இயக்குநர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய சிறந்த படைப்புகளின் தொடர்ச்சியாக ஆகச் சிறந்த படைப்பாக மிளிர்கிறது 'வாழை'. எளியவர்களால் அரங்குகள் நிரம்பி வழிகிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் தான் நடந்து வந்த வழித் தடத்தின் கற்களோடும், முட்களோடும், வலிகளோடும் இளைப்பாறுதல்க ளோடும் கூடிய ஒரு சிறிய துணுக்கினைக் கட்டுடைத்து விரித்துப் பார்த்தலே கதையாக உணர்த்தப்படுகிறது.
1990களின் பிற்பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் அமைந்த கதைக்களத்தில் நிலவுடைமைக் குமுகத்தின் கொடுமைகளை, தொழிலாளிகள் படும்பாடுகளை, பாடுகளுக்கு நடுவிலும் ஊடாடுகிற துயரமான, எளிய மக்களின் வாழ்வைப் பேசுகிறது.
கணவனில்லை. பட்ட கடனை அடைக்க முடியவில்லை. இறந்து போன மனிதனின் நினைவாக, ஆறுதலாக, ஆற்றலாகக் கையில் பச்சை குத்தப்பட்ட அரிவாள் சுத்தியல் சின்னம்.
கடனை அடைக்க 'வாழைத்தார்'களைச் சுமக்கும் பணிகளைக் குடும்பமே செய்கிறது. திருமணத்திற்கு நிற்கும் மகள், பள்ளிச் செல்லும் மகன், கால்களில் மிதிபடும் வாழ்க்கை.
பள்ளிக்கு விடுமுறை என்றால் மகிழ்வு கொள்ளும் மாணவர்கள் நடுவில் விடுமுறை என்றால் வாழை சுமக்க வேண்டுமே என அழுகையும், அஞ்சுதலும், கெஞ்சுதலும் ஆன சிவணைந்தன், சேகரின் வாழ்க்கை.
ஓர் உருவா கூலி உயர்வுக்காகத் தொழிலாளிகளை அணிதிரட்டிப் போராடும் கனி (கலையரசன்)
ஒரு உருவா கூலியை விட்டு அதைச் சரி செய்ய வாழைத்தார் சுமையின் மேலே தொழிலாளர்களைப் பயணிக்கச் செய்த ஊதியக்கணக்கின் வெளிப்பாட்டு உருவாக சதீஷ்குமார்.. அரைப்படி நெல்லை கூலியாகக் கேட்டதற்கு 44 உயிர்களை தீ மூட்டிக் கொலைச் செய்த கொடுமைகள் கண்முன்னே வந்து போகிறது.
இளம் மாணவர்களின் துயரப்பட்ட வாழ்வில் சில ஆசிரியர் அமைவதுண்டு. அதுபோல சிவணைந்தனை ஈர்க்கும் ஆசிரியர் பூங்கொடி (நிக்கிலா விமல்). ஈர்ப்பின் வயப்பட்ட சிவணைந்தனை அரவணைத்து, ஆற்றுப்படுத்தி, அம்மாவாக, அப்பாவாக ஏற்கச் செய்யும் நெகிழ்ச்சியான காட்சி அமைப்புகள்.
சிவணைந்தனின் நண்பனாக சேகர் (ராகுல்) கமல், ரஜினி காலத்தை நினைப்பூட்டும் கலகல காட்சிகள். விரசமும், சரசமும் அல்லாத உழைப்பாளிகளின் பெருமூச்சுக் கலப்பாக வேம்பு, கனி இருவரின் காதல் மென்மையால் பேசுகிறது.
மண்ணின் மணத்தோடும், கசடுகளோடும், வட்டார மொழி பேச்சுகளோடும், எளிய மனிதர்களின் உடல் மொழிகளோடும், (பெயர் பெற்ற) நடிகர்கள் இல்லாமல் ஏற்றம் பெற்ற காவியம் வாழை.
பசிக்கு, ஒரு வாழைப்பழத்தைப் பறித்த போது தோட்ட உரிமையாளர்களிடம் பிடிபட்ட சிவணைந்தன் அடிபடும் கொடுமை.. தான் பொருட்களைத் தொடுவதற்கு உரிமையற்ற விவசாயக் கூலிகளின் கதையைப் பேசுகிறது.
இப்படியாக நிலவுடைமையாளர்கள், நிலமற்றவர்களின் முரண்களைப் போகிற போக்கில் தொட்டுச் செல்கிறது. முரண்களைச் சரி செய்ய தீர்வாகப் பொதுமையைக் குறியீடாகக் காட்டுகிறது.
பசுமை இழைந்தோடும் தேனி ஈசுவரனின் ஒளிப்பதிவு, சூழலோடு இழைந்தோடும் சந்தோச நாராயணனின் இசை. மனத்தைப் பிழியும் பாடல்களோடு புதுவை செயமூர்த்தி எனக் கோர்ப்பும் சேர்ப்பும் நல்வார்ப்பாக வளர்கிறது. வாழை வாழையடி வாழையாக...
- பாவலர் ச. சிவகுமார் (சசி)