'Save Cauvery Delta Agri . Zone'
மண்ணின் மக்களின் நடை பயணம் (24 செப்டம்பர் முதல் 29 செப்டம்பர் வரை) - பூம்புகார் முதல் தஞ்சை வரை
கோரிக்கைகள்:
1) காவிரிப்படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டவரம்புக்குள் கொண்டு வர வேண்டும். கடலூர் மாவட்டம் முழுவதும், அரியலூர் மாவட்டம், திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம் ஆகியவையும் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும்.
2) காவிரிப்படுகையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்கள் மட்டுமே நடைபெற வேண்டும். வேளாண் மண்டலம் தொழில் மண்டலமாகக் மாறக்கூடாது.
3) விளைநிலங்கள் விளைநிலங்களாகவே தொடர பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
4) காவிரிப்படுகை வேளாண் மண்டலத்தில் பழைய எண்ணெய் எரிவாயுக் கிணறுகளின் காலத்தை உறுதி செய்து, கிணறுகளின் அடிப்படை ஆவணங்கள் மற்றும் செயல்படத் தேவையான அனுமதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, சட்டவிரோதக் கிணறுகள் உடனடியாக மூடப்பட வேண்டும்.
5) தொழிலக அனுமதிகள், எண்ணெய் எரிவாயுத் திட்டங்கள் தொடர்பான மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள் நெறிப்படுத்தப்பட வேண்டும்.
6) எண்ணெய் எரிவாயுத் திட்டங்களால் காவிரிப்படுகை அடைந்த பாதிப்புகள் குறித்த பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் ஆய்வு அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.
7) தமிழகக் கடற்பகுதியில் மீன்வளத்தையும், மீன் பிடித் தொழிலையும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் காப்பதற்காக, கடற்பகுதியிலும் எண்ணெய் -எரிவாயுக் கிணறுகள் அமைப்பதைத் தடை செய்ய வேண்டும்.
8) விளைநிலங்களின் குறுக்கே எண்ணெய் -எரிவாயுக் குழாய்கள் அமைப்பதைத் தடை செய்ய வேண்டும்.
9) காவிரிப்படுகையில் உள்ள ஏரி, குளம், பாசனக் கால்வாய்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நீர்நிலைகள் மீட்கப்பட வேண்டும். காவிரிப்படுகை முழுவதும் நீர்ப் பாசனக் கட்டமைப்பு, நீர் மேலாண்மைச் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
(10 ) கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்ற அரசமைப்பு அமர்வு 25.7.2024 அன்று தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டின் கனிமங்களின் மீதான வரி விதிப்புக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும். கனிமவளச் சூறையைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் இயற்கை வளம் மற்றும் கனிம வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
- மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, 19/2, சேந்தங்குடி வடக்குத் தெரு, மயிலாடுதுறை - 609 001
தொடர்புக்கு: பேராசிரியர் த.செயராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர்