மிக நீண்ட நெடிய பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான அரசு சார்ந்த பெரும் நிலப்பரப்பாகத் தமிழ் வழங்கும் நல்லுலகம் என்கிற அளவில் தமிழ்நாடு அரசு உருவாக்கம் பெற்றிருந்தது.. பல்வேறு வந்தேறி ஆட்சிகளின் கீழ் அடங்கப்பட்டுக் கிடந்த தமிழ்நாடு, பிரித்தானியருக்கு அடிமைப்பட்டப் பின்னர் இறுதியாக இந்திய அரசு உருவாக்கத்திற்குள் அடைக்கப்பட்டு விட்டது..

இந்திய அதிகார அரசுக்கு அடிமைப்பட்டுப்போன தமிழ்நாடு மீண்டும் தன்னைத் தமிழ்நாடு என்கிற அளவில் மாற்றிக் கொள்ள அரும்பாடுபட்டது..

தமிழ்நாட்டிற்கெனத் தனிக் கொடியை உருவாக்கவும், தமிழ்நாட்டிற்கென ஒரு நாளை அமைத்துக் கொண்டு பெருவிழா நடத்தவும் வழியற்றுப் போனது..

தமிழ் ஆர்வலர்களின் அறிஞர்களின் பெரு முயற்சிகளுக்குப் பின்னர் சில அடையாளங்கள் பெறப்பட்டாலும் தமிழ்நாடு நாள் விழாவை அரசு விழாவாக, மக்கள் விழாவாகக் கொண்டாடுகிற ஒரு பேரெழுச்சி நாள் அறிவிக்கப்பட வேண்டும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்ச் சான்றோர் பேரவை உள்ளிட்ட எண்ணற்ற தமிழ் இயக்கங்கள் தமிழ்நாடு நாள் விழாவாக நவம்பர் 1 ஆம் நாளைத் தமிழகமெங்கும் அளாவி நடத்தி வந்தன. குமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு இணைந்த நாளாக நவம்பர் ஒன்றாம் நாள் குமரி மாவட்டம் முழுமையும் விழாக் கோலம் கொள்கிறது. கடந்த 5 ஆண்டுகளாகப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நவம்பர் 1 -ஆம் நாளைத் தமிழ்நாடு நாள் என்பதாகப் பெரிய அளவில் கொண்டாடி வந்திருக்கிறது..

தமிழ்நாட்டிற்கெனத் தனிக் கொடி ஒன்று தேவை என வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் ஒன்றுகூடி வெள்ளை நிறக் கொடியில் சிவப்பு நிறத்தில் தமிழ்நாடு நிலப்படம் அமைந்துள்ளதான கொடியை முன் மொழிந்து அறிவிப்புச் செய்து அதையே தாங்கியபடி விழா கொண்டாடப் பெறுகிறது..

தமிழ்நாடு ஒரு நாடாக, ஓர் அரசாக, தமிழ் இனம் ஓர் இனமாக அடையாளப்படுத்திக்கொள்ள இயலாத நிலையில் இந்திய அரசு பெரும் தடையாக உள்ளது.. அதிலும் ஆரியப் பார்ப்பனிய பாசிச வெறி கொண்ட பாஷக இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள மொழித் தேசங்களின் -மாநிலங்களின் அடையாளங்களையே சிதைக்கிறது.. மொழியை, பண்பாட்டை, வரலாற்றை அழிக்கிறது.. இந்நிலையில் மொழித் தேசங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது கட்டாயமாகின்றது. எனவேதான் ஒவ்வொரு மொழி மாநிலமும் தங்களது மாநிலத்துக்கான நாளைப் பெரிய அளவில் கொண்டாடுகின்றன..

கருநாடக அரசு தங்கள் மாநிலத்தில் -மிகச் சிறப்பாக இவ்விழாவை நடத்தி வருகிறது.. தங்களுக்கென்று தனிக் கொடியை அடையாளப்படுத்தி அரசு அலுவலகங்களின் முன்புறத்தில் ஏற்றுகிறது..

மிசோரம், நாகலாந்து, கேரளம், ஆந்திரம் எனப் பெரும்பாலான மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் தோற்ற நாள் விழாக் கொண்டாட்டங்கள் நடத்தப் பெறுகின்றன..

நாமும் தமிழ்நாட்டளவில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியாக வேண்டும்.. சூலை 18 -ஐத் தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட நாள் என்றும், நவம்பர் 1 -ஐத் தமிழ் நாடு நாள் என்றும் தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிட வேண்டும்.. நம் அடையாளங்களை மீட்டாக வேண்டும்..

அவ்வகையில்.. வரும் 2024-நவம்பர் ஒன்றாம் நாளைத் தமிழ்நாடு நாள் விழாவாகத் தமிழக மக்கள் முன்னணி பெரம்பலூரில் கொண்டாடுகிற வகையில் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது..

தமிழ் இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், பெரியாரிய உணர்வாளர்கள் -இயக்கங்கள், அம்பேத்கரிய உணர்வாளர்கள் ­இயக்கங்கள், மார்க்சிய உணர்வாளர்கள் -இயக்கங்கள், பெண்ணியம் மற்றும் சூழலியல் இயக்கங்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டாட அழைக்கிறது..

கலை நிகழ்வுகளோடும்.. கருத்துக் குவியல்களோடும்.. பரப்பல் பேரணியோடும்.. விழாக் கோலம் பூணுகிறது பெரம்பலூர்..

எதிர்வரும் நவம்பர் 1 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் ஒன்பது மணி வரை..

பெரம்பலூரில் நடைபெறும் கொண்டாட்டப் பேரெழுச்சி தமிழ்நாடெங்கும் ஒளி பரப்பட்டும்..

தமிழ்நாடு நம் நாடு..! தாயக நாளைக் கொண்டாடு..!

- பொழிலன்