இடஒதுக்கீடு என்பது ஆகக்கீழாக ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையாகும். இந்தியாவில் படிநிலை அமைப்பில் சாதிகள் உள்ளதால் இடஒதுக்கீடும் அதற்கேற்பத் தேவைப்படுகிறது.
ஒரே நிலையில் ஒடுக்குமுறைகளைச் சந்திக்கும் பல்வேறு சாதிகளின் பட்டியலை ஒழுங்குபடுத்தி அட்டவணைப் பழங்குடிகள், அட்டவணை வகுப்பினர், சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், முன்னேறிய வகுப்பினர் என அரசு தொகுப்புப் பட்டியல் தயாரித்துள்ளது.
தற்போது நிலவுகிற இடஒதுக்கீட்டு முறை ஒடுக்கப்படும் வகுப்பினருக்கு ஓரளவு பயனுடையதாக இருக்கிறது. ஆனால் இதுவே முழுமையானது அல்ல. ஏனெனில் 97 விழுக்காடு மக்கள் தொகையுள்ள முற்பட்ட சமூகம் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீடு வெறும் 50 விழுக்காடு மட்டுமே உள்ளது. பொதுப்பிரிவு என்ற பெயரில் மீதமுள்ள 50 விழுக்காடு இடங்கள் 3 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட முன்னேறிய வகுப்பினர் பயன்படும் வகையிலேயே உள்ளது. இதுவே மிகப்பெரிய அநீதியாகும்.
இடஒதுக்கீடு குறித்து நமது நிலைப்பாடு என்னவென்றால், அது 100 விழுக்காடாக ஆக்கப்பட வேண்டும். அதில் 3 விழுக்காடு முன்னேறிய வகுப்பினருக்கும் மற்ற 97 விழுக்காடு பெரும்பான்மை மக்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும். அதில் சாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தி எல்லா பட்டியலிலிருந்தும் சில குறிப்பிட்ட சாதிகளே பயன்பெறும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இடஒதுக்கீடு என்பது சாதி ஒழிப்பிற்கான முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும். ஆனால் அதுவே சாதியை ஒழித்துவிடாது. அதற்குச் சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கான சாதி அற்றோர் என்னும் புதுப் பட்டியலை உருவாக்கி அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு, பொருளாதார ஒதுக்கீடு தொடர்பாக எழும் சிக்கல்களுக்கு முழு காரணம் இப்போதுள்ள அநீதியான இடஒதுக்கீட்டு முறையேயாகும். 50 விழுக்காடு இடங்களைப் பொதுப்பிரிவு என்னும் பெயரால் முற்பட்ட வகுப்பினருக்குத் தகுதி, திறமை என்னும் பெயரால் தாரைவார்த்துவிட்டு மீதமுள்ள 50 விழுக்காட்டை 97 விழுக்காடு மக்கள் பிரித்துக் கொள்வதற்காக முரண்படும் நிலையை உருவாக்குகிறார்கள். அதில் 50 விழுக்காட்டிற்குள்ளேயே இருக்கும் இடங்களை உள் ஒதுக்கீடு செய்வதால் சில சாதிகள் தங்கள் உரிமை பறிபோய்விடுமோ என்று அஞ்சுகின்றன. பொதுப்பட்டியலில் உள்ள 50 விழுக்காட்டை நீக்கிவிட்டு 100 விழுக்காடு முறையை செயல்படுத்தும்போது உள் ஒதுக்கீட்டுக்கான இடங்கள் எளிதாகக் கிடைத்துவிடும்.
உள் ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த ஆதரவான தீர்ப்பை ஒட்டி எழுந்துள்ள விவாதங்களும் தடுமாற்றங்களும் புரிதல் குறைபாட்டின் காரணமாக உள்ளது. அதே நேரத்தில் அனைத்து கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள இயலாது. குறிப்பாக கிரீமிலேயர் முறையைக் கொண்டுவரலாம் என்பது முற்றிலும் சமுக நீதிக்கு எதிரானது.
உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் நாம் மேற்கூறிய வகையில் தங்கள் சாதிக்கான உரிமைகள் பறிபோய்விடும் என்று தவறாக அஞ்சுகிறார்கள். கெடுவாய்ப்பாக விடுதலைச் சிறுத்தைகள் போன்ற இயக்கங்களில் கூட உள்ஒதுக்கீட்டை எதிர்ப்பது அவமானகரமானது. ஏற்கெனவே மாநில அரசுகளுக்கு உள்ள பல அதிகாரங்கள் ஒன்றிய அரசால் பறிக்கப்படும் நிலையில் இடஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் பாதுகாப்பு அதிகாரத்தையும் ஒன்றிய அரசே எடுத்துக்கொள்ளச் சொல்லிப் போராடுவது மாபெரும் அரசியல் அறியாமையாகும்.
சமூகநீதிக்கு இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாகத் திகழ்கிறது. இடஒதுக்கீடு இந்தியா முழுவதும் தமிழ்நாட்டைப் பார்த்தே தரப்படுகிறது.
இந்நிலையில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 341, 342 பிரிவுகளின்படி புதிதாகச் சாதிகளைப் பட்டியல் இனத்தில் சேர்ப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஏற்கெனவே பட்டியல் இனத்தில் உள்ள சாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கத்தான் அதிகாரம் உள்ளது. அதைப் புரிந்துகொள்ளாமல் உள்ள கொஞ்சநஞ்ச உரிமைகளையும் மாநில அரசுகளிடமிருந்து ஒன்றிய அரசுக்குத் தாரைவார்க்கச் சொல்லிப் போராடுவது சமுகநீதிக்கு வழிகாட்டியான தமிழ்நாட்டிற்கு வெட்கக்கேடானது.
- தங்க.குமரவேல், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம்