லாகூரில் கூடிய காங்கிரஸ் அபேதவாதிகள்,
"காங்கிரஸ் திட்டத்தில் முதலாளிகளுக்கு நன்மை இருக்கின்றதே யொழிய பொது ஜனங்களுக்கு எவ்வித பயனும் கிடையாது" என்றும்
"காந்தியின் கிராமப் புனருத்தாரணத் திட்டத்தால் கிராமவாசிகளுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை" என்றும்"ஒரு சில சுயநலக்கூட்டத்தார்களே அரசியலின் பேரால் பலனடைந்து வருகிறார்களே ஒழிய பாமர ஜனங்களுக்கு யாதொரு பலனும் ஏற்பட இடமில்லை" என்றும்
"முதலாளிகளைக் காப்பாற்றவும், சமதர்ம இயக்கத்தில் கிராம ஜனங்கள் சேராமல் இருப்பதற்காக கிராமத்தார்களை ஏமாற்றவுமே காந்தியார் கிராமப் புனருத்தாரண சங்கம் ஏற்படுத்தி இருக்கிறாரே ஒழிய வேறு இல்லை" என்றும்
"மதம் என்பதை அடியோடு ஒழிந்தாலொழிய ஜனசமூக முன்னேற்றமும், பொதுஜன ஒற்றுமையும் ஏற்படாது" என்றும்
"மதத்தில் ஏமாற்றம் தவிர வேறு ஒன்றுமே இல்லை" என்றும் பட்டவர்த்தனமாக பல பொதுக் கூட்டங்களில் பேசினார்கள்.
இதைச் சுயமரியாதைக்காரர்கள் சொன்னால் அவர்களை தேசத் துரோகிகள் என்றும், அரசாங்கக் கூலிகள் என்றும், நாஸ்திகர்கள் என்றும், தென்னாட்டுக் காங்கிரஸ் கூலிகள் ஊளை இடுகின்றன.
இப்போது லாகூரில் பேசியவர்கள் சுயமரியாதைக்காரர்கள் அல்ல என்பதையும், காங்கிரஸ்காரர்கள் என்பதையும் தெரிந்தால் என்ன சொல்லப் போகிறார்கள்? முக்காடு போட்டுக் கொள்ளப் போகிறார்களா? இல்லாவிட்டால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகப் போகிறார்களா? அல்லது இரண்டோடு மானமும் இல்லாமல் மூன்றும் கெட்டவர்கள் இராம பஜனையும், புராணப் பிரசங்கமும் செய்யப் போகின்றார்களா என்று கேட்கின்றோம்.
(குடி அரசு கட்டுரை 13.01.1935)
***
ஈரோடு முனிசிபாலிட்டி - மிருகக் காக்ஷி சாலை
இவ்வூர் பீபிள்ஸ் பார்க்கிலிருக்கும் மிருக காக்ஷிற்கு முனிசிபல் கமிஷனரின் வேண்டுகோளுக் கிணங்கி சென்னை கார்ப்பொரேஷன் சங்கத்தார் 2 பெண் சிங்கங்களும், 2 மான்களும் இலவசமாய் அளித்ததை இவ்வூர் முனிசிபாலிட்டியார் தங்களிடமிருக்கும் லாரி மூலம் சென்னையி லிருந்து அம் மிருகங்களை கொண்டுவந்திருக்கிறார்கள். ஏற்கனவே மிருகக் காக்ஷியில் இருந்து வரும் கரடி, முதலை ஆகிய நூதன மிருகங்களுடன் இம்மிருகங்களையும் வைத்து நன்கு போஷிக்கப்பட்டு வருவதோடு பொதுஜனங்கள் சொற்ப கட்டணத்தில் மிருகங்களைப் பார்வையிடவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
ஏற்கனவே இருக்கும் கரடிகள் இரண்டும் பெண் கரடிகளாக விருப்பதால் அவைகளில் ஒரு பெண் கரடியைக் கொடுத்து ஒரு ஆண் கரடியை இந்த சிங்கம் கொண்டு வந்த இடத்திற்கே கொடுத்து பெற்றுக்கொண்டால் மிக நலமாக விருக்கும் அதேபோல் சிறுத்தையையும் மாத்திக் கொள்ளலாமென நினைக்கிறோம்.
(பர்)
(குடி அரசு பத்திராதிபர் குறிப்பு 13.01.1935)