இனக்கொலைக்கான மூன்று சாட்சிங்கள்

(1) காசாவுக்கு நீர், மின்சாரம், உணவு, எரிபொருள் என அனைத்தையும்; தடை செய்திருக்கிறோம். அவர்கள் மனித மிருகங்கள். - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யாவு காலன்ட்.

(2) நமது இஸ்ரேலியக் குழந்தைகள் ஒளியின் குழந்தைகள்;. பாலஸ்தீனக் குழந்தைகள் இருளின் குழந்தைகள். இஸ்ரேலின் வரலாற்றில் பாலஸ்தீனத் தனிநாடு என்பதை நான் தடுத்து நிறுத்தியிருக்கிறேன் காசாசவில் எனன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். - இஸ்ரேலிய பிரதமர் நத்தானியேவு.

(3) காசாவின் மீது அணுகுண்டு வீசுவதும் எம்மிடம் இருக்கும் ஒரு சாத்தியம். - இஸ்ரேல் பாரம்பர்ய அமைச்சர் அமிச்சாவு எலியாவு

பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினையின் அடிப்படைகள்

இஸ்ரேல் 1948 ஆம் ஆண்டு பிரித்தானியக் காலனியத்தினால் பாலஸ்தீன நிலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த விட்டுக்கொடுப்பே பாலஸ்தீன மக்களின் பெருந்தன்மைதான். 1967 ஆம் ஆண்டு சர்வதேச ஒப்புதலை மீறி இஸ்ரேல் மேற்குக்கரை, காசா பிரதேசங்களை ஆக்கிரமித்து அங்கு சட்டவிரோதக் குடியேற்றங்களை அமைத்தது. 1974&ஆம் ஆண்டு இஸ்ரேல்-பாலஸ்தீனம் எனும் இரண்டு நாடுகள் கோட்பாடு ஐநாவினால் ஒப்பப்பட்டது. 1967 ஆக்கிரமிப்புக்கு முன்னான நிலைகளுக்கு இஸ்ரேல் திரும்பவேண்டும் என்பது நியதி. இஸ்ரேல் இப்போது அமெரிக்க - பிரித்தானிய - மேற்கத்திய நலன்களின் மத்தியக் கிழக்கு வேட்டை நாயாக, அணு ஆயுத வல்லமையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளன். பாலஸ்தீனம் நிலமீட்டுப்புக்காகப் போராடும் நாடு. பைபிளில் வருகிற வாக்களிக்கப்பட்ட பூமி என்கிற மத ஐதீகத்தை நவீனத்துவ அரசதிகாரமாக மாற்ற முயலும் யூத அடிப்படைவாத நாடுதான் இஸ்ரேல்.palastine children 612பதா-ஹமாஸ் முரணைப் புரிந்துகொள்வது பாலஸ்தீனப் பிரச்சினையில் இன்னொரு முக்கியமான அடிப்படை. ஓஸ்லோ ஒப்பந்தம்(1993)தான் இதில் மையமானது. இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மட்டுமல்ல, மஹ்முத் தர்வீஷ் எட்வர்ட் சைத் போன்றவர்களும் நிராகரித்தார்கள். என்ன காரணம்? அந்த ஒப்பந்தம் பதாவுக்கும் இஸ்ரேலிய அரசுக்கும் இடையிலானது. ஹமாசுக்கு அதில் இடமில்லை. அந்த ஒப்பந்தத்தின்படி பரஸ்பரம் பாலஸ்தீன இஸ்ரேல் நாடுகளின் இருத்தலை இருவரும் ஒப்பவேண்டும். ஆக்கிரமிப்புக்கு உள்ளான பகுதிகளிலிருந்து 1967&க்கு முன்பான நிலைகளுக்கு இஸ்ரேல் திரும்பவேண்டும். காசா-மேற்குக் கரையில் பதாவின் இடைக்கால நிர்வாகம் இருக்கும். இடைக்கால நிர்வாகத்தின் கால அளவு நிர்ணயிக்கப்படவில்லை. ஜெருசலேம் பிரச்சினை பிற்பாடு அணுகப்படும். எல்லைகள், பிரதேசங்கள், இடைக்கால நிர்வாகம்- ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவது குறித்த காலஅளவு என எதுவுமே திட்டவட்டமாக ஓஸ்லோ ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.

பதா அமைப்பை பாலஸ்தீன நிர்வாகத்திற்குத் திணித்ததன் வழி பாலஸ்தீன எதிர்ப்பைச் சமாளிக்க அமெரிக்காவும் மேற்குலகும் இஸ்ரேலும் பாவித்தன. இப்போதும் பிளிங்கன் அப்பாஸ் சந்திப்பில் ஹமாசை அழித்தொழித்த பின் ஒரு வகையிலான காசா நிர்வாகத்தைப் பதாவின் தலைமையின் கீழ் அங்கு ஏற்படுத்துவது பற்றிப் பேசப்பட்டிருக்கிறது.

ஹமாசுக்கு பாலஸ்தீன மக்களிடம் கணிசமான சொல்வாக்கு இருக்கிறது. ஹமாஸ் ஒரு போராளி அமைப்பு மட்டுமல்ல. அது காசா நிர்வாகத்தைக் கவனிக்கும் அமைப்பு. மக்கள் சேவையை முன்வைக்கும் அமைப்பு. பதா தன் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரையில் கூட தன் நிர்வாகத்தை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரிடம் தந்துவிட்டு நிற்கிறது. காசா நெருக்கடியின் பின் மேற்குக்கரையில் 275 பாலஸ்தீனர் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டு, 3000 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சட்டவிரோதக் குடியேறிகள் பாலஸ்தீனப் பூர்வகுடி மக்களைத் தமது வீடுகளில் இருந்து விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய இஸ்ரேலிய அரசு முழுமையாக ஓஸ்லோ ஒப்பந்தத்தைக் கூட மறுக்கிற யூத மத-இனவாதிகளால் ஆளப்படுகிறது. ஹமாசின் அரசியலை இதிலிருந்து புரிந்து கொள்ள முயலலாம். அது ஒரு விதமான எதிர்மறை-பிரதிபலிப்பு அரசியல். ஹமாஸ் இயக்கத்தை காசாவின் 23 இலட்சம் மக்கள் வாக்களித்துத் தமது பிரநி­திகளாக வைத்திருக்கிறார்கள். ஹமாஸின் சில நடவடிக்கைகளை பாலஸ்தீனக் கவிஞரான மக்முத் தர்வீஷ், கோட்பாட்டாளரான எட்வர்ட் சைத் போன்றவர்கள் கண்டித்தது உண்டு என்றாலும், இதற்கான காரணம் இஸ்ரேலின் தவறான நடவடிக்கை என்பதை அவர்கள் சுட்டிக் காட்டாமல் இருந்ததில்லை.

பிரெஞ்சு இதழான லெமான்டே டிப்ளமெடிக் பாலஸ்தீனப் பிரச்சினை பற்றி இரு சிறப்பிதழ்கள் வெளியிட்டிக்கிறது. ஹமாஸ் ஏன் இவ்வாறு சிந்திக்கிறது என்பது முதல் இன்றைய இஸ்ரேலிய அரசியல்- புவியியல் யதார்த்தம் வரை ஆதாரங்களுடன் கூடிய ஆழமான ஆறு கட்டுரைகளையும் முழுமையாகப் படித்த அளவில் நான் வந்து அடைந்த புரிதல் பின்வருமாறு -

அங்கு இரண்டு நாடுகளுக்கான அடிப்படை இல்லை. இரண்டு நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் என்பன இல்லை. மேற்குக் கரையும் காசாவும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள். இரண்டு பிரதேங்களும் இஸ்ரேலியப் படையினரின் கீழ், குடியேறிகளின் கீழ் இருக்கின்றன. தொடர்ந்து குடியேற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. காசாவையும் மேற்குக் கரையையும் தம்முடன் இணைத்துக் கொள்ள வேண்டும் எனப் பெரும்பான்மை யூதர்கள் கருதுகிறார்கள். இன்றைய இஸ்ரேலிய அரசின் திட்டவட்டமான கொள்கையும் அதுதான்.

பாலஸ்தீனர்களுக்குத் தமது வாழ்வாதாரங்களின் மீது எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. நீர், உணவு, மின்சாரம், எரிபொருள் போன்றவற்றை எப்போது வேண்டுமானலும் இஸ்ரேல் நிறுத்தலாம். பாலஸ்தீனத்திற்கு பொருளியல், வேலை வாய்ப்பு, உற்பத்தி, விநியோகக் கட்டமைப்பு இல்லை. இவை அனைத்தும் இஸ்ரேலிடமேயுள்ளது. காசா, மேற்குக் கரையில் இருந்து தொழிலாளர் வேலைக்கு இஸ்ரேலுக்குள்தான் செல்லவேண்டும். உண்மையில் தென்ஆப்ரிக்கா போல் இனஒதுக்கல்(சுவர்) கொண்ட ஒற்றை நிர்வாகப் பொருளியல்- அரசியல் அலகாகத்தான் அந்த நிலம் இருக்கிறது.

மேற்குக் கரையை இஸ்ரேலிய அரசின் கைப்பாவையாக இருந்து இயக்கும் பாதாவின் முகமது அப்பாசின் மீது மேற்குக்கரை, -காசா என இரு பகுதி மக்களுக்கும் எந்த நம்பிக்கையும் இல்லை. அது ஊழல் ஆட்சி என மக்கள் கருதுகிறார்கள். அண்மையில் நடந்த ஒரு வாக்கெடுப்பில் இருநாட்டுத் தீர்வை 30 சத மேற்குக் கரைமக்கள் மட்டுமே ஆதரித்திருக்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் அது நிகழும் என நம்பவில்லை. காசா, மேற்குக்கரை என இரு பகுதிகளிலும் ஹமாசை மக்கள் விரும்புகிறார்கள்.

மேற்குக்கரை-, காசா இரண்டையும் இஸ்ரேலிய அரசு தன்னுடன் இணைத்துக்கொள்ளும் என ஹமாஸ் இயக்கம் கருதுகிறது. ஆக்கிரமிப்பு, காலனியம், அரசியல் தீர்வு, இனஒதுக்கல் போன்ற விவாதங்களைத் தூண்ட அது தனது அண்மைத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. டெரர் எனப்படும பயங்கரவாத நடவடிக்கைள் தென்னாப்பிரிக்கா முதல் சகல விடுதலை இயக்க நடவடிக்கைளிலும் இருந்து வருகிறது. அசமத்துவமான ஆயுத வலிமை, போர்முறைகளின் பகுதியாக அது இருந்துவருகிறது. திட்டவட்டமாக இஸ்ரேலிய அரசு, அமெரிக்க-மேற்குல காலனியத் தர்க்கத்தின் நீட்சி. இஸ்ரேல் ஒர் ஆக்கிரமிப்பு- இன ஒதுக்கல்-இனக்கொலை அரசு.

காசாவில் என்ன நடக்கிறது?

வியட்நாமுக்கு அடுத்து மனிதகுலத்தை விரக்தியில் தள்ளும் நிகழ்வு காசா. குழந்தைகள், அகதி, மருத்துவர், பத்திரிக்கையாளர் போன்றவர்களை உலகம் பாதுகாக்கவேண்டும். வீடும் மருத்துமனைகளும் வழிபாட்டிடத்தை ஒத்தவை. இவர்களற்ற-இவைகளற்ற உலகம் ஒரு பாழ்வெளி. காசா நம் காலத்தின் பாழ்வெளி.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி கான்கிரீட் வேலியைத் தகர்த்துக் கொண்டு இஸ்ரேலுக்கு நுழைந்த ஹமாஸ் இயக்கத்தின்ர் 1200 இஸ்ரேலியர்களையும் 50 இஸ்ரேலியக் குழந்தைகளையும் தொகையாகக் கழுத்தை அறுத்துக் கொன்றார்கள் என்பது இஸ்ரேல் சுமத்தும் குற்றம். கூடுதலாக 250 பேரை பிணைக்கைதிகளாக ஹமாசினர் கடத்திச் சென்றார்கள். பெண்கள் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என இன்னொரு செய்தி. 1200 பேர் கொல்லப்பட்டதையும் பிணைக் கைதிகளைப் பிடித்துச் சென்றதையும் ஹமாஸ் ஒப்புக்கொண்டது. வல்லுறவு, குழந்தைகள் கழுத்தறுப்பு போன்றவற்றை ஹமாஸ் மறுத்துவிட்டது. இவற்றுக்கு ஆதாரங்களும் முன்வைக்கப்படவில்லை. பார்வையாளரின் உணர்ச்சியை இதன்வழி உசுப்பிவிடுகிறார்கள்.

அடிப்படையான விஷயம் யாதெனில், ஹமாஸ் இயக்கத்தினர் இருநூறு பேர்கள் வரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றிருக்கிறார்கள். (நிற்க.) இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து தினந்தோறும் பாலஸ்தீனப் பெண்களும் ஆண்களும் சிறுவர்களும் கைதுசெய்யப்பட்டு இஸ்ரேலியச் சிறைகளில் ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். இது எப்படிச் சட்டபூர்வமானது? ‘அவர்களை விடுதலை செய், இவர்களை விடுகிறோம்’ என்கிறது ஹமாஸ். யுத்தம் இப்போது இரு பகுதிகளாக நடைபெறுகிறது. ஆயுதங்களால ஆனது முதலாவது. ஊடகங்கங்களால் ஆனது இரண்டாவது. வெள்ளையின ஆதிக்கமும் ஏகாதிபத்தியமும் இன்று ஊடகங்களின் வழி தமது வன்முறைக்கு மக்களிடம் கருத்திணக்கத்தை உருவாக்குகிறது.

இஸ்ரேலிடம் அசல் ரிசர்வ் இராணுவம் என 10 இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஹமாஸ் இயக்கத்தின் தொகை 30 ஆயிரம் என்கிறது ஆய்வுகள். இன்று 5 இலட்சம் இஸ்ரேலிய்ப படையினர் காசாவில் உள்ளனர். நீர், மருந்து, மின்சாரம், எரிபொருள் அனைத்தையும் இஸ்ரேல் காசா பகுதியின் 22 இலட்சம் மக்களுக்கு மறுத்திருப்பது சர்வதேசச் சட்டங்களுக்கு முரணானது என்கிறார் ஐநா பேச்சாளர்.

ஆயுத ஏற்றுமதியை தொழில்துறையாகக் கொண்ட வணிக அரசுகளாக இன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் திகழ்கின்றன. இதில் பல இலட்சம் விஞ்ஞானிகளும் தொழிலாளிகளும் படைத்துறை­யினரும் பணிபுரிகிறார்கள். அமெரிக்காவுக்கு உலகின் 80 நாடுகளில் 750 இராணுவ தளங்கள் உள்ளன. ஒவ்வொரு யுத்தத்தின் போதும் அமெரிக்கா புதியரக ஆயுதங்களை அறிமுகம்செய்து உலகில் அவற்றை மார்க்கெட்டிங் செய்கிறது. இன்று இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரும் ஆயுத வாடிக்கையாளர் இந்திய அரசு. புல்டோசர் இடிப்புக் கலாச்சாரத்தை அது இஸ்ரேலிய அரசிடம் இருந்தே கற்றுக்கொண்டது. இராணுவத் தொழில்துறை வணிக உற்பத்தி நாடான இஸ்ரேல் தனது புதியரக உற்பத்தி ஆயுதங்களைக் காசாவில் பரிசோதித்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலுக்கான அமெரிக்க உதவி என்பது அதனது இராணுவத் தொழில்துறை உற்பத்தி-விநியோகத்தின் ஓர் அங்கம்.

10 இலட்சம் மக்கள் வட காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்தது. ஆப்கானில் ஆண்டு முழுதும் போட்ட குண்டுகளின் தொகையை ஒரு வாரத்தில் காசாவில் இஸ்ரேல் இராணுவம் போட்டது. இடம் பெயரும் மக்களின் வாகனங்கள் மீது குண்டுபோட்டு 400 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அகதி முகாம் மீது குண்டு போட்டு 400 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கான மக்கள் வரிசையில் நிற்கும் பேக்கரியின் மீது குண்டு போடப்பட்டிருக்கிறது. எகிப்து எல்லையில் நிற்கும் மக்கள் மீதும் குண்டு போடப்பட்டிருக்கிறது. ராய்ட்டர் பத்திரிகையாளர் இருவர் உள்ளிட்டு 87 பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் குண்டு வீச்சில் கொல்லப் பட்டிருக்கிறார்கள். 6, 000 மக்கள் இருக்கும் அகதி முகாம் மீது இஸ்ரேல் இரண்டு குண்டுகளை வீசியிருக்கிறது. குண்டுகள், முகாமின் பகுதியான மருத்துவமனையைக் குறி வைத்ததில் 500 நோயாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்கக் காங்கிரசிடம் உக்ரேன் -இஸ்ரேலுக்குப் பில்லியன் கணக்கில் உதவிக்கோரிக்கை வைத்த பிடனின் வார்த்தைகள் இவை. ‘இதை இப்போது இன்வெஸ்ட் செய்தால் நமக்குப் பிற்;பாடு நல்ல டிவிடன்ட் கிடைக்கும். அது நம் பொருளாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் நல்லது’. இது வால்ஸ்ட்ரீட் பங்குச்சந்தைச் செய்தி. இஸ்ரேல்-காசா போரினால் அமெரிக்க ஆயுத உற்பத்தியின் உயர்வால் அமெரிக்கப் பொருளாதாரம் 7 சதம் வளர்ச்சி.

ஹமாசை அழித்தபின் காலவரையறையின்றி காசாவில் இஸ்ரேலிய இராணுவம் இருக்கும் என நத்தானியேவு அறிவித்திருக்கிறார். அப்போதும் பதாவின் அப்பாஸ் தம்மை ஆள காசா மக்கள் விரும்பவில்லை என அல்ஜஜீரா கட்டுரை வெளியிட்டிருக்கிறது. ஹமாசை அழிப்பதன் மூலம் வடக்கு காசாவிலிருந்து தெற்குக்கு மக்களை இடம்பெயரச் சொன்ன இஸ்ரேலிய அரசு இப்போது தெற்கிலும் குண்டுபோடுகிறது.

இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ஒருவர் சொல்கிறார் : ‘எங்களைப் பொறுத்து இருபத்து இரண்டு இலட்சம் காசாவினரும் ஹமாஸ்தான்’. காசா, -மேற்குக்கரை-, ஜெருசலேம் என மூன்று இடங்களிலும் இஸ்ரேல தாக்கிக் கொண்டிருக்கிறது. கொடூரமான இனக்கொலை. இன்னும் தீவிரவாதம்தான் வளரும் என ஐ. நா. அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

முதலாளித்துவம், சோசலிசம் போல அரசியல் இஸ்லாமும் ஓர் அரசியல் திட்டமாகவே தொடங்கியது எகிப்தின் சகோதரத்துவ இஸ்லாம், இதன் பாதிப்பில் உருவான ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்றன மக்கள்மய இஸ்லாமியக் குடியரசை விழைந்தன. தலிபானியம் மக்கள் மயமானதற்கு மாறான கும்பல் ஆதிக்கக் கனவு. ஈராக், லிபியா போன்றன சோசலிசத் திட்டங்களை முன்வைத்தாலும் அது குடும்ப அதிகாரமாகவே நிலைத்தது. துருக்கி ஒரு தாராளவாத முதலாளித்துவ இஸ்லாமியத் திட்டத்தைக் கைக்கொள்கிறது.

ஜனநாயகம், மக்கள் வாக்குரிமை, அவர்களது அழுத்தத்திற்கு இடம் தரும் நிலையற்ற மன்னர்களால் இன்றும் பல நாடுகள் ஆளப்படுவதுதான் அரபு நாடுகளின் பெரும்துயர். ஈரான் தவிரக் குறைந்தபட்ச ஜனநாயகம் இல்லாத நாடுகளாகவே அரபுலகு இருக்கிறது. எகிப்து தனது இராணுவத்துக்குச் சம்பளம் தரக்கூட அமெரிக்காவை நம்பியிருக்கிறது. ஜோர்டான், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் அமெரிக்காவுடன் நல்லுறவு பேணும் மன்னராட்சிகள்.

அரபு நாடுகளில் நடைபெறும் மக்கள் எழுச்சிகள் அவர்கள் பாலஸ்தீனத்தின் பக்கம் என்பதற்கான சாட்சி. அரசுகள்? இஸ்ரேலுக்கான ஆதரவு என்பது அமெரிக்க-மேற்குலகின் ஆயுத, பொருளியல், இராஜீய ஆதரவு. அரபுலக அரசுகளால் பாலஸ்தீனத்திற்கு ஒரு பயனும் இல்லை. உண்மையில் அரசு எனும் நவீன நிறுவனம், மன்னராட்சிகள், இஸ்லாமிய அரசியல் திட்டம் என்பதற்கு இடையில் தாலிபானியம், ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்றன சிக்கித் தவிக்கின்றன. இந்தச் சிக்கலைத் தீர்த்தால் மட்டுமே அரசியல் இஸ்லாம் என்பது ஒரு சமூகத் திட்டமாகக் குறைந்தபட்சமாவது பொருள் பொதிந்ததாகலாம்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் காசா நிவாரணத்திற்கான தமது உதவியைப் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. இது போரின் போதும் - பின்னரும் காசாவின் அடிப்படைக் கட்டுமானத்திற்காகத் தரப்படுகின்றன.

2023 நவம்பர் -டிசம்பர் மாதங்களின் எட்டு வாரங்களில் மட்டும் கொல்லப்பட்ட 20, 000 பேரில் குழந்தைகள் மட்டும் 12, 500 பேர். பெண்கள் 6, 200 பேர். பிறர் ஆண்கள். இவர்கள் அனைவரும் பொதுமக்கள். இந்தக் குரூர நிலை குறித்து ஒரு காசா மருத்துவர் சொல்கிறார் : ‘இடைக்காலத்தில் உணவும், மின்சாரமும் மருந்தும் கொடுக்கிறோம். மனிதர்களைத் தயார் செய்து வையுங்கள். நாங்கள் பிற்பாடு குண்டுபோட்டுக் கொல்கிறோம் என்பதுதான் இஸ்ரேலின் வாதம். நாங்கள் இதற்குள்தான் பணிபுரிந்து கொண்டிருக்கிறோம்’.

மருத்துவமனை குண்டு வீச்சைத் தொடர்ந்து, அரபு நாடுகள் அனைத்திலும் மக்கள் எழுச்சி நடந்து வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி பிடனைச் சந்திக்கவிருந்த ஜோர்டான், எகிப்து, பாலஸ்தீனத் தலைவர்கள் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டனர்.

"நாங்கள் மண்டியிட மாட்டோம், சரணடைய மாட்டோம், நிமிர்ந்து எழுவோம்’ என பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அறி­வித்திருக்கிறார்.

நத்தானியேவு என்ன சொன்னாரோ அதை அப்படியே வழிமொழிந்திருக்கிறார் பிடன். ‘வேறு ஏதோ குழுதான் மருத்துமனை குண்டு வீச்சுக்குக் காரணம், நீங்கள் அல்ல’. இதே நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஸ் ஈராக்கில் பாரிய அழிவு ஆயுதங்கள் உள்ளன என்றார். பிற்பாடு தமது உளவுத்துறை பிழை செய்துவிட்டது என்றது அமெரிக்க அரசு. இந்தப் பிழையின் விலை 6 இலட்சம் ஈராக்கிய உயிர்கள். நத்தானியேவு ஹமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகள் தலையை வெட்டுகிறார்கள் என்று சொன்னதை அப்படியே வழிமொழிந்தார் பிடன். அப்படி எந்த பிம்பத்தையும் நாங்கள் பார்க்கவில்லை என அறிவித்தது அமெரிக்க அரசு.

அல்ஜஜீரா பெண் ஊடகவியலாளரைக் கொன்றுவிட்டு அதை இன்னொரு குழு செய்ததாக அறிவித்த இஸ்ரேல் முன்னாள் ஜனாதிபதி பிற்பாடு ஆமாம் நாங்கள்தான் சுட்டோம் என்று ஒப்புக் கொண்டார். அமெரிக்க -இஸ்ரேல் ஜனாதிபதிகள் உண்மையில் பெரும் உண்மை விளம்பிகள். லேசர் கைடட் குண்டுகளைத்தான் இஸ்ரேல் போடுகிறது. காசா அதன் கட்டுப்பாட்டில் உள்ளது. எனில், சேட்டிலைட் இமேஜை வைத்து குண்டு எங்கிருந்து ஏவப்பட்டது எனக் கையும் களவுமாக அந்த வேறொரு குறுங்குழுவைப் பிடிக்கலாமே? சரி. இடம் பெயரும் மக்களது வாகனங்கள் மீது சரியாகக் குறிபார்த்து குண்டுபோட்டு 200 பேரைக் கொன்றது யார்?

நாஜிகளை எதிர்த்துப் போராடிய போராளிகளை அவர்கள் தங்கியிருந்த கட்டடத்தின் கீழ்தளத்தில் அத்தனை வழிகளையும் அடைத்துத் தண்ணீரை நிரப்புவதன் வழி உயிருடன் மூழ்கடித்துக் கொன்றொழித்தார்கள் பாசிஸ்ட்டுகள். இது பற்றி 10 திரைப்படங்களாவது இருக்கின்றன. இப்போது ஹமாஸ் போராளிகளின் நிலத்தடி மறைவிடங்களை பாசிஸ்ட்டுகளின் வழியில் கடல்நீரை நிரப்பி இஸ்ரேல் அவர்களை உயிருடன் முமுமையாகக் கொன்றொழிக்கவிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. ஐரோப்பிய-அமெரிக்க இஸ்லாமிய வெறுப்பு நியோ நாஜிகள் இப்போது இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். வரலாறு மறுமுறை புரண்டு படுக்கிறது.

இஸ்ரேலுக்கும் ஏகாதிபத்திய வெள்ளையின நாடுகளுக்கும் ஹமாஸ் தாக்குதல் என்பது ஒரு முகாந்திரம். பாலஸ்தீனர்களை நிரந்தர அடிமைகள் போல அடக்கி வைப்பதே இவர்களது அரசியல். இந்த நாடுகளின் பெரும் தேவையான(உலகின் பிரதான நுகர்வாளர்கள் இவர்கள்தான்) மத்திய கிழக்கு எண்ணெய் வளத்தின் மீதான வேட்கைக்கு இஸ்ரேல் அப்பிராந்தியத்தின் வேட்டை நாய். இஸ்ரேலுக்கு இது பழிவாங்குதல். அமெரிக்காவுக்கு இது (‘நாகரிகமற்ற’ வெள்ளையரல்லாத) பாலஸ்தீனர்க்குப் பாடம் புகட்டுதல்.

பாலஸ்தீனப் பிரதேசத்திலுள்ள அகதி முகாம்கள், மருத்துவமனைகள், சிவில் சமூக நிறுவனங்கள், சர்வதேசத் தொண்டுநிறுவனச் செயல்பாடுகள் என அனைத்தையும் தமது இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர இஸ்ரேல் திட்டமிட்டு வேலை செய்கிறது. மேற்குக் கரையில் ஓர் அகதிமுகாமைத் தாக்கியதோடு இப்போது ஒரு மருத்துவமனையையும் சுற்றிவளைத்திருக்கிறார்கள். யாசர் அராபத்தின் நினைவிடத்தை புல்டோசர் கொண்டு தகர்த்திருக்கிறார்கள்.

உலகின் 18 ஆவது ஆயுத வலிமையுள்ள நாடு இஸ்ரேல் என ஆயுத வல்லரசு நாடுகள் குறித்த ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தப் பதினெட்டு நாடுகளில் இஸ்ரேலுக்கு முன்பாக ஆயுத வல்லமை கொண்ட வரிசை நாடுகளில் ஐந்து இஸ்லாமிய நாடுகள். இவைகள் பார்த்துக் கொண்டிருக்கத்தான் காசாவில் இஸ்லாமிய மக்கள் மீதான இனக்கொலை நடந்துகொண்டிருக்கிறது.

அறிவுஜீகளின் நிலைபாடு

ஜெர்மனியின் தாராளவாதத் தத்துவவாதியான ஹேபர்மாஸ் துவங்கி நியோ நாஜி வரைக்கும் யூதர்கள் விஷயத்தில் ஜெர்மானியர்களிடம் வரலாறு தழுவிய குற்றவுணர்வு இருக்கிறது. அதற்கு நியாயம் உண்டு. அறுபது இலட்சம் யூதர்கள் ஜெர்மன் ஆட்சியாளன் ஹிட்லரால் கொல்லப்பட்டார்கள். வரலாற்றின் துயராக எந்த மத-இன அடையாளத்தை வைத்து ஹிட்லர் இனப்படுகொலை செய்தானோ அதே இன-மத அடையாளம் இன்று இஸ்ரேல் எனும் நாட்டின் அரசியல் அடிப்படையாக ஆகிவிட்டிருக்கிறது. வரலாறு எவருக்காகவும் தயங்கிக் காத்திருப்பதில்லை. இஸ்ரேல் இன்று ஓர் ஆக்கிரமிப்பாளன். குடியேற்றத்தினால் மேலாண்மை பெற்ற இனம்-மதம் அது. அது இன்று இன ஒதுக்கலைச் செய்கிறது; பிறிதொரு இனத்தை- மதத்தைத் துடைத்தழிக்க நினைக்கிறது என்பதெல்லாம் சமூகவியல், சர்வதேசச் சட்டப் பிரச்சினைகள் தானே?

யுவல் நோவ ஹராரி லிபரல்களால் கொண்டாடப்படும் ஒரு யூத அறிவாளி. அடிப்படையில் அவர் ஒரு வரலாற்றாசிரியர். இலண்டன் சேனல் நான்கில் அவரை நேர்காணல் செய்பவர் ஹராரியிடம்; ஒரு கேள்வியை முன்வைக்கிறார் : “இப்போது இதற்கு என்ன செய்யலாம்?” ஹராரி சொல்கிறார் : முதலில் ஹமாஸ் பிணைக்கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். அவரிடம் அடுத்த கேள்வி கேட்கப்படுகிறது : எனில், இஸ்ரேல் இப்போது காசா மீது செய்யும் போர்க்குற்றங்களை நிறுத்திக் கொள்ளுமா? இதற்கு ஹராரி இப்படிப் பதில் சொல்கிறார் : இப்போது இஸ்ரேலியர்கள் தங்கள் வலி குறித்துத்தான் அக்கறைப்படுவார்களேயொழிய, பிறரது வலி குறித்து அக்கறைப்படுகிற நிலையில் இல்லை.

உலக அறிஞராகக் கருதப்படும் யூதரான யுவல் நோவ ஹராரி கடைசியில் வந்து சேரவேண்டிய இடத்திற்கு வந்திருக்கிறார். பாலஸ்தீனப் பிரச்சினையை 'ஹமாஸ்-இஸ்ரேல்' எனக் குறுக்குவதை மறுக்கும், பிரச்சினையை வரலாற்றின் பின்னணியில் 'பாலஸ்தீனம்-இஸ்ரேல்' எனப் பார்க்கும் இடதுசாரிகளை எதிர்த்து யூத அகடமிக்குகள் வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையில் ஹராரி கையெழுத்திட்டிருக்கிறார். தாராளவாதிகளின் கடைசிப் புகலிடம் இடதுசாரி எதிர்ப்புதான். உண்மையில் அமைப்புசார் வன்முறைக்கு-&ஸ்டிரக்சுரல் வயலன்ஸ்-&எதிர்வினையாகத் தான் எதிர்வன்முறை தோன்றுகிறது என்பது இடதுசாரிகளின் பார்வை. போராளிகளின் வன்முறையைப் பேசுபவர்கள் அரசின் அமைப்புசார் வன்முறையைப் பேசுவதில்லை. வன்முறை எனும் பிரச்சினையை அறத்தின் அடிப்படைக்குள் கொண்டுவந்து விவாதிப்பதானால், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட- செலக்டிவ்- அறக் கண்டனத்துக்கு என்ன இடமிருக்க முடியும்? இதனால் குறிப்பிட்ட பிரச்சினைக்கு எவ்வாறு அரசியல் தீர்வுகாண முடியும்?

பிரான்சில் மிக மோசமான யூத வெறுப்புக் கட்சியான பாசிச தேசியக் கட்சி இன்று காசா பிரச்சினையில் இஸ்ரேலை ஆதரிக்கிறது. இது அவர்களது இஸ்லாமிய வெறுப்பில் இருந்து வருகிறது. கிரிட்டிகல் தியரிஸ்ட்டுகள் இன்று இன ஒதுக்கல், இஸ்லாமிய இன-மத வெறுப்பு, பௌதீகரீதியிலான தமது பூர்வீக நிலத்தின் மீதான பாலஸ்தீனரது உரிமை போன்றவை குறித்துப் பேசாமல் இருக்கிறார்கள்.

பாலஸ்தீன -இஸ்ரேல் பிரச்சினையில் சொல்லணிகள் வகிக்கும் பாத்திரம் குறித்து பாலஸ்தீன அறிஞர் ஹனான் ஹஸ்ராவி பல தசாப்தங்களுக்கு முன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இஸ்ரேல் இப்போதும் அதே தந்திரத்தில்தான் இருக்கிறது. ‘ஏன்ட்டி செமைட்’ எனப்படும் கருத்தாக்கம், யூதர்களை ஓர் ‘இனமாகவும் -மதமாகவும் முன்வைத்து’ எதிர்த்துச் செய்யப்படுவது. இது தவறு என்பதில் எந்த விதமான ஐயத்திற்கும் இடமில்லை. ஆனால் இதே யூதத்தை மதமாகவும்-இனமாகவும் முன்வைத்து அதனை ‘ஜியோனிசம்’ எனும் கருத்தியலாகப் ‘புனிதப்படுத்துவதை’ எவ்வாறு ஏற்கவியலும்? எவ்வாறு அந்தப் புனிதத்தின் பெயரால் ஓர் அரசு ‘பிறிதொரு’ இனத்தின் மீது ‘ஏவும் வன்முறை’யை ஏற்கவியலும்? இஸ்ரேலை எதிர்ப்பது யூதவெறுப்பு பாலஸ்தீனம் என்பது ஹமாஸ் இயக்கம் என்பது என்னவிதமான தர்க்கத்திற்குள் வரும்? தற்பாதுகாப்பு உரிமை பற்றி மட்டும் தேர்ந்தெடுத்துப் பேச முடியாது.

உணர்ச்சிவயப்படுவதைக் கடந்து அறிவுபூர்வமாக, நிதானமாகச் சிந்திப்பவர்கள் இடதுசாரிகள்தான். பாலஸ்தீனர்-இஸ்ரேல் பிரச்சினை(ஆம், இது ஹமாஸ் இயக்கம்- இஸ்ரேல் அரசு பிரச்சினை அல்ல) குறித்து கிரேக்கப் பொருளாதார அறிஞர் யானிஸ் வருபாகிஸ், அமெரிக்கக் கோட்பாட்டாளார் ஜூடித் பட்லர், அமெரிக்க யூத இடதுசாரிச் செயல்பாட்டாளர் ஜொசுவா பைபர், அமெரிக்க பாலஸ்தீனச் செயல்பாட்டாளர் அஹமத் மூர் போன்றவர்கள் பாலஸ்தீனத்தை, இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். வருபாகிஸ் இஸ்ரேலிய அரசு இனவாத, மதவாத, காலனியஅரசு என்கிறார். இவற்றை ஆதரிக்கும் அமெரிக்க-மேற்கத்திய அரசுகள் நவ ஏகாதிபத்திய அரசுகள் என்கிறார்.

வெள்ளையர் அல்லாத பிற மக்களை விலங்குகள், காட்டுமிராண்டிகள், நாகரிகமற்றவர்கள், தீமை என வரையறுத்து, அவர்களை அழிப்பது நியாயம் எனக் கருதுவது காலனிய உளவியல் எனும் வருபாகிஸ், இஸ்ரேல் மேற்கத்தியத் தலைவர்கள் நடக்காத, பொய்யான வல்லுறவு, குழந்தைகளின் தலையை வெட்டுதல் போன்றவற்றை முன்வைத்து இத்தகைய சொல்லாடல்களுடன் பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள் என்கிறார். விடுதலைப் போராட்டங்களில் எதிர்வன்முறை அனுமதிக்கப்பட்டது எனவும் அவர் வாதிடுகிறார்.

வருபாகிசும் ஜூடித் பட்லரும் உடன்படும் ஓர் இடம், தேர்ந்தெடுக்கப்பட்ட அறவுணர்வுடன், ஒரு பக்கச்சார்புடன் வாதிடுவது அறமல்ல என்பது. இன்றைய இஸ்ரேல் படுகொலைகளை 40களின் ஹலோகாஸ்டுடன் ஒப்பிட்டுப் பேசமுடியுமானால், ஏன் 75 ஆண்டுகால பாலஸ்தீனர் படுகொலைகளைப் பின்னணியுடன் பேசமுடியாது என்கிறார்கள் அவர்கள். இருவரும் வரலாற்றுப் பின்னணி- உள்ளடக்கத்துடன் பேசுவது எந்த வகையிலும் நடந்த படுகொலைகளை ஒப்பிட்டு, நியாயப்படுத்துவது அல்ல என்கிறார்கள்.

ஸ்லோவாய் ஜிசாக் பிராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் வரலாற்றுப் பின்னணியுடன் பிரச்சினையைப் பேசியபோது, அங்கு இடைமறித்த இஸ்ரேலியர்கள் ஜிசாக், கொலைகளை ஒப்பிட்டு இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துகிறார் எனக் குற்றம் சாட்டினார்கள்.

ஜூடித் பட்லர் உத்தேசமாக நடக்கும் பேச்சு வார்த்தைகளில் வன்முறையாளர்களான ஹமாசை ஒதுக்கி அகிம்சைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனச் சொல்ல, விடுதலைப் போராட்டத்தில் எதிர்வன்முறை இருக்கும் என்கிறார் வருபாகிஸ்.

இடதுசாரிப் பார்வை என ஒன்று இருக்கிறது. அது அமெரிக்க-ஐரோப்பிய- நேட்டோ நாடுகளின் வெளியுறவுக் கொள்கை குறித்த தெளிவு கொண்டது. அது உக்ரைன் பிரச்சினையை விடுதலைப் போராட்டம் எனக் கருதாது. நேட்டோவின் பரவலாக்கம் எனவே கருதும். நேட்டோவை தனது எல்லையில் பரவலாக்கக் கூடாது என புடின் இப்பொழுது அமெரிக்காவுக்கு எழுதிய கடிதமும், அமெரிக்கா அதை மறுத்ததும், இதன் பின்பே இரசியா உக்ரைன் மீது யுத்தம் தொடுத்ததும் பகிரங்கமான உண்மையாக இருக்கிறது. அமெரிக்காவின் அருகில் இறையாண்மை பெற்ற நாடான கியூபாவில் இரசியா அணு ஏவுகணை நிறுவியபோது எதன்பொருட்டு அமெரிக்கா பதறியது? இத்தனைக்கும் அமெரிக்கா கியூப அரசைக் கவிழ்க்கப் பலமுறை முயன்றதே?

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை தன் மீதான இரசியத் தாக்குதல் போன்றது என திருவாய் மலர்ந்தார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்க்கி. இவர் தேசிய விடுதலைப் போராட்ட வீரரா அல்லது ஏகாதிபத்தியத்தின் காதலரா? இந்தத் தெளிவுகள் இல்லாமல் உக்ரைன் பாலஸ்தீன ஒப்பீட்டை இடதுசாரி என்பவர் நிகழ்த்தமுடியாது.

ஹமாசின் இரண்டு நிலைபாடுகள் பற்றிச் சொல்ல வேண்டும். இஸ்ரேல் அந்தப் பிரதேசத்திலேயே இருக்கக் கூடாது என்பது அவர்களது கருத்தியல் நிலைபாடு. இது சாத்தியமற்ற அரசியல். இரண்டாவது உள்இயக்க முரண்பாடுகள். ஹமாஸ் பதா போராளிகளைக் கொன்றும் சிறைபிடித்தும்தான் காசாசவில் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியது. மேற்குக்கரைப் பகுதியில் இன்றும் ஹமாஸ் ஆதரவாளர்கள் உண்டு. பேச்சுவார்த்தைக்கு வரக்கூடிய பதாவினரை ஓரங்கட்ட நதானியேவு ஹமாசின் இருத்தலைப் பயன்படுத்திவந்தார். இத்தனைக்குப் பிறகும் பதா அமைப்பின் சிந்தனையாளர் ஹனன் ஹஸ்ராவி ஹமாசின் அண்மைய தாக்குதல் நடவடிக்கை ஒரு எதிர்ப்பு நடவடிக்கை என்கிறார். இதுதான் ஒரு விடுதலைச் சிந்தனையாளரின் பகுப்பாய்வு நிலைபாடு.

மேற்குலகும் அமெரிக்காவும் நதானியேவும் முரண் ஹமாஸ்- யூத முரண் என்கிறார்கள். அல்ல, அது பாலஸ்தீன-, இஸ்ரேல் இன்றைய முரண் என்பது என்கிறோம் நாம். அத்தனை அரசியல் தவறுகளுடனும் ஹமாஸ் இயக்கத்தினர் போராளிகள். பேரினவாத எதிர்ப்புப் போராளிகள்.

உலக அளவில் இலண்டன், பாரிஸ், நியூயார்க் நகர்களில் இஸ்ரேல் அரசுக்கு ஆதரவான ‘பேரணி’களில் நூற்றுக் கணக்கானோர் திரள்கிறார்கள். இவற்றில் ஆளும் அரசின் தலைவர்கள் பேசுகிறார்கள். காசாவில் போர்நிறுத்தம் கோரும் மனிதாபிமான யூதர்களின் ‘பேரணி’களில் ஆயிரக் கணக்கில் திரள்கிறார்கள். பாலஸ்தீனர் ஆதரவாளர்களும் யூத இடதுசாரிகளும் பங்குபெறும் ‘பேரணி’களில் மக்கள் இலட்சக்கணக்கில் திரள்கிறார்கள். அரசுகள் கொடுங்கோல் இஸ்ரேலிய அரசின் பக்கம். உலகின் வெகுமக்கள் பாலஸ்தீனர் பக்கம்.

உலக நாடுகள் சொல்லும் தீர்வு

பாலஸ்தீன நிலத்தில் இஸ்ரேல் என ஒரு நாடு 'உருவாக்கப்படுவதை' மகாத்மா காந்தி கண்டித்து எழுதினார். ஒரு நிலப்பரப்பினால் குறிப்பிட்ட மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் எனில், அவர்கள் அந்நாட்டில் முழு உரிமையுடன் வாழ உலக நாடுகள் முயலவேண்டும், அதுதான் தீர்வு என்கிறார் மகாத்மா காந்தி. இன்றும் தொகையாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் யூதர்கள் வாழ்கிறார்கள். இன்று வாய்கிழியப் பேசுகிற இட்லரது நாடான ஜெர்மனி ஏன் இரண்டாம் உலகப் போரின் பின் ஒரு பாதுகாப்பான உத்திரவாதத்தை யூதர்களுக்குத் தர முயலவில்லை?

பாலஸ்தீனப் பிரச்சினையில் உலகக் கம்யூனிஸ்டு கட்சிகளின் நிலைபாடு என்ன? இதனை வெறுமனே ஏகாதிபத்தியம், காலனியம் சார்ந்தது என மட்டுமே பார்ப்பதா அல்லது பிரிந்துசெல்லும் உரிமை உள்ளிட்ட லெனினிய தேசிய இனப்பிரச்சினையாகவும் பார்ப்பதா?

பாலஸ்தீன மக்கள் கவிஞனான மஹ்முத் தர்வீஷ் ஒரு நிலப்பரப்பாகப் பாலஸ்தீனத்தில் அன்று இயங்கிய ஒன்றுபட்ட அரபு-யூதக் கம்யூனிஸ்டுக் கட்சியில் உறுப்பினராக இருந்து பிற்பாடு அதிலிருந்து வெளியேறி பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இணைந்தவர். இன்று அரபு மக்களையும் யூத மக்களையும் இணைக்கிற ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சி என்பது இல்லை. வெகுஜன அரசியலில் அதிகம் செல்வாக்கற்ற இரண்டு கம்யூனிஸ்டுக் கட்சிகள் இன்று உள்ளன. ஓன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சி உடைந்து இன்று பாலஸ்தீனக் கம்யூனிஸ்டுக் கட்சி, இஸ்ரேலியக் இகமயூனிஸ்ட் கட்சி எனத் தனித்தனியே இரண்டு கம்யூனிஸ்டுக் கட்சிகள் உள்ளன.

ஏன் பிளவு ஏற்பட்டது? அரபுக்கள் யூதர்களை ஒரு சிறுபான்மை­யினராக அங்கீகரித்தார்களேயல்லாது ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. ஒன்றுபட்ட அரபு பாலஸ்தீன நிலத்தில் யூதர்களுக்குச் சிறுபான்மையின உரிமைகள் மட்டுமே உண்டு என்பது அவர்களது நிலைபாடு. யூதக் கம்யூனிஸ்ட்டுகள் தொடக்கத்தில் பாலஸ்தீன நிலத்தில் ஐரோப்பிய யூதக் குடியேற்றங்களை ஆதரிக்கவில்லை என்றாலும், தாம் ஒரு தேசிய இனம் எனக் கருதப்பட வேண்டும் எனும் நிலைபாடு எடுத்தார்கள்.

அன்றைய உலகக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் அனைத்தும் சோவியத் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் வழிகாட்டுதலின்படியே நிலைபாடுகளை எடுத்தன. இரண்டு தேசியங்கள் கொண்ட, இருவருக்கும் சம உரிமை கொண்ட ஒரு ஜனநாயக அமைப்பாக பாலஸ்தீனம் இருக்க வேண்டும் என்பதே சோவியத் நிலைபாடு.

ஜெர்மனியை அடுத்து கிழக்கு ஐரோப்பிய முகாம்களில் சித்திரவதைக்கு உள்ளான யூதர்களின் குடியேற்றத்தைப் பிற்பாடு யூதக் கம்யூனிஸ்ட்டுகள் ஆதரித்தார்கள். அரபுக் குடியரசில் தேசிய இனம் எனும் உரிமை கோரக்கூடாத சிறுபான்மையினர் யூதர்கள் எனும் நிலைபாட்டை அரபு கம்யூனிஸ்ட்டுகள் எடுத்தார்கள். இப்போது சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, அரபுக்கள், யூதர்கள் எனத் தனித்தனியே பாலஸ்தீனம்-இஸ்ரேல் எனும் இரண்டு நாடுகள் நிலைபாட்டுக்கு வந்துள்ளது.

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில்; இரசியா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல பெரும்பாலான உலக நாடுகள் பாலஸ்தீனம்- இஸ்ரேல் எனும் இரு நாடுகள் என்பதையே தீர்வாக முன்வைக்கிறார்கள்.

நத்தானியேவு தலைமையிலான இஸ்ரேலிய அரசு இருநாட்டுத் தீர்வை ஏற்கவில்லை. தமது இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் ழுழு பாலஸ்தீன நிலம் என்பதே அவர்களது நிலைபாடு. இதன் பிரதிபலிப்பு போல ஹமாசும் பாலஸ்தீனப் பிரதேசத்தில் இஸ்ரேலின் இருப்பை ஒப்பவில்லை.

அரசியல் நிறுவனங்கள், இராணுவம், தொழில்துறை, பொருளியல் உற்பத்தி, விநியோகம் எனும் அளவில் பாலஸ்தீன நிலம் என்பது இன்று இஸ்ரேலிய அரசின் ஆக்கிரமிப்பில்- கட்டுப்பாட்டில் உள்ளன. இருபுறமும் சந்தேகமும் வெறுப்பும் இரு இனங்களிடமும் இருக்கின்றன.

இச்சூழலில் ஒன்றுபட்ட பாலஸ்தீன நிலம், இருதேசிய இனங்கள், இருவருக்கும் அனைத்து விதங்களிலும் சமக் குடியுரிமை எனும் வாதம் இன்று ஆய்வாளர்களிடம் மேலோங்கி வருகிறது.

இன்று பாலஸ்தீன மக்களில் பெரும்பான்மையினர் விரும்புகிற ஹமாசை ஒரு பேச்சுவார்த்தைத் தரப்பாக ஏற்பதன் மூலம் மட்டுமே எந்த வகையிலான தீர்வும் சாத்தியம். காரணம் ஹமாஸ் என்பது ஒரு குழுவலல. அது ஒரு கருத்தியல் கொண்ட எதிர்ப்பியக்கம். இன்றைய மேற்குக்கரை பதா பாலஸ்தீன நிர்வாகமும் அதனை ஒப்புக்கொள்கிறது.

எதற்குமே இடம் தராத யூத மத-இனவெறியர்களின் அரசாக, நியோ நாஜிக் கருத்தியல் அரசாக, இன்றைய இஸ்ரேலிய அரசு இருக்கிறது. ஹமாசின் அக்டோபர் தாக்குதலை முகாந்திரமாகக் கொண்டு அவர்கள் முழு பாலஸ்தீன நிலத்தையும் யூத நிலமாக ஆக்க விளைகிறார்கள்.

பாலஸ்தீனத்தை வழமையாக ஆதரிக்கிற நாடுகள் அன்றைய-இன்றைய சோசலிச நாடுகள்தான். உலக இடதுசாரிகள் அவர்களை ஆதரிக்கிறார்கள். இஸ்லாமிய நாடுகள், ஷியா என்றும் சன்னி என்றும், மன்னராட்சி என்றும், அமெரிக்க ஏகாதிபத்திய நாட்டின் ஆதரவாளர்கள் என்றும் பிளவுண்டு மௌனமாக இருக்கிறார்கள். அரபுலகில் உள்ள முஸ்லீம் மக்களால் தமது அரசுகளின் கொள்கைகளை மாற்றமுடியவில்லை.

மறுபுறம், அமெரிக்க-மேற்கத்திய நாடுகள் ஒன்று திரண்டு இஸ்ரேல் பக்கம் நிற்கிறார்கள்.

ஐரோப்பிய நகர்களெங்கும் பாலஸ்தீன ஆதரவுப் பேரணிகள் நடக்கின்றன. இஸ்ரேலினுள்ளும் பாலஸ்தீன-இடதுசாரி யூதர்கள் இணைந்து பல நகர்களில் பேரணிகள் நடத்துகிறார்கள்.

இவர்களைப் பாலஸ்தீன மக்களுடன் பிணைப்பது மதமல்ல, மானுட விடுதலை அறம்..

இரண்டு தரவுகளை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது. அமெரிக்க, மேற்கத்திய அரசுகள் நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி எனச் சொல்லிவந்தன. பிற்பாடு அவருடனான பேச்சுவார்த்தை மூலமே தென் ஆப்ரிக்கச் சமரசம் ஏற்பட்டது. அடுத்து, இன்றைய இஸ்ரேலிய அரசு ஹமாஸ் தலைமை தாங்கும் காசாவில் மட்டுமல்ல. அகிம்சைவாதியான மஹ்மூத் அப்பாஸ் தலைமை தாங்கும் மேற்குக் கரையிலும் குண்டுபோட்டு வருகிறது. அங்கு ஆயுதமயப்படுத்தப்பட்ட இஸ்ரேலியக் குடியேறிகள் பாலஸ்தீனர்களைத் தாக்குகிறார்கள். இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனரைக் கொல்கிறது. நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேற்குக் கரையில் அகிம்சைவாதிகளையும் இஸ்ரேலிய அரசு இன்று அழித்து வருகிறது. இது ஹமாஸ் குறித்த பிரச்சினை மட்டுமல்ல, பாலஸ்தீன இனக்கொலைகுறித்த பிரச்சினை.

இஸ்ரேலுக்கு பாலஸ்தீனப் பிரதேசத்தில் இடமேயில்லை எனும் ஹமாஸின் நிலைபாடு இன்று சாத்தியமற்றது. இன்று பாலஸ்தீன்-இஸ்ரேல் தீர்வு பற்றிப் பேசுபவர்கள் இரண்டுவிதமான தீர்வுகளை முன்மொழிகிறார்கள். இரண்டு தனித்தனி நாடுகள் அல்லது இரண்டு இனங்களும் வாழும் ஒரு ஒன்றுபட்ட நாடு. பாலஸ்தீனர் என இப்பிரதேசத்தில் எவரும் இல்லை எனச் சொன்ன கோல்டா மேயரும், அதையே இன்று செய்யும் நதானியேவும் பொருத்தமற்ற அரசியல்வாதிகள். இஸ்ரேல் அந்தப் பிரதேசத்தில் இருக்கவே முடியாது எனும் ஹமாஸின் நிலைபாடு (இஸ்ரேல் நிறுவப்பட்;டு எழுபது ஆண்டுகளின் பின்) உலக யதார்த்தத்தில் நிலைகொள்ள முடியாதது.

;இஸ்ரேல் இனவாத அரசு. இஸ்ரேல் இனக்கொலை அரசு. இஸ்ரேல் இன ஒதுக்கல் அரசு. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அரசு. இஸ்ரேல் சர்வதேசப் போர்க்குற்ற அரசு. இப்படிச் சொல்வது யூத இனவெறுப்பு அல்ல. யூத மத-இனவெறிக் கருத்தியல் மறுப்பு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தென் ஆப்பிரிக்க அரசு உலக குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேலின் மீது இனக்கொலைக் குற்றச்சாட்டை அதிகாரபூர்வமாகச் சுமத்தி ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்கிறது. தென்னாப்பிரிக்க அரசு ஆதரவு காங்கோவில் கியூப அரசு பெற்ற ஆயுதப்படையின் வெற்றி தமக்குப் பெரும் பயனுள்ளதாக இருந்தது என்கிறார் நெல்சன் மண்டேலா. நெல்சன் மண்டேலா, யாசர் அராபத் இருவரையும் அமெரிக்க-மேற்குலகு முதலில் பயங்கரவாதிகள் என்றது. பிற்பாடு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இன்று ஹமாஸ் இயக்கத்தை பேச்சுவார்த்தைகளில் ஒரு தரப்பாக அங்கீகரிப்பதன் மூலமே பாலஸ்தீனப் பிரச்சினைக்கான எந்தத் தீர்வையும் எட்டமுடியும். ஹமாசை அழிப்பது என்பது சாத்தியமில்;லை. காரணம், அது பாலஸ்தீனத்தின் பெரும்பான்மை மக்களிடம் செல்வாக்குப் பெற்ற ஒரு வலிமையான தேசிய விடுதலைக் கருத்தியல்.

- யமுனா ராஜேந்திரன்