக்கப்பட்டன. சேரன் மகாதேவி அப்பன் கோவிலில் சடாவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் அதிகாரி ஒருவனால் சரசுவதி பண்டாரம் என்ற நூல் நிலையம் அமைக்கப்பட்டது. இதே மன்னன் காலத்தில்தான் சிதம்பரம் நடராசர் கோயிலில் சரசுவதி பண்டாரம் அமைத்ததற்கான கல்வெட்டு உள்ளது. ஆகவே பாண்டிய அரசர்கள் இசையோடு கூடிய தமிழை வளர்த்தனர். நூல் நிலயங்களை அமைத்து நூல்களைப் பாதுகாத்தனர். தமிழ்க் கடிகைகளை அமைத்தனர். தமிழ்ப்புலவர்களுக்கு காணி நிலங்களை வழங்கினர் (19).
பார்ப்பனர்களும் பாண்டியர்களும்:
இடைக்காலப் பாண்டியர்கள் மிகக் குறைந்த அளவிளான பிரம்ம தேயங்களையே உருவாக்கினார்கள். அதுபோன்றே பேரரசு காலப் பாண்டியர்களும் மிகக் குறைந்த அளவிலான பிரம்மதேயங்களையே உருவாக்கினார்கள் கி.பி. 1200க்குப்பிந்தைய 100 ஆண்டுகாலம் பாண்டியப் பேரரசுக்கு உரிய மிக முக்கிய காலம். இக்காலத்தில் மிகக்குறைவான பிரம்மதேயங்களே பாண்டியர்களால் உருவாக்கப்பட்டன எனக் கூறுகிறது தமிழ் வரலாற்றுக்குழு (20). உருவாக்கப்பட்ட ஒருசில பிரம்மதேயங்களும் கோயிலுக்கு என்றுதான் உருவாக்கப்பட்டன. அத்துடன் பார்ப்பனர்களுக்கும் சிறிது நிலம் வழங்கப்பட்டது. சான்றாக முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1257இல் எல்லா வெற்றியாளரைப் போலவே தமிழக அளவில் வெற்றிபெற்ற பிறகு தில்லை கோயிலுக்கு, கழுமலம், செம்பியம், சேற்றூர் போன்ற பல கிராமங்களை நத்தம் புறம்போக்கு நிலங்களாக ஆக்கி சுந்தர பாண்டிய சதுர்வேதி மங்களத்தை உருவாக்கினான். அவைபோக 200 வேலி நிலங்கள் வேதம், சுருதி படித்த 121 பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பிரம்மதேயம் சோழநாட்டில் வழங்கப்பட்டது.
மருத்துவர், அம்பட்டர், கணக்கர், தச்சர், குயவர், கொல்லர், உவச்சர், முடி திருத்துவோர், பாடிக்காப்பான், மருத்துவச்சி, வெட்டியான் போன்றோர் அங்கு குடியமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு இந்த 200 வேலி நிலத்திலிருந்தே சிலபகுதிகள் இவர்களுக்கான ஊதிய நிலங்களாக வழங்கப்பட்டன. மாடு மேய்ச்சல் நிலம், சுடுகாட்டுக்கு இடம் ஆகியன தனியாக ஒதுக்கப்பட்டன. நிலங்கள் வரி நீக்கி வழங்கப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட அளவுநெல் தில்லை நாயகன் பெரும் பண்டாரத்துக்கு செலுத்த வேண்டும் என்ற உத்தரவு முன்பே வழங்கப்பட்டிருந்தது. வேளாண் தொழிலைச்செய்ய வேளாளரும் அங்கு நியமிக்கப்பட்டனர். இந்த பிரம்மதேயத்தில் பெரும்பகுதி கோயிலுக்கும், ஒரு சிறுபகுதி பிறகுடியினருக்கும் வழங்கப்பட்டது. மீதியிருந்த ஒரு பகுதி மட்டும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டது இதுபோன்ற ஒருசில பிரம்மதேயங்களே அக்காலத்தில் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டன. அதனால்தான் பாண்டியப் பெருவேந்தர் காலம் குறித்த நூலை எழுதிய தமிழ் வரலாற்றுக் குழுவினர் மிகக்குறைந்த அளவே பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயங்கள் வழங்கப்பட்டன என இரண்டு மூன்றுமுறை குறிப்பிடுவதோடு, சிறுபான்மையினராகவே பார்ப்பனர்கள் இருந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர் (21).
பெரும்பாலான பாண்டிய நாட்டு கோயில்கள் அனைத்திலும் சித்தர் பண்டாரங்கள் அல்லது உள்ளுர் தமிழ் பூசகர்கள்தான் தமிழ் மொழியில் வழிபாடு செய்து வந்தனர். பறையர்களும் பூசகர்களாக இருந்துள்ளனர். பாண்டியர்கள் தமிழ்ப்பற்று கொண்டவர்களாக இருந்ததால் தமிழ் வழிபாட்டையே ஆதரித்தனர். அதனால் பிரம்மதேயங்கள் குறைவாகவே இருந்தன. பார்ப்பனர்களும் மிகக் குறைவாகவே இருந்தனர். மேலும் பாண்டிய நாட்டில் பார்ப்பனர்களுக்கும் பிரம்மதேயங்களுக்கும் எதிர்ப்புகள் இருந்தன என்பதைப் பார்ப்பனர்கள் பலர் கொல்லப்பட்டதும், சில பிரம்மதேயங்கள் மீது நடந்த தாக்குதலும் தெரிவிக்கின்றன. மேலும் அவர்கள் கோயில்களில் பூசாரிகளாகவும் இருக்கவில்லை. இவை போன்ற காரணங்களால் பாண்டிய நாட்டில் வைதீக பார்ப்பனியமோ, சமற்கிருதமோ செல்வாக்கு பெறவில்லை. அவர்களிடம் அரசியல் அதிகாரமோ சமூகச் செல்வாக்கோ இருக்கவில்லை.
எப்பொழுதெல்லாம் வைதீகப் பார்ப்பனியம், முழுமையான அரசியல் அதிகாரமும் நிலபுலங்களும் செல்வவளமும் கொண்டு செல்வாக்குமிக்க ஒரு உயர் சமூகமாக இருக்கிறதோ அங்கு சமற்கிருதமயமாக்கமும் சாதியமும் உருவாகி வலிமையடைந்து விடும் என்பதை இந்திய வரலாறு பலவகைகளிலும் உறுதி செய்கிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலை உருவாகும் காலகட்டத்தில்தான் இன்றைய சாதி அமைப்புகள் தோன்றின என நாம் உறுதியாகக்கூற முடியும். இந்தச்சூழ்நிலை பாண்டியப் பேரரசு காலம் வரை தோன்றவில்லை. ஆகவே பாண்டியப் பேரரசு காலத்தில் இன்றைய படிநிலை அமைப்பு கொண்ட சாதியம் தோன்றவில்லை.
பார்வை:
1. பாண்டியப் பெருவேந்தர் காலம், தமிழ் வரலாற்றுக்குழு, தமிழ் வளர்ச்சித்துறை, 2000, பக்: 8-20
2. பக்: 3, 21
3. பக்: 20-26
4. பக்: 55-60
5. பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார், ரிதம், 2022, பக்: 132, 133.
6. பாண்டியப் பெருவேந்தர் காலம், தமிழ் வரலாற்றுக்குழு, தமிழ் வளர்ச்சித்துறை, 2000, பக்: 97-101
7. பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும் (கி.பி.900-1400), முனைவர் வெ. வேதாசலம், தனலட்சுமி பதிப்பகம், 2018, பக்: 79-82
8. பாண்டியப் பெருவேந்தர் காலம், தமிழ் வரலாற்றுக்குழு, தமிழ் வளர்ச்சித்துறை, 2000, பக்: 114-116
9. பக்: 118, 119
10. பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும் (கி.பி.900-1400), முனைவர் வெ. வேதாசலம், தனலட்சுமி பதிப்பகம், 2018, பக்: 66, 67, 69
11. இராசராச சோழன், மன்னர்மன்னன், பயிற்றுப்பதிப்பகம், 2021, பக்: 207
12. பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும் (கி.பி.900-1400), முனைவர் வெ. வேதாசலம், தனலட்சுமி பதிப்பகம், 2018, பக்: 84
13. பக்: 105
14, 15. பாண்டியப் பெருவேந்தர் காலம், தமிழ் வரலாற்றுக்குழு, தமிழ் வளர்ச்சித்துறை, 2000, பக்: 137-139
16. பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும் (கி.பி.900-1400), முனைவர் வெ. வேதாசலம், தனலட்சுமி பதிப்பகம், 2018, பக்: 90-93
17. பக்: 95, 96
18. பாண்டியப் பெருவேந்தர் காலம், தமிழ் வரலாற்றுக்குழு, தமிழ் வளர்ச்சித்துறை, 2000, பக்: 318-323
19. பக்: 323-326
20. பக்: 57, 58
21. பக்: 57, 58, 97
- கணியன் பாலன், ஈரோடு