வலங்கை இடங்கைச் சாதிப் பிரிவுகள்:
பிற்காலச்சோழர் காலத்தில் பேசப்படும் பொருளாக இருந்த வலங்கை இடங்கைச் சாதிகள் குறித்து, “காஞ்சிபுரத்தில் இம்முறை நெடுங்காலமாக வழங்கி வந்ததாக அறிகிறோம். அந்நகரத்தில் வலங்கை-இடங்கை கோயில், வலங்கை-இடங்கை மண்டபங்கள், வலங்கை-இடங்கை தேவரடியார்கள் என்ற பாகுபாடு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரத்தில் இருந்த வலங்கை-இடங்கைப் பிரிவினர் ஒரே கோயிலில் வழிபடுவதில்லை என்ற முடிவுடன் வாழ்ந்தனர் என்பதைக் கல்வெட்டுகளால் அறிகிறோம்” என தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட தமிழ்நாட்டு வரலாற்று நூல் குறிப்பிடுகிறது (1). ஆகவே பல்லவர்களின் தலைநகராக இருந்த காஞ்சியில் வலங்கை-இடங்கைச் சாதிப்பிரிவுகள் மிக நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. அங்கு தேவரடியார்கள் இருந்துள்ளனர். அவர்களும் கூட வலங்கை-இடங்கை என்ற வேறுபாடுகளுடன் இருந்துள்ளனர். சோழர்காலத் தேவரடியார்களிடம் கூட இந்த வேறுபாடு இருந்ததில்லை.
பல்லவர் காலத்திலிருந்தே இந்த வலங்கை இடங்கைச் சாதிப்பிரிவுகள் இருந்ததாக யாரும் குறிப்பிடுவதில்லை. ஆனால் முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலிருந்துதான் இந்த வலங்கை இடங்கைச் சாதிகளிடேயே ஏற்பட்ட மோதல்கள் அல்லது அவர்களுக்கிடையேயான உரிமைக் கோரிக்கைகள் குறித்த கல்வெட்டுகளை அதிகம் பார்க்க முடிகிறது. ஆனால் உண்மையில் இப்பிரிவுகள் பல்லவர் காலத்திலிருந்தே செயல்பட்டு வந்துள்ளன என்பதுதான் உண்மை. காஞ்சிதான் பல்லவர் காலத் தலைநகராக 500 வருடத்துக்கு மேல் இருந்துள்ளது. அந்தக் காஞ்சிதான் இந்த வலங்கை இடங்கைப் பிரிவுகளுக்கும் தலைமையகமாக இருந்துள்ளது. பார்ப்பனியத்தின் வைதீகச் சிந்தனைகளான சாதியம் போன்றவற்றுக்கு எதிராகப் பல்லவர் காலத்திலேயே உருவானதுதான் இந்த வலங்கை இடங்கைப் பிரிவுகள். வடநாட்டிலிருந்து கொண்டு வந்து புகுத்தப்பட்ட நால்வருண சமுதாய அமைப்புக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்புதான் இவ்விடங்கை வலங்கைச் சாதிப்பாகுபாடு என்று ஒரு சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். வருணாசிரம அமைப்பில் பார்ப்பனர்கள் பெற்ற தனி உரிமைகளைக் கண்டு மனம்புழுங்கிய பார்ப்பனரல்லாதார் ஒன்றுகூடித் தாங்களும் அரசினிடமிருந்து பல்வேறு உரிமைகளைப் பெறுவான் வேண்டி இவ்வித அமைப்புகளைத் தோற்றுவித்தனர் எனக் கருதப்படுகிறது (2).
வேளாண்மையைச்சேர்ந்த வேளாளர்களும் கிராமப் புறங்களில் வேளாண்மைப் பணிகளில் இருந்த உழவர், பறையர் உட்பட்ட பல்வேறு தொழில் பிரிவுகளைச் சார்ந்தவர்களும் வலங்கைப் பிரிவில் இருந்துள்ளனர். ஆனால் நகரங்களில் இருந்த வணிகர்களும், கம்மாளர்களும் பல்வேறு கைத்தொழில்களில் ஈடுபட்ட கைவினைஞர்களும் அது சார்ந்த பணியில் ஈடுபட்ட கீழ்மட்ட தொழில் பிரிவுகளும் இடங்கைப் பிரிவில் இருந்துள்ளனர். இந்த இரண்டு பிரிவுகளும் தங்களது உரிமைகளுக்காகவும் பார்ப்பனர்களது சாதியம் போன்ற வைதீகக் கொள்கைகளை எதிர்த்தும் மிகக் கடுமையாகப் போராடின. சான்றாக கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்த வேளாளரான அப்பர் (திருநாவுக்கரசர்) தனது பாடல்களில் பார்ப்பனர்களின் குலம், கோத்திரத்தைக் கடுமையாகச் சாடுகிறார். பார்ப்பனர்களை எள்ளி நகையாடுகிறார்.
காஞ்சியில் வலங்கை இடங்கைச் சாதிகள்:
இந்தப் பிரிவுகள் பல்லவர் காலத்தில் காஞ்சியில்தான் முதலில் தோன்றின. இப்பிரிவுகளை நாம் அவர்களின் தொழில் அடிப்படையில் வேளாண் பிரிவு, தொழில்பிரிவு என இரண்டாகப் பிரிக்கலாம். வேளாண்பிரிவு வலங்கைச் சாதிகளாகவும், தொழில்பிரிவு இடங்கைச்சாதிகளாகவும் உருவானது. காஞ்சிபுரம் 500 வருடங்களுக்கும் மேலாக பார்ப்பனியத்தின் கோட்டையாக அதன் அடித்தளமாக இருந்து வந்துள்ளது. அங்கு தொடக்கத்தில் சமண பௌத்த மதங்களும் வலிமையாக இருந்து வந்துள்ளன. ஆனால் ஏழாம் நூற்றாண்டு வாக்கில் அவை வலிமையிழந்தன. 8ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் வைதீக பார்ப்பனியம் வலிமை மிக்கதாக ஆகியது. வைதீக பார்ப்பனியம் பல்லவர்களின் இறுதிக்காலத்தில் பல்லவ அரசின் ஆதரவோடு சாதியத்தைத் தமிழ்ச் சமூகத்தில் திணிக்க முயற்சித்தது. அப்பொழுது வேளாளர் தலைமையில் இருந்த வலங்கைச்சாதியினரும், கம்மாளர் தலைமையில் இருந்த தொழில் பிரிவு மக்களும் இதனைக் கடுமையாக எதிர்த்துள்ளனர். பல்லவர் காலத்தில் பார்ப்பனியத்துக்கும் சாதியத்துக்கும் இதுபோன்ற கடுமையான எதிர்ப்புகள் இருந்ததன் காரணமாக சாதியத்தைத் திணிப்பதைப் பார்ப்பனியம் கைவிட்டது என்பதால் வலங்கை – இடங்கைச் சாதிப் பிரிவுகள் குறித்தச் செய்திகள் அன்று அதிகம் வெளிவரவில்லை.
சோழர்களும் வலங்கை இடங்கைச் சாதிகளும்:
நாளடைவில் வைதீகப் பார்ப்பனியத்தின் சாதியத் திணிப்பால்தான் இந்த வலங்கை - இடங்கை அமைப்புகள் உருவாகின என்ற நினைவு இல்லாது போனது. சோழ அரசில் வேளாளர்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும், அரசின் வலங்கைப் பிரிவினராகவும் இருப்பதில் பெருமை கொண்டவர்களாக ஆயினர். ஆகவே ‘சோழ மன்னர்களின் படைகளில் வலங்கையினர் சிறப்பிடம் அளிக்கப் பெற்றிருந்தனர்…. முதலாம் இராசராசனுடைய படையில் பல்வேறு வலங்கை வேளைக்காரப் படைப்பிரிவுகள் இருந்திருக்கின்றன எனவும் முதலாம் இராசேந்திரனின் படைப்பிரிவிலும் அவனுடைய அரசு அதிகாரிகளாக வலங்கையினர் விளங்கினர் என்பதையும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்ட பெயர்களால் அறிகிறோம் (3). பிற்காலச் சோழர்காலப் படைப்பிரிவுகளில் தொடக்கத்திலிருந்தே இந்த வலங்கைப் பிரிவினர் இருந்து வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இடங்கைப்பிரிவினர் குறித்த செய்திகள் தொடக்கத்தில் அதிக அளவு இருக்கவில்லை. ஆனால் இவர்களுக்கும் சோழர் படைப்பிரிவுகளோடு தொடர்பு இருந்துள்ளது என அறிய முடிகிறது. ஆகவே இப்பிரிவுகள் சோழர் காலத்துக்கு முன்பிருந்தே இருந்து வந்துள்ளன என அறியலாம். ஆனால் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்துதான் இந்த இரு பிரிவுகளுக்கும் இடையே இருந்த முரண்பாடுகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன. அதற்கு முன் முதலாம் இராசராசன் காலத்திலோ அவனது மகன் காலத்திலோ அவர்களுக்கிடையே இருந்த வேறுபாடுகள் வெளிவரவில்லை.
வலங்கை இடங்கைச் சச்சரவு:
சோழர் காலத்தில் மிகுந்த செல்வாக்கோடு வேளாளர் இருந்து வந்தனர் என்பதால் தங்களது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு வேளாளர் ஆதரவு இன்றியமையாதது என்பதை உணர்ந்த வைதீக பார்ப்பனியம் அவர்களைத் தனக்குச் சமமாக அல்லது தனக்கு அடுத்த நிலையில் வைத்துக் கொண்டு அவர்களின் ஆதரவைப் பெற முயன்றது. மனு நூலின்படி வேளாளர்கள் நாலாம் இடத்துக்குரிய சூத்திரர்கள். ஆனால் வேளாளர்களை பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் வைத்த பார்ப்பனியம் அவர்களுக்கு பார்ப்பனர்களுக்கு வழங்கும் சலுகைகளை எல்லாம் வழங்கவேண்டும் போன்ற விதிமுறைகளை உருவாக்கியது. அதன் காரணமாக பார்ப்பனர்களைப் போலவே வேளாளருக்கும் சமூக உரிமைகளும், வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டன. சான்றாக பார்ப்பனர்களைப் போலவே வேளாளர்களுக்கும் மரணதண்டனை வழங்கக்கூடாது என்ற விதியை பார்ப்பனர்கள் ஏற்படுத்தினர். இதனை இரண்டாம் குலோத்துங்கனின் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. வேளாளர் ஒருவருக்கு மரணதண்டனை அளிக்கக் கூடாது என்ற விதியை எடுத்துக் கூறிய பட்டரின் அறிவுரையை ஏற்று வேளாளர் ஒருவருக்கு மரண தண்டனைக்குப் பதில் கோயிலுக்கு நிவந்தம் அளிக்கும் தண்டனை வழங்கப்பட்டது (4).
‘வேளாளர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் அளிக்கப்பட்ட இத்தனிச்சலுகைகள் நாட்டின் மற்ற பிரிவினரிடையே மனக்கசப்பை உருவாக்கியது’ எனத் தமிழ் நாட்டு வரலாற்று நூல் கூறுகிறது (5). பார்ப்பனர்களுக்குச் சமமாக தனிச்சலுகைகள் வழங்கப்பட்டதின் காரணமாக பல்லவர் காலத்தில் வைதீக பார்ப்பனியத்தைக் கடுமையாக எதிர்த்து வந்த வேளாளர்கள் பிற்காலத்தில் அதற்குப் பெரிய எதிர்ப்பைக் காட்டவில்லை.. இடங்கைப் பிரிவின் தலைவர்களாகச் செயல்பட்ட ஐந்து வகைப்பட்ட கம்மாளர்கள். ‘பார்ப்பனர்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என அறிவித்தனர். ஆசாரியர் என்ற பட்டத்தைப் பூண்டனர். அவர்கள் பார்ப்பனர்களைத் தலைமை குருக்களாக ஏற்க மறுத்தனர். அவர்தம் நான்கு வேதங்களுக்குப் புறம்பாக ஐந்தாவது வேதம் ஒன்று தங்களுக்கு இருப்பதாக அறிவித்தனர். பார்ப்பனரைப் போல் பூணூல் அணிந்து அக்னி கோத்திரம், ஔபாசனம் செய்ய அரசிடம் உரிமை கோரினர்……. பூணூல் அணியும் உரிமையை மட்டும் அரசும் பார்ப்பனரும் ஏற்றுக் கொண்டனர்’ (6) ‘இடங்கைப்பிரிவில் இந்தக் கம்மாளர்கள் தலைமையில் வணிகர்கள், பல்வேறு கைத்தொழில் செய்பவர்கள் இருந்தனர்’ என வலங்கை-இடங்கைச் சாதியார் வரலாறு எனும் சுவடி ஒன்று கூறுகிறது (7). ஆகவே இடங்கைச் சாதிகளைச் சேர்ந்த கம்மாளர், வணிகர், கைத்தொழில் செய்பவர்கள் போன்றோர் பார்ப்பனர்களை அவர்களது சாதியத்தை எதிர்த்து வந்துள்ளனர். நாளடைவில் வேளாளர்களுக்குத் தந்தது போல இவர்களும் சில உரிமைகளைக் கோரி பெற்றுள்ளனர். இவ்வுரிமையை அவர்கள் வற்புறுத்திய போதுதான் வலங்கை இடங்கைச் சாதியாரிடையே சண்டையும் சச்சரவும் நிகழ்ந்தன (8).
12, 13ஆம் நூற்றாண்டுகளில் மக்களின் எழுச்சி:
‘கைவினைஞர்கள் மற்றும் வணிகர்கள், முற்கால மலைப்பழங்குடிகள் உள்ளிட்ட விவசாயிகள் கூட்டத்தார் தம் வலிமையைக் காட்ட வலங்கை, இடங்கை மகாசபை அமைப்பில் ஒன்றுசேர்ந்தனர்….. 12, 13ஆம் நூற்றாண்டுகளில் இந்தியப் பெருங்கடலில் கடல்வழி வாணிகப் பெருக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வணிகர்கள் மற்றும் கைவினைஞர்களின் முக்கியத்துவம் அதிகமாயிற்று. அவ்வாறே முற்கால மலைப்பழங்குடிகள் சமவெளிப்பகுதிகளில் நில உடமை பெற்றதால் இவர்களின் முக்கியத்துவமும் அதிகரித்தது. பார்ப்பன வெள்ளாள நில உடமையாளர்களால் முன்பு அடக்கி வைக்கப்பட்ட இம்மக்கள் எழுச்சி பெற்றது அக்கால கல்வெட்டுகளில் நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13ஆம் நூற்றாண்டின் சமூகத் தன்மையாக இவ்வெழுச்சியைக் கருதலாம்’ எனக் கூறுகிறார் நொபோரு கரோசிமா (9).
மூன்றாவது குலோத்துங்கனின் 40ஆம் ஆட்சியாண்டு ஊட்டத்தூர்க் கல்வெட்டு (கி.பி. 1218), இடங்கைப் பிரிவினரான சுருதிமான்கள் என்பார் ஒன்றுகூடி தமக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்துக் கூறுகிறது. ‘இனி இடங்கைப் பிரிவினர் 98 சாதியாரும் தமக்குள் வேற்றுமை எதையும் வளர்த்துக் கொள்ளக் கூடாது என்றும், ஒருதாய் பிள்ளையாக வாழ வேண்டும் என்றும், இடங்கைப் பிரிவில் எவருக்கேனும் இழிவு நேர்ந்தால் அனைவரும் ஒருங்கிணைந்து தம் உரிமைகளுக்காகப் போராடி நிலைநாட்ட வேண்டும் என்றும், தாம் நடந்து செல்லும் போது தமக்கு முன்பு குடை பிடித்தல், சங்கு கொம்பு ஊதுதல், குழல் ஊதுதல் ஆகிய சிறப்புச் சின்னங்களைத் தம் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டும் என்றும் தம்முள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ளத் தம் சிறப்புச் சின்னங்களாக நாரையின் இறகு, தொங்கும் தலைமுடி ஆகியவற்றைக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் உடன்படிக்கை செய்து கொண்டனர். இவ்வுடன்படிக்கையை மீறுபவர்கள் தம் சாதியிலிருந்து தள்ளி வைக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் சுருதி மான்களாகக் கருதப்படமாட்டார்கள் என்றும் முடிவெடுத்தனர் என்று அக்கல்வெட்டு விளக்கமாக உரைக்கிறது’ எனத் தமிழ் நாட்டு வரலாறு நூல் கூறுகிறது (10). ஆகவே இடங்கைப் பிரிவின் 98 சாதியாரும் தங்களுக்குள் வேற்றுமை இல்லாது, ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும் என முடிவு செய்து தங்கள் அனைவரையும் சுருதிமான்களாக அறிவித்துக் கொண்டனர்.
அது போன்றே வலங்கை – இடங்கை பிரிவினர் இருவரும் இணைந்து வெள்ளாளர், பார்ப்பனர், அரசு அதிகாரிகள் ஆகியவர்களுக்கு எதிராகப் போராடிய செய்திகளும், அவர்களுக்குள் இருந்த வேற்றுமையை மறந்து தங்களுக்குள் ஒற்றுமை உடன்படிக்கை செய்து கொண்ட செய்திகளும் சில கல்வெட்டுகளில் உள்ளன. சில இடங்களில் காணியாட்சி உரிமை கொண்டாடுவதை எதிர்த்தும், வரிகளை அவர்களே கையாண்டு வருவதை எதிர்த்தும், தாமே வரி நிர்ணயம் செய்து கொள்ளவும், அரசின் வரி மிக மிக அதிகமாக இருந்ததாலும் வலங்கை – இடங்கை ஆகிய இரு பிரிவினரும் ஒன்றிணைந்து வெள்ளாளர், பார்ப்பனர், அரசு அதிகாரிகள் ஆகியவர்களுக்கு எதிராகப் போராடியுள்ளனர் என்பதைச் சில கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன (11).
நாடு கிராமம் நகரம் ஆகியவற்றின் சபைகளிடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையைக் குறிப்பிடும் இரத்னகிரி கல்வெட்டு, இந்த உடன்படிக்கைக்கு தீங்கிழைப்பவன் பார்ப்பனனே ஆயினும், அவனது கண்கள் பிடுங்கப்படும், மூக்கு அறுக்கப்படும்… அவன் பன்றியாகக் கருதப்படுவான்…. வீரர்களால் கொல்லப்படுவான்…. என அறிவிக்கிறது (AR 1914: 153), காலம் 13ஆம் நூற்றாண்டு (12). நாடு, நகரம், கிராமம் ஆகிய வட்டார சபைகளின் பார்ப்பன வெறுப்பு இதில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது.
சோழர் ஆட்சி பலவீனம் அடையத்தொடங்கிய காலத்திலிருந்து (சுமார் கி.பி. 1150) அரசின் அரசியல் அதிகாரம் நிலையற்ற தன்மையைக் கொண்டதாக ஆகியது. பல்லவர் காலத்தில் இருந்த பண்டமாற்றுப் பொருளாதாரம் சோழர்களின் முற்போக்குத் திட்டங்களால் பணமாற்றுப் பொருளாதாரமாக ஆகியது. சோழர் காலத்தில் ஏற்பட்ட தொழில், வணிக வளர்ச்சியால் கைவினைஞர்கள், வணிகர்கள், வேறு பல தொழில்களைச் செய்பவர்கள் ஆகிய அனைவரும் வளர்ச்சி பெற்று சக்தி மிக்கவர்களாக ஆனார்கள். அதுபோன்றே மலைவாழ் மக்கள், பழங்குடிகள், நந்தமான்கள், பள்ளிகள் போன்ற பல்வேறு கீழ்நிலைமக்களும் சோழப் பேரரசின் இராணுவத்தில் இணைந்து பணியாற்றியதாலும், வேளாண் வளர்ச்சியாலும் இன்னபிற தொழில் வளர்ச்சியாலும் நில உடமையாளர்களாகவும் தொழில் வணிகம் போன்றவற்றில் வளர்ச்சி பெற்றவர்களாகவும் ஆனார்கள்.
இச்சூழ்நிலையில்தான், உழவர்கள் அமைப்பான சித்திர மேழிப் பெரிய நாடு, முன்னாள் மழைப்பழங்குடிகள் தலைமை வகித்த இடங்கை வலங்கை அமைப்புகள், பாதுகாப்பு வீரர்களைக் கொண்ட வணிகர் அமைப்புகளான ஐநூற்றுவர் அமைப்பு போன்ற வட்டாரம் கடந்த அமைப்புகள் உருவாகி வலுப்பெறத்தொடங்கின. இவை போக நாடு என்ற வட்டார அமைப்பு மிகவும் முக்கியத்துவம் உடையதாகவும் அனைவருக்கும் பாதுகாப்பைத் தரும் அமைப்பாகவும் உருவாகியது. அதனால்தான் 12, 13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் உடன்படிக்கையை மீறுபவன் நாட்டுத்துரோகி என அதிக அளவில் சொல்லப்பட்டனர் (13). அதனால்தான் 12, 13ஆம் நூற்றாண்டுகளில் பார்ப்பனர், வேளாளர்களை விட பிற கைவினைஞர்கள், வணிகர்கள், முற்கால மலைப்பழங்குடிகள் போன்ற சமூகக் குழுக்கள் வலிமை பெறத் தொடங்கின. அதன் காரணமாக இவர்கள் அக்காலகட்டங்களில் வலிமை பெற்று இடங்கை, வலங்கை போன்ற அமைப்புகளில் சேர்ந்து செயல்பட்டுள்ளனர். இக்காலங்களில் வலங்கை இடங்கை அமைப்புகள் இரண்டும் ஒன்றிணைந்து பார்ப்பனர், வேளாளர், அரசு அதிகாரிகள் போன்றவர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரிச்சலுகை போன்ற பலவற்றைப் பெற்றுள்ளது. மேலும் இந்த அமைப்புகள் பார்ப்பனர்கள் மீது பெரும்பகையும் வெறுப்பும் கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பதை இரத்னகிரி கல்வெட்டு உறுதி செய்கிறது. உடன்படிக்கைக்கு தீங்கிழைப்பவன் பார்ப்பனனே ஆயினும், அவனது கண்கள் பிடுங்கப்படும், மூக்கு அறுக்கப்படும்… அவன் பன்றியாகக் கருதப்படுவான்…. வீரர்களால் கொல்லப்படுவான்…. என அக்கல்வெட்டு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.
சாதி – சொல் விளக்கம்: 13ஆம் நூற்றாண்டு ஆந்திரக் கல்வெட்டுகளில், சாதி என்ற சொல் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சாதிப்பெயர் (Sub-caste) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதிற்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் காகதீய கல்வெட்டுகளில் வரும் சாதிப்பெயர் போன்ற சில சொற்கள் முதன்மையாகத் தொழில் அடிப்படையிலான தரநிலையையே சுட்டுகின்ற சொற்கள் ஆகும். அவை சாதிகளை அல்லது குறிப்பிட்ட சாதியைச் சுட்டவில்லை எனவும் தல்போட் (Talbot 2001: 55) குறிப்பிடுகிறார் என நொபோரு கரோசிமா கூறுகிறார் (14). அடுத்ததாக பதிமூன்றாம் பதினான்காம் நூற்றாண்டுக்கு முன்புவரை தோன்றாத இந்திய நாகரிகத்தின் தனிச்சிறப்பான நிறுவனமான சாதிகள், இந்து அரசமுறையின் பலவீனத்திற்கும் அழிவுக்கும் காரணி அல்ல. ஆனால் அதன் விளைவு ஆகும் (Inden 1990:1992) என இன்டேன் இடைக்கால வங்காள நிலை குறித்துக் கூறியுள்ளதாகக் கூறுகிறார் (15). மேலும் தமிழ்க் கல்வெட்டுகளில் சாதி என்று குறிப்பிடப்பட்டாலும், இச்சொல்லை இக்காலச் சமூகவியலாளர்கள் வழங்கும் பொருளில் வழங்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் கூறுகிறார் (16). சான்றாக 1218ஆம் ஆண்டு கல்வெட்டு இடங்கைப் பிரிவின் 98 சாதியாரும் தங்களுக்குள் வேற்றுமை இல்லாது, ஒரு தாய் மக்களாக வாழவேண்டும் என முடிவு செய்தனர் எனக் கூறுகிறது. இன்றைய சாதியக் கண்ணோட்டத்தில் அனைத்துச் சாதியினரையும் ஒரு தாய் மக்களாகக் கருதுவது என்பது இயலாத ஒன்று. ஆகவே அன்று சாதி என்பது தொழிலை, வகுப்பை அல்லது குடியைப் பிரதிநிதிப்படுத்தியது. மேலும் தல்போட் ஆய்வின் அடிப்படையில் இச்சாதி போன்ற குழுக்கள் கீழ்க்கண்ட மூன்று குறியீடுகளைக்கொண்டிருந்தன என அவர் கூறுகிறார்.
1. பட்டப்பெயரால் தெரியும் சமூக நிலை
2. தொழிலால் தெரியும் சமூக நிலை
3. குடிவழி அல்லது குருதிவழி உறவால் தெரியும் சமூக நிலை (17). ஆகவே அன்று சாதி என்ற சொல் இன்றைய பொருளில் இருக்கவில்லை. அது தொழிலை, வகுப்பை அல்லது குடியைப் பிரதிநிதிப்படுத்தியது எனலாம்.
சாதி என்ற சொல்லை முதல்முதலாக தொல்காப்பியர் பயன்படுத்துகிறார். அவரது பொருளதிகார மரபியல் சூத்திர எண் 44, 64 ஆகிய இரண்டு இடங்களில் ‘நீர்வாழ் சாதி’ என வருகிறது. இங்கு சாதி என்பது உயிரினங்களில் ஒரு பிரிவு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பொருளில்தான் 13, 14 ஆம் நூற்றாண்டு கால வலங்கை இடங்கைச் சாதிகளும் சாதி என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளன. அதாவது சாதி என்பது சமூகத்தில் வாழும் மக்களில் ஒரு பிரிவு என்பதே அதன் பொருள். ஒரு சமூகப் பிரிவின் தொழில், அதன் சமூக மதிப்பு நிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இந்த சாதிப்பிரிவு இருந்தது. இன்றைய சாதியைப்போன்று பிறப்பு, அகமணமுறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சாதியாக அது இருக்கவில்லை. ஒருவகையில் அந்தச்சாதிப் பிரிவைச் சங்ககாலக் குடி போன்றதாகக் கருதலாம். குடி என்ற சொல்லுக்குப் பதிலாகச் சாதி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது எனலாம்.
13, 14 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் இடம்பெறும் சாதி என்ற சொல் இன்றைய பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பதை மேலே சொல்லப்பட்ட தரவுகள் உறுதி செய்கின்றன. ஆகவே கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை சாதி என்பது இன்றைய பொருளில் நடைமுறையில் இருக்கவில்லை எனலாம். ஆகவே 14ஆம் நூற்றாண்டுவரை சாதிகளுக்கிடையே கலப்பு மணங்கள் நடந்து வந்தன என்பதோடு இந்த கலப்பு மணங்களுக்கு அன்று எதிர்ப்பு இருந்ததாகவோ அல்லது இன்று நடைபெறும் கலப்பு மணங்களுக்கு எதிரான ஆணவக்கொலைகள் அன்று நடந்ததாகவோ எந்த தகவலும் கல்வெட்டுகளில் காணப்படவில்லை. சங்ககாலத்தில் வகுப்புகள் இருந்தன. பெரும்பாலான சாதாரண மக்களைக் கொண்ட 4ஆம் வகுப்பு என்பது கீழ் மக்கள் எனப்பட்டது. மேலே உள்ள முதல் மூன்று வகுப்புகள் மேல் வகுப்புகள் எனப்பட்டன. அன்று கீழ் மக்கள் மேல் மக்கள் ஆவதும் மேல் மக்கள் கீழ் மக்கள் ஆவதும் நடந்து வந்தது. அது போன்றே கீழ்நிலையில் இருந்த முல்லைவாழ் மக்களான சுருதிமான், நந்தமான் போன்றவர்களும் மலைவாழ் பழங்குடிகள், பள்ளிகள், முதலிகள் முதலானோரும் சோழர் காலத்தில் போர் வீரர்களாகி நில உடமைகளைப் பெற்று வேளாளர்கள் என்ற உயர்நிலையை அடைந்தனர். கைவினைஞர்கள் பலர் அதுபோன்றே பொருளாதாரத்தில் வளர்ந்து மேல்நிலையை அடைந்தனர் (18).
இவ்வாறு மேல்நிலையை அடைந்தவர்கள்தான், உழவர்கள் அமைப்பான சித்திர மேழிப் பெரிய நாடு, முன்னாள் மழைப்பழங்குடிகள் தலைமை வகித்த இடங்கை வலங்கை அமைப்புகள், பாதுகாப்பு வீரர்களைக் கொண்ட வணிகர் அமைப்புகளான ஐநூற்றுவர் அமைப்பு போன்ற வட்டாரம் கடந்த அமைப்புகளை உருவாக்கி வலுப்பெறத்தொடங்கினர். இவர்கள் பார்ப்பனர், வெள்ளாளர், அரசு அதிகாரிகள் ஆகியோரின் மேலாண்மையை எதிர்த்துக் கலகம் செய்து உரிமைகளைப் பெற்றனர். மேலும் அவர்கள் அனைத்துச் சாதிக் (தொழில் அல்லது வகுப்பு) குழுக்களையும் சகோதரக் குழுக்களாகவே கருதினர். அதனால்தான் 1218ஆம் ஆண்டு ஊட்டத்தூர்க் கல்வெட்டில் இடங்கைப் பிரிவின் 98 சாதியாரும் தங்களுக்குள் வேற்றுமை இல்லாது, ஒரு தாய் மக்களாக வாழவேண்டும் எனக் கூறுவதோடு தங்களைச் சுருதிமான்கள் என அழைத்துக் கொள்கின்றனர்.
1218க்குப்பின் சோழர் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின் ஒரு குழப்பநிலையும் ஆபத்தான சூழ்நிலையும் உருவாகியது. இக்காலகட்டத்தில் 1227இல் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள்தான் திருவரஞ்சுரம், வாலிகண்டபுரம் கல்வெட்டுகள். இந்த கல்வெட்டுகளில் பார்ப்பனர், ஆரியர், நந்த மக்கள், மலையமான்கள், அந்தணர், சம்புவர், வாணிய நகரங்கள், பொற்கோளர், கைக்கோளர், நியாயத்தார், சாலியர் இடங்கை 98 கலனைகள் ஆகிய அனைவரும் ஒருவருக்கு வந்த நன்மை, தீமை அனைவருக்கும் ஆகுவதாக என அறிவித்து தங்கள் ஒற்றுமையையும் சகோதர உணர்வையும் வெளிப்படுத்துகின்றனர். அதேசமயம் அதே (கி.பி. 13) நூற்றாண்டில் வெட்டப்பட்ட இரத்னகிரி கல்வெட்டில் நாடு, நகரம், கிராமம் ஆகிய வட்டார அவைகளின் பார்ப்பன வெறுப்பு மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. அதில் உடன்படிக்கைக்கு தீங்கிழைப்பவன் பார்ப்பனனே ஆயினும், அவனது கண்கள் பிடுங்கப்படும், மூக்கு அறுக்கப்படும்… அவன் பன்றியாகக் கருதப்படுவான்…. வீரர்களால் கொல்லப்படுவான்…. என அக்கல்வெட்டு கூறுகிறது. ஆகவே அன்றைய ஒட்டுமொத்த சமூகமே அதாவது நாடு, நகரம், கிராமம் ஆகிய அனைத்து மக்கள் அமைப்புகளும் கடுமையான பார்ப்பன வெறுப்பைக் கொண்டிருந்தன என்பதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது எனலாம்.
ஆகவே 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் பார்ப்பன வெறுப்பும், வெள்ளாளர் எதிர்ப்பும் வெளிப்படுவதோடு, பிற சமூகங்கள் அனைத்தும் தாங்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் எனவும் தாங்கள் அனைவரும் சகோதரர்கள் எனவும் கருதும் ஒரு சூழ்நிலை இருந்ததை வெளிப்படுத்துகின்றன. அவைகளுக்கிடையே தொழில், வகுப்பு, சமூக நிலை போன்றனவற்றில் ஏற்றத்தாழ்வுகள் இருந்த போதிலும் அனைவரையும் ஒரு தாய் மக்களாக, சகோதரர்களாகக் கருதிய சூழ்நிலை என்பது, பிறப்பின் அடிப்படையில், அகமணமுறை அடிப்படையில் இருக்கும் இன்றைய சாதி அமைப்பு, அன்று இருக்கவில்லை என்பதை உறுதி செய்கின்றன. ஆகவே அன்று பயன்படுத்தப்பட்ட சாதி என்ற சொல் ஒரு மக்கள் பிரிவை, ஒரு மக்கள் குழுவை, ஒரு தொழில் குழுவை அல்லது நாட்டாரவை போன்ற ஒரு மக்கள் அமைப்பைப் பிரதிநிதிப்படுத்தியதே ஒழிய இன்றைய பொருளில் சாதி என்ற சொல் அன்று பயன்படுத்தப்படவில்லை.
கி.பி. 12ஆம், 13ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சோழ அரசின் வீழ்ச்சி, சாதாரண மக்களின் எழுச்சியைக்கொண்டு வந்தது. அதன் விளைவாக உழவர்கள் அமைப்பான சித்திர மேழிப் பெரிய நாடு, முன்னாள் மழைப்பழங்குடிகள் தலைமை வகித்த இடங்கை வலங்கை அமைப்புகள், பாதுகாப்பு வீரர்களைக்கொண்ட வணிகர் அமைப்புகளான ஐநூற்றுவர் அமைப்பு போன்ற வட்டாரம் கடந்த அமைப்புகள் உருவாகி வலுப்பெறத் தொடங்கின என்பதோடு நாடு என்ற வட்டார அமைப்பு மிகவும் முக்கியத்துவம் உடையதாகவும் அனைவருக்கும் பாதுகாப்பைத்தரும் ஒரு வலுவான அமைப்பாகவும் உருவாகியது. இந்த வழங்கை இடங்கை போன்ற அமைப்புகளிலும், இன்ன பிற அமைப்புகளிலும் சாதி என்ற பெயரில் இருந்த குழுக்கள் அவர்களின் தொழில், சமூகமதிப்பு நிலை, அவர்களின் பொருளாதார நிலையடிப்படையிலான வகுப்பு போன்ற பலவற்றை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்த வரிசை என்பது இன்றைய சாதி அமைப்புகளில் இருக்கும் படிநிலைவரிசை போன்றதல்ல.
13ஆம் நூற்றாண்டு முழுவதும் அரசியல் நிலையற்ற தன்மையும் சமூக ஒழுங்கின்மையும் நிலவிய காலகட்டத்தில் சாதி உருவாக்கத்திற்கான அடிப்படைகள் தோன்றியதாகக் கருதுகிறார். நொபோரு கராசிமா (19). அதற்குக் காரணமாக சாதி பற்றிய செய்திகளைக் கொண்ட கல்வெட்டுகள் இக்காலகட்டத்தில் நிறையத் தோன்றின (20). எனவும், இந்த சாதி அமைப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் சாதி பற்றிப் பேசுவதில் பெருமை அடைந்தன எனவும் சாதித் தீர்மானங்களுக்கு கட்டுப்படாதவர்கள் புறந்தள்ளப்படுவார்கள் என அவை எச்சரிக்கை செய்தன எனவும் அவர் கூறுகிறார் 1225இல் வாணியக் குடி நகரம், ‘நம்முடைய சாதிக்குக் கடவர்’ எனக் கூறியதாகவும், பதினெண் விசயத்து திருவாயிப்பாடி நாட்டார் ‘எங்கள் சாதிக்கும் எங்கள் வம்சத்துக்கும்’ என்று பேசின எனவும் அவர் கூறுகிறார் (21).
சாதி என்ற சொல் இன்றைய பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்று அவரே கூறுகிறார். அடுத்ததாக இந்தக் கல்வெட்டுகளில் எந்தத் தனிப்பட்ட சாதியும் தனது பெருமைகளைக் கூறிக் கொள்ளவில்லை, கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை.. இந்தக் கல்வெட்டுகளில் வலங்கை இடங்கை அமைப்புகள், நாட்டாரவை, வணிக நகரவை போன்ற நிர்வாக அமைப்புகள் போன்றவைகள்தான் தங்கள் சாதிப் பெருமையை அதாவது தங்கள் அமைப்புகளின் பெருமையைப் பேசின. இங்கு சாதி என்பது அமைப்பு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த அமைப்புகள்தான் கட்டுப்பாடுகளை விதித்தன. இந்த வலங்கை இடங்கை அமைப்புகளில் பல்வேறு தொழில் குழுக்களும் வகுப்புகளும் இருந்தன, அது போன்றே நகர, நாட்டார் அவைகளிலும் அந்த நகரத்தைச் சேர்ந்த அந்த நாட்டைச்சேர்ந்த பல்வேறு வகைப்பட்ட மக்களும் இருந்தனர். இந்த அமைப்புகள் தான் தங்களைச் சாதிகளாகக் கூறிக் கொண்டன. ஆனால் அவர் இவை போன்ற அமைப்புகளின் பெருமைகளை, கட்டுப்பாட்டுத் தீர்மானங்களை, தனிப்பட்ட சாதி ஒன்று கூறுவதாகத் தவறாகப் புரிந்து கொண்டார்.
மேலும் இக்காலகட்டத்தில் பார்ப்பனர்களுக்கும் அவர்களது கருத்து நிலைக்கும் எதிராக மக்களுடைய தீராப்பகை உணர்ச்சி நிலவியதையும் அவர் கூறுகிறார். மேலும் அக்காலகட்டத்தில் சாதாரண மக்களின் எழுச்சி இருந்ததாகவும், அவர்களிடம் பார்ப்பன வெறுப்பும், வெள்ளாளர் எதிர்ப்பும் இருந்தன எனவும் அவர் கூறுகிறார். 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்கச்சூர் கல்வெட்டொன்று (SII, 26, 333, செங்) வலிமையைப் பெருக்கிக் கொண்ட கீழ்ச்சாதிக்காரர்களால் தங்களுடைய ஆதிக்கம் எதிர்க்கப்படுகிறது என்று பார்ப்பனர்களும், வெள்ளாளர்களும் புலம்புவதை பதிவு செய்கிறது (22). ஆகவே அரசியல் நிலையற்ற தன்மையும், சமூக ஒழுங்கின்மையும் நிலவிய அக்காலகட்டத்தின் போது தமிழ்நாட்டில் சாதிகளின் உருவாக்கத்திற்கான அடிப்படைகள் தோன்றின என்ற அவரது கருத்து ஏற்கத்தக்கதல்ல.
பாண்டிய நாட்டிலும் வலங்கை இடங்கைப்பிரிவுகள் இருந்துள்ளன. அவை குறித்து வெ.வேதாசலம், ‘பிறப்பின் அடிப்படையில் அமைந்த வருணாசிரம பிரிவிற்கு மாறான முறையில் தென்னிந்தியாவில் தொழில் அடிப்படையில் பிரிந்திருந்த குடிமக்களின் சமூக மதிப்பை அளவிட்டுக்காட்டும் குறியீட்டுச் சொற்களாக வலங்கை இடங்கைச் சொற்கள் விளங்கியிருக்கின்றன’ எனக் கூறுகிறார் (23). மேலும் பாண்டியப்பேரரசு காலத்தில் (கி.பி.900-1400) இருந்த சமூகம் குறித்து வெ.வேதாசலம், “இடைக்காலப் பாண்டிய நாட்டுச் சமுதாயம் நிலவுடைமையைப்பெற்ற பெருங்குடிகள், கைத்தொழில் செய்த இடைநிலைக்குடிகள், சமூகத்தின் அடிமட்டத்திலிருந்த கடைநிலைக்குடிகள் என்று பல அடுக்குகளைக் கொண்டதாக இருந்தது. நிலவுடமையாளராக ஒவ்வொரு ஊரிலும் இருந்த பெருங்குடிகளைச் சார்ந்தே இடைநிலை, கடைநிலைக்குடிகள் வாழ்ந்தனர். நால் வருணப்பாகுபாட்டில் அச்சமுதாயம் இயங்கியதாகத் தெரியவில்லை.
குறிப்பிட்ட தொழிலை வழிவழியாகச் செய்துவந்த நிலவுடமை மற்றும் தொழில் அடிப்படையில் அமைந்த குடிமுறைச் சமூகமாகவே இடைக்காலப் பாண்டிய நாட்டுச் சமுதாயம் விளங்கியது எனக் கூறுகிறார் (24). ஆகவே வலங்கை இடங்கைச்சாதிகள் என்பன வர்ணாசிரமத்திற்கு எதிரான தொழில் அடிப்படையில் பிரிந்திருந்த குடிமக்களின் சமூக மதிப்பை அளவிட்டுக் காட்டும் குறியீட்டுச் சொற்களாக இருந்தன. மேலும் இக்காலகட்டத்தில் பல்வேறு கீழ்நிலை மக்களும், பழங்குடிகளும் நிலவுடமையாளர்களாகவும், பல்வேறு தொழில்செய்து வளர்ச்சி பெற்றவர்களாகவும் ஆகினர். ஆகவே பிற்காலப் சோழர்-பாண்டியர் காலச்சமூகம் குறிப்பிட்ட தொழிலை வழிவழியாகச் செய்துவந்த குடிமுறைச் சமூகமாகவும், தொழிலை மாற்றி அமைத்துக் கொள்ளும் சூழ்நிலை நிலவிய சமூகமாகவும் இருந்துவந்தது. அதாவது சாதியற்ற வர்க்க, வகுப்பு அடிப்படையிலான சமூகமாக அன்றைய சோழர்-பாண்டியர் காலச் சமூகம் இருந்தது.
சாதிப் படிநிலையின் தோற்றத்திற்கு காரணம்: நொபோரு கராசிமா, ‘சாதிப் படிநிலை என்றழைக்கப்படுவதின் நடைமுறை இரீதியான செயல்பாட்டை கருத்தில் கொண்டால், பார்ப்பனர்களுக்கும், அரசருக்கும், மதத்திற்கும் அரசியலுக்கும் உள்ள கூட்டிசைவாக்கம் என்பதை ஏற்றுக்கொள்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று படுகிறது’ எனவும் ‘உண்மையான சாதிப்படிநிலை தரப்படுத்தல் அரசர்கள், அரச அலுவலர்கள், வட்டாரத்தலைவர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே சமூக ஒழுங்கைப் பேணுவதற்கு சாதிப்படிநிலையை அரசியல் அதிகாரம் முறைப்படுத்தியது’ எனவும் கூறுகிறார் (25). மேலும் சாதி உருவாக்கத்தில் அரசனுக்கு மையமான பங்கு உள்ளது என டர்க்சு (Driks 1987, 1989) கருதுகிறார் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார் (26). ஆகவே ‘இன்றைய சாதிப்படிநிலை என்பதைப் பார்ப்பனர்களும் அரசர்களும் அரசியல் அதிகாரமும் ஒன்றிணைந்து மதத்தோடு சார்ந்ததாக அதனை நடைமுறைப்படுத்தினர்’ என அவர் கூறுவதாகக் கொள்ளலாம்.
இந்த நிலையில் 13ஆம் நூற்றாண்டு முழுவதும் அரசியல் நிலையற்ற தன்மையும், சமூக ஒழுங்கின்மையும் நிலவிய காலகட்டத்தின்போது தமிழ்நாட்டில் இன்றைய படிநிலைச் சாதிகளின் உருவாக்கத்திற்கான அடிப்படைகள் தோன்றின என அவர் கூறுவது முரண்பட்டதாக உள்ளது. அரசனுடைய அரசியல் அதிகாரமும் பார்ப்பன கருத்தியலும் ஒன்றிணைந்து சாதியக் கட்டமைப்பைக் கொண்டுவந்தன எனில் 13ஆம் நூற்றாண்டில் பார்ப்பன கருத்துநிலைக்கான எதிர்ப்பும், அரசியல் நிலையற்ற தன்மையும் இருக்கும் சூழ்நிலையில் சாதியக் கட்டமைப்புக்கான அடிப்படைகள் எப்படி உருவாக முடியும் எனத் தெரியவில்லை. ஆகவே அவரது இக்கருத்து ஏற்கத்தக்கதல்ல. மேலும் இக்கால கட்ட வலங்கை இடங்கை அமைப்புகள், தம்மிடத்தில் உள்ள சாதிப் பிரிவுகள் அனைத்தையும் ஒரு தாய் மக்கள் எனக் கூறுவதோடு அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வையும் பறைசாற்றுகின்றன. அத்துடன் பார்ப்பன கருத்துநிலைக்கான பகை உணர்வையும் கொண்டதாக அவை உள்ளன. இந்த நிலையில் அவை எப்படி படிநிலை அடிப்படையிலான இன்றைய சாதி அமைப்புக்கான அடிப்படையை உருவாக்க முடியும். கண்டிப்பாக அக்காலகட்டத்தில் சாதிப்படி நிலைக்கான அடிப்படை உருவாகவில்லை என்பதே உண்மை. இது அவரது தவறான புரிதல். இக்காலச்சமூகம் குறிப்பிட்ட தொழிலை வழிவழியாகச் செய்துவந்த குடிமுறைச் சமூகமாகவும், தொழிலை மாற்றியமைத்துக் கொள்ளும் சூழ்நிலை நிலவிய சமூகமாகவும், சாதியற்ற வர்க்க, வகுப்பு அடிப்படையிலான சமூகமாகவும் இருந்தது என்பதே உண்மை..
“எப்பொழுதெல்லாம் வைதீகப் பார்ப்பனியம், முழுமையான அரசியல் அதிகாரமும் நிலபுலங்களும் செல்வவளமும் கொண்டு செல்வாக்குமிக்க ஒரு உயர் சமூகமாக இருக்கிறதோ அங்கு சமற்கிருதமயமாக்கமும் சாதியமும் உருவாகி வலிமையடைந்து விடும் என்பதை இந்திய வரலாறு பலவகைகளிலும் உறுதி செய்கிறது” என்ற எமது முந்தைய கருத்தோடு “இன்றைய சாதிப்படிநிலை என்பதை பார்ப்பனர்களும் அரசர்களும் அரசியல் அதிகாரமும் ஒன்றிணைந்து மதத்தோடு சார்ந்ததாக அதனை நடைமுறைப்படுத்தினர்” என்ற கருத்தையும் இணைத்துக் கொள்ளலாம். இந்த இரண்டு கருத்துகளும் செயல்படும் சூழ்நிலை உருவாகும் காலகட்டத்தில்தான் இன்றைய சாதி அமைப்புகள் தோன்றின என நாம் உறுதியாகக் கூற முடியும். இந்தச்சூழ்நிலை தமிழ்நாட்டில் 14ஆம் நூற்றாண்டு வரை தோன்றவில்லை என்பதே உண்மை. இச்சூழ்நிலை விசயநகர நாயக்கர் ஆட்சிக்காலங்களில் 15, 16ஆம் நூற்றாண்டுகளில் உருவாகியபோதுதான் இன்றைய பிறப்பு, அகமணமுறை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட படிநிலைச் சாதியக் கட்டமைப்பு தோன்றி வளர்ந்தது. பின் 18ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அது மேலும் வளர்ந்து இறுகி இன்றைய நிலையை அடைந்தது. ஆங்கிலேயர் காலகட்டத்தில்தான் சாதியப் பெருமைகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுகளில் அல்ல.
சான்று:
1. தமிழ்நாட்டு வரலாறு, சோழப்பெருவேந்தர் காலம், (இரண்டாம் பகுதி – கி.பி. 900-1300), தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு (1996-1999), தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடு, தமிழ்நாடு அரசு. பக்: 61
2. பக்: 59-60
3. பக்: 62-63
4, 5. பக்: 25
6. பக்: 53
7. பக்: 64
8. பக்: 65.
9. சுருக்கமான தென் இந்திய வரலாறு, நொபோரு காரசிமா, தமிழில் முனைவர் ப. சண்முகம், மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், 2018, பக்; 212.
10. தமிழ்நாட்டு வரலாறு, சோழப்பெருவேந்தர் காலம், (இரண்டாம் பகுதி – கி.பி. 900-1300), தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு (1996-1999), தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடு, தமிழ்நாடு அரசு. பக்: 64, 65
11. பக்: 67, 68
12. சுருக்கமான தென்னிந்திய வரலாறு, நொபோரு காரசிமா, தமிழில் ப. சண்முகம், மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், 2018, பக்; 213-214
13. தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ. 800-1500) நொபுரு காரசிமா & எ. சுப்பராயலு, NCBH, 2022, பக்: 27, 28
14. பக்: 34, 35
15. பக்: 38
16, 17. பக்: 35
18. பக்: 17-20
19. பக்: 37, 38
20. பக்: 34, 35.
21. பக்: 22, 23
22. சுருக்கமான தென்னிந்திய வரலாறு, நொபோரு காரசிமா, தமிழில் ப. சண்முகம், மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், 2018, பக்; 216
23. பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும் (கி.பி.900-1400), முனைவர் வெ. வேதாசலம், தனலட்சுமி பதிப்பகம், 2018, பக்: 84
24. பக்: 105
25. தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ. 800-1500) நொபுரு காரசிமா & எ. சுப்பராயலு, NCBH, 2022, பக்: 37
26. பக்: 39.
- கணியன் பாலன்