
அப்பாவும் அம்மாவும்
ஒருவருக்கொருவர்
தாழ்வில்லை என்பதைப்
பதவி உயர்வில்
காட்டிக்கொண்டிருந்தார்கள்
கல்வியில் களைத்தவர்களில்லை
கடுமுழைப்பிற்கும்
சளைத்தவர்களில்லை
காலையில் அப்பாவுடன்
பள்ளிக்கு
மாலையில் அம்மாவுடன்
வீட்டுக்கு
ஓர் உடன்பாட்டின்
அடிப்படையில்
என்னுடன் ஒப்பந்தமானார்கள்
அவர்களுக்கிடையிலும்
சந்திப்பு
அமாவாசையாய்
பெளர்ணமியாய்...
ஆம்
என்தம்பி எனக்கு
இன்னும்
அதிசய நட்சத்திரம்
நாங்கள்
மூச்சடக்காமல்
முத்துக்குளித்தோம்
தட்டாமல்
கதவுகள் திறந்தன
தேவைகள் நிறைவேறின
இருவர்
பையிலும் கையிலும்
அமெரிக்கன் அட்டைமுதல்
அனைத்துப் பண அட்டைகளும்
கண்சிமிட்டும்
அம்மாவின் கைகளில்
இருந்ததைக்காட்டிலும்
கருவறையில்தான்
அதிகமாய் இருந்திருக்கிறோம்
செவிலித்தாய் பணிப்பெண்
கைகளே
எங்கள் தொட்டில்
அந்தக்
கைத்தொட்டில்களே
எங்களைக்
கண்ணயர்த்தின
பணிப்பெண்ணின்
சலிப்பு வார்த்தைகளைத்
தாலாட்டாய்ச்
சலித்து எடுத்தோம்
அம்மா இப்படியெனில்
அப்பாவின் நிலை...
பாட்டியும் தாத்தாவும்
இல்லாத பாவி நாங்கள்
இருந்திருந்தால் கொஞ்சம்
இங்கிதம் எனும்
இலக்கியம் கற்றிருப்போம்
இப்போது
எனக்கும் திருமணமாம்
நினைவுச்சுருள்
பின்னோக்கி ஓடி
விரிகிறது
பாசம்
தவணையாய்
அரவணைப்பு
புன்னகையாய்
பெற்றோர் சந்திப்பு
சூரிய சந்திர கிரணமாய்...
துண்டுபடா வரவு செலவாய்
வாழ்க்கை இருந்தும்
ஏக்கம் கசிந்த
அந்தத்
தொட்டில்காலங்கள்...!
என்னை
இன்னும்
சுடுகிறது
- பிச்சினிக்காடு இளங்கோ (