கிருஷ்ணதேவராயர் ஆட்சியை முன்வைத்து...

அரசாட்சி என்பதே ஒருவரை ஒருவர் வீழ்த்திவிட்டு பதவிக்கு வருவது; படையெடுத்தும், ஆக்கிரமித்தும் பிறநாட்டு நிலப்பகுதிகளை பிடித்துக் கொள்வது என எளிமையாக வரையறுக்கலாம். தனி மனித விருப்பம் சார்ந்து காலந்தோறும் நடந்து வந்த இந்த நிகழ்வுகளுக்கும் மதத்துக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. அவ்வாறு இருந்தாலும், அது மிக மிக சொற்பமானதொன்றே. ஆனால் அதை அப்படியே இருக்கும்படிக்கு வரலாற்றாசிரியர்கள் விடுவதில்லை. அதிலும் இன்று பெருகியிருக்கும் இந்து நோக்கு வரலாற்றாசிரியர்கள் எல்லாவற்றையுமே அப்படிப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் என்பது நாடறிந்த உண்மை.

தென்னிந்தியாவில் நிலவி வந்த முகமதிய ஆட்சியை வீழ்த்தி இந்து சமயத்தையும், அதைப் பின்பற்றுபவர்களின் ஆட்சியையும் நிலை நாட்டியது விசயநகரப் பேரரசின் ஆட்சி.  அவர்களிடம் படைத்தலைவர்களாக இருந்து பின்னர் ஆட்சி நிர்வாகம் செய்த நாயக்கர்களின் ஆட்சியும் விஜயநகரப் பேரரசின் பிரதியே. இவர்களை இன்று இந்து மதவாதப் பார்வையில் வரலாற்று ஆசிரியர்கள் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்கள். வரலாற்று ஆசிரியர்கள் வைத்திருக்கும் இந்தப் பார்வையை விஜயநகர மன்னர்களும் கொண்டிருந்தார்களா என்பது ஆய்வுக்குரியது.

விஜயநகர அரசாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே முதலாம் அரிஅரருக்கும், முதலாம் புக்கருக்கும் நோக்கமாக இருந்திருக்கிறது. ஆட்சியில் நிலை பெற்ற பின்னர் அவர்கள் தென்னிந்தியாவில் வலுவானதொரு இந்து அடித்தளத்தை மீட்டுருவாக்கம் செய்து நிலைபடுத்த முயன்றிருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். இந்தப் பின்னணியில், விசயநகரப் பேரரசு அரசாட்சி குறித்த செய்திகளை ஆய்வு நோக்கில் கவனமுடன் அணுக வேண்டிய தேவை இருக்கிறது.

முகம்மதியர் வருகை

முகம்மது பின் காசிம் (கி.பி.672), முகம்மது கஜினி (கி.பி.971-1030), ஆகியோரின் அவ்வப் போதைய படையெடுப்புகளுக்குப் பின்னர், முகம்மது கோரியின் ஆட்சி கி.பி.1206-ல் வடஇந்தியப் பகுதிகளில் உருவானது. தொடர்ந்து அவர்கள் தென்னிந்தியாவை ஊடுருவி, இங்கிருக்கும் அரசுகளையும் வீழ்த்த முயன்றார்கள். கி.பி.1323-ல் வாரங்கலும், 1327-ல் காம்பிலியும் முகம்மதியர் ஆட்சியின் கீழ் வந்தன. 1329-ல் முகமது-பின்-துக்ளக் தக்காணத்தை வெற்றி கொண்டார்.

வாரங்கல் மற்றும் காம்பிலி வீழ்ச்சியின் போது, வாராங்கல் மன்னர் இரண்டாம் பிரதாப உருத்திரனின் கீழ் பணியாற்றியவர்களான முதலாம் அரிஅரன், முதலாம் புக்கன் இருவரும் அரசியல் கைதிகளாகத் தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவி சுல்தானிடம் நெருக்கமாக இருந்து வந்தனர். முகம்மதிய ஆட்சியாளர்களிடம் ஆட்சியை இழந்தவர்கள் மாபார்க் (1335) போன்ற இரத்த ஆறு ஓடிய கலவரங்களை, தொடர்ந்த ஆண்டுகளில், தென்னிந்தியப் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தினர்.

அப்போது தக்காணத்தின் ஆனெகுந்தி பகுதியில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த முகம்மது மாலிக்கால் இந்தக் கலவரங்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. தில்லி சுல்தானாகிய முகமது-பின்-துக்ளக் தன்னிடம் அரசியல் கைதிகளாக இருந்த முதலாம் அரிஅரன், முதலாம் புக்கன் ஆகிய இருவரை, ‘முகமதிய சமயத்திலிருந்து மாற மாட்டோம்’ என எழுதி வாங்கிக் கொண்டு கலவரங்களை அடக்க அனுப்பினார்.

முகம்மது மாலிக்கை தென்னிந்திய ஆளுநர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு இவர்கள் இருவரையும் ஆளுநர்களாக நியமித்தார் முகம்மது பின் துக்ளக். அவர்கள் இருவரும் தக்காணத்தின் சுல்தான் பிரதிநிதிகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்தனர். காலப்போக்கில் இருவரும் வித்தியாரண்யர் என்பவரின் போதனையை ஏற்று இந்துவாக மாறினர்.

விஜயநகர ஆட்சி

’சிறீ விருபாஷர்’ பெயரில் அரசு ஆவணங்களில் கையெழுத்திட்த் தொடங்கிய  முதலாம் அரிஅரன் தன்னை, தில்லி சுல்தானின் பிரதி­நிதியாக அல்லாமல், தனித்த அரசராக அறிவித்துக் கொண்டார். முதலாம் அரிஅரனால் 1336, ஏப்ரல் மாதம் 18 ம் நாள் விஜயநகர அரசு உருவானது. முதலாம் அரிஅரன், முதலாம் புக்கன் இருவருக்கும் ஹொய்சள கன்னட மரபுத் தொடர்பு உண்டு.

விஜயநகர பேரரசை உருவாக்கியவர்கள் குறித்து இப்படி ஒரு கதையிருக்கிறது! உறுதியாக இது ஒரு மதச்சார்பு கொண்ட கதைதான். உயிருக்கு அஞ்சி இசுலாமைத் தழுவுதல், பின்னர் இந்துமத அடையாளத்துடன் ஆட்சியைப் பிடித்தல் என்பதை இராஜதந்திரம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், முதலாம் அரிஅரனும், முதலாம் புக்கனும் தனித்த ஓர் ஆட்சியை அமைக்கின்ற சந்தர்ப்பத்துக்கு காதிருந்தவர்களாகவே கருதிட முடியும். அவர்களால் தொடங்கப்பட்ட நாயக்கர்களின் ஆட்சியானது கி.பி.1646 வரை நீடித்தது.

குமார கம்பண்ணா

விஜயநகர பேரரசின் மன்னனான குமார கம்பண்ணா கி.பி.1371-ல் தமிழகத்துக்குள் நுழைந்து வழியிலிருக்கும் சிறு சிறு அரசுகளையெல்லாம் வீழ்த்தி காஞ்சியை தலைமையாகக் கொண்டு நிலை பெற்றார். பின்னர் அவர் மதுரை வரை படையெடுத்து, அப்போதிருந்த மதுரை சுல்தான் பக்ருதின் முபாரக் ஷாவை வென்றார். மதுரையை மய்யமாகக் கொண்ட மாபார் சுல்தானியர் ஆட்சி கி.பி.1335 முதல் 1378 வரை நீடித்தது.

எப்போதுமே ஓர் ஆட்சி நிலை பெற்ற பின்னர் அதை காலாதீதத்துக்குமாக வேர்விட வைப்பதற்கு ஆட்சியாளர்கள் எடுக்கும் கருவிகளில் மிகப்பிரதானமானது மதமாகும். குமார கம்பண்ணாவின் தந்தை முதலாம் புக்கன் ஆவார். அவருடைய தாயின் பெயர் கங்காதேவி. இவர் ஒரு கவிஞரும் கூட! கங்காதேவி எழுதிய மதுரா விஜயம் நூலில், அன்று மதுரை சுல்தானியர் ஆட்சியில் பார்ப்பனர்களின் நிலை எப்படி இருந்தது என்று எழுதியிருக்கிறார். பார்ப்பனர்களின் நிலைதான் ஒட்டு மொத்த இந்துக்களின் நிலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பார்வையே இன்று வரைக்கும் தொடர்ந்திடும் இந்துத்துவ பார்வை! கங்காதேவி எழுதிய இந்தக் குறிப்புகள் இன்றைய இந்து எழுச்சிக்கும் வெறியூட்டக் கூடியவையாக இருக்கின்றன.

குமார கம்பண்ணா பிறந்த சமயத்தில் அவருடைய தந்தை முதலாம் புக்கன் பார்ப்பனர்களுக்கும், ஏழைகளுக்கும் பரிசுகளை வழங்கியிருக்கிறார். சிறைக் கைதிகளை விடுவித்திருக்கிறார். என்று கங்காதேவி எழுதுகிறார். குமார கம்பண்ணா தருமன், பீமன், அர்ஜூணன் ஆகியோரை ஒருங்கே உருவாக கொண்டவர் என்று வருணிக்கிறார். முல்பாகல் பகுதியின் மகாமண்டலேஸ்வரரான முதலாம் புக்கன், குமார கம்பண்ணாவை, திருவண்ணாமலை சம்புவராயர், மற்றும் மதுரை சுல்தானியர்களை வெற்றி கொள்ள அனுப்பி வைக்கிறார். அப்படி அனுப்பி வைக்கிற போது, குறிப்பாக மதுரை சுல்தானியர்களை அழிக்கும்படி மகனிடத்தில் சொல்கையில் ”மதுரையிலிருக்கும் அவர்கள் இலங்கையில் இருக்கும் இராவணனின் அரக்கர்களைப் போன்றவர்கள். எனவே, அவர்களை இராமபிரான் அழித்ததைப் போல அழித்துவிடு” என்று சொன்னதாகக் குறிப்பிடுகிறார்.

குமார கம்பண்ணா சம்புவராயர்களை வெற்றி கொண்ட பின்னர், காஞ்சியில் வந்து  இருக்கும் போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அவரிடம் வந்து தென்னாட்டின் நிலையைச் சொல்லி அழுததாக கங்காதேவி எழுதுகிறார்.

“வேத மந்திரங்கள் ஓதிடும் ஒலியும், யாகம் வளர்த்திடும் புகையும் எழும்பிடும் அக்ரஹாரங்களில் இன்று இறைச்சியை வாட்டிடும் வாடை வருகிறது. மிருதங்க ஒலி கேட்ட கோயில் மண்டபங்களில் குள்ள நரிகளின் ஊளை கேட்கிறது. மார்பில் சந்தனம் பூசி பெண்கள் குளிப்பதால் வெண்ணிறமாக ஓடும் தாமிரபரணியின் நீரோ, இன்று பார்ப்பனர்களையும், பசுக்களையும் கொன்ற ரத்தத்தால் சிவப்பாக ஓடுகிறது”

விஜயநகர மன்னர்கள் தங்களின் ஆட்சி முழுவதும் இந்து மதத்தை நிலை படுத்திட எவ்வாறெல்லாம் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்பதைக் கங்கா தேவியின் மதுரா விஜயம் நூலை முன்னுரையாக வைத்து அறிந்து கொள்ள முடியும்.

கிருஷ்ண தேவராயர்

முதலாம் அரிஅரன் முதல் வீர நரசிம்மர் வரை சுமார் பன்னிரண்டு பேர் அரசாண்டதற்குப் பின்னர் கிருஷ்ண தேவராயர் கி.பி.1510-ல் பதவிக்கு வந்தார். விஜயநகர பேரரசின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, புகழ்ப்பெற்ற அரசர் கிருஷ்ண தேவராயர் ஆவார். இவர் ஒரு கவிஞரும் கூட! ஆமுக்த மால்யதா என்னும் நூல் இவர் எழுதியதே. இவருக்கு மனைவியர்கள் பன்னிரண்டாயிரம் பேர்! விஜயநகர பேரரசை கோவா, மகாராட்டிரம், ஒரியா முதல் மதுரை வரை விரிவாக்கம் செய்வதற்காக தன்னுடைய ஆட்சிக் காலத்தில் முக்கியமான எட்டு போர்களை அவர் நிகழ்த்தினார். சிங்களம் வரையிலும் கூட போரிட்டுச் சென்றதாக அறியப்படுகிறது.

இவர் ஆட்சியில் தென்னிந்தியாவில் இந்து மதம் புத்துயிர்ப்பு பெற்று நன்றாக தன்னை நிலைபடுத்திக் கொண்டது. இவருடைய பதவியேற்பு நிகழ்ச்சி குறித்த செய்திகளை பார்த்தாலேயே இது விளங்கிவிடும். கிருஷ்ண தேவராயருக்கு முடிசூட்டு விழா நடத்திய நாளில் ஒரு கோடிப் பசுக்கள் தானமாகக் கொடுக்கப் பட்டுள்ளன. நான்கு கடல்கள், எட்டு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் பார்ப்பனர்கள் அவரை நீராட்டியிருக்கிறார்கள். இராமாயணத்தின் சில சருக்கங்களை பாடுகையில் அவர் அரியணையில் அமர்ந்திருக்கிறார். பொன்னும், பொருளும் கோ­யில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்துத்துவ அடிப்படை

கிருஷ்ண தேவராயர் தன்னுடைய தலைநகரத்தில் மட்டும் ஐந்து கோயில்களை கட்டினார். நரசிம்மரின் மிகப்பெரிய சிலையொன்றை கி.பி.1528-ல் நிறுவி, இன்று இந்துக் கடவுளரின் பெருஞ்சிலைகளை அமைக்கும் பழக்கத்துக்கு அடிகோலியவர் கிருஷ்ண தேவராயரே. திருப்பதி கோயிலை முக்கியத்தலமாக மாற்றியதும் இவர் தான்.

மதுரை திருமாலிரும்சோலை, சிறீவில்லிபுத்தூர், கருவநல்லூர், சங்கரநயினார், தென்காசி, குற்றாலம், அகத்திய பர்வதம், திருநெல்வேலி, தோத்தாத்திரி, திருக்குறுங்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், ஆழ்வார் திருநகரி, திருவண்ணாமலை, சிறீசைலம், சிதம்பரம், காளஹஸ்தி, இராமேஸ்வரம் ஆகிய ஊர்களிலிருக்கும் கோயில்களுக்கு நிலங்களையும், கொடைகளையும் அளித்திருக்கிறார். இப்படி இந்து கோயில்களுக்கு நிலங்களை வழங்குவது இவருக்கு முந்தைய காலத்திலும் கூட இருந்திருக்கிறது. முதலாம் அரிஅரன் தஞ்சை மாவட்டம், மாயூரம் வட்டத்திலிருக்கும் சித்தாமூர் கிராமத்தை பார்ப்பனர்களுக்குக் கொடையாக அளித்துப் பட்டயம் எழுதிக் கொடுத்திருக்கிறார். இது கோமல் கொடை என்று அழைக்கப் படுகிறது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோவில்களில் ஸ்மார்த்த பார்ப்பனர்கள் பணியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். வடமொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டவர் ராயர் ஆவார்.

நிர்வாகம்

இவர் காலத்தில் பார்ப்பனர்கள் நல்ல செல்வாக்கையும், உயர்ந்த நிலையையும், பதவியையும் பெற்று வாழ்ந்திருக்கிறார்கள். பார்ப்பனர்கள் கோட்டைகளின் தலைவர்களாக அமர்த்தப் பட்டுள்ளனர். பார்ப்பனர்கள் நேர்மையானவர்கள், ஆற்றலும் ஊக்கமும் உடையவர்கள், கணக்குகளை அமைப்பதிலும், அரசியல் அலுவல்களிலும் பெரிதும் உதவியாய் இருப்பவர்கள் என கிருஷ்ண தேவராயர் திடமாக நம்பியிருக்கிறார். இவர்களில் பலர் மடாதிபதிகளாகவும், நில உரிமையாளராகவும் இருந்திருக்கின்றனர்.

அமைச்சரவையில் பார்ப்பன, சத்திரிய, வைசிய வருணத்தவர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். ”விஜயநகர அரசர்களின் அரச தர்மமே இந்து தர்மத்தை அழியாமல் பாதுகாப்பதாகும்” என்று கிருஷ்ண தேவராயர் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். இவரின் நம்பிக்கையான ஏழுவகையான சந்தானங்களைப் பெறுவதில் அக்ரஹாரம் அமைப்பதும், கோயில் எழுப்புவதும் முக்கியமானவையாகும்.

நிலவுடைமையாளர்கள் அனைவரும் ஆகிக்கச்சாதியினரே. இவர்கள் கட்டிய ஐந்து வகையான வரிகளில் இரண்டு பார்ப்பனர்களுக்கும், கோயில்களுக்கும் வழங்க வேண்டிய வரிகளாகும். எடுத்துக்காட்டாக, ஒரு நிலத்தில் முப்பது கலம் நெல் விளைவிக்கப் படுகிறதென்றால், அதில் ஒரு கலத்தை கோயிலுக்கும், ஒன்றரை கலத்தை பார்ப்பனருக்கும் கொடுக்க வேண்டும். ஆனால் பார்ப்பனர்களுக்கு சொத்து வரி விதிக்கப்படவில்லை. வைசியர் வீட்டுக்கு 1 பணமும், வெட்டியார் வீட்டுக்கு 1.5 பணமும் வசூலித்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே இந்த ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை உணரலாம். மேலும் பண்ணையில் வேலையாளாக இருப்பவரும் தொழில் வரியாக 1 பணத்தை செலுத்த வேண்டுமாம்.

மனுதர்ம சட்டங்களின்படியே ஆட்சியும், நீதி நிர்வாகமும் நடைபெற்றிருக்கின்றன. கிருஷ்ண தேவராயர் தன்னுடைய நூலில், “மனுதர்மத்தின் படி அரசன் கொடுக்கும் தண்டனைக்கு பயந்துதான், கணவனுடன் மனைவி அன்பாகவும், ஆண்கள் பெண்கள் ஒழுங்காகவும், சன்னியாசிகள் இந்திரியங்களை அடக்கியும், உயர் வருணத்தவரிடம் தாழ்ந்தவர்கள் பணிவுடனும், எஜமானனின் கட்டளையை ஏற்று வேலைக்காரரும் நடப்பார்கள்” என்று குறிப்பிடுகிறார். ஒரு சமூகத்துக்கு எதிராக நடப்பதோ, பேசுவதோ, செயல்படுவதோ ராஜதுரோகக் குற்றமாக கருதப்பட்டிருக்கிறது. பறையர்களில் சில குழுக்களை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார் கிருஷ்ண தேவராயர். இவர் காலத்தில் உடன்கட்டை ஏறுதல், பலதார மணம், இளைமையிலேயே திருமணம், மணக்கொடை ஆகிய வழக்கங்கள் இருந்திருக்கின்றன. பரத்தமை அனுமதிக்கப் பட்டிருக்கிறது. தேவதாசி முறையும் வழக்கத்தில் இருந்திருக்கிறது.

முடிவு

வடஇந்திய மாநிலங்களில் இருப்பதைப் போன்ற சமூக நிலைமைகள் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் நிலவுகின்றன. இந்த சாதிமத வழக்கங்களை, இந்து மதவெறியின் அடிப்படையில் விஜயநகர பேரரசும், கிருஷ்ண தேவராயரும் இந்து அறம் அல்லது இந்து தர்மம் என்ற பெயரில் உறுதியாக நிலைபடுத்தி மக்களிடையே கெட்டித்தட்டிப் போகச் செய்திருக்கிறார்கள்.

ஏனைய மாநிலங்களைப் போலன்றி, நல்வாய்ப்பாக தமிழ்நாட்டில் தந்தை பெரியாருடைய கடும் உழைப்பே இந்த மதவெறியிலிருந்து மக்களை ஓரளவு மீட்டெடுத்திருக்கிறது. தென்னிந்திய இந்து நிலையாக்கம் என்ற பார்வையில் விஜயநகர பேரரசை முன்வைத்து விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு ஒரு சிறு குறிப்பாக இக்கட்டுரையை எடுத்துக் கொள்ளலாம்.

உதவிய நூல்கள்:

(1). கிருட்டிணதேவராயர், பு.ச.அரங்கநாதன், வரலாற்றுத்துறை பேராசிரியர், அரசு பயிற்சிக் கல்லூரி, வேலூர், தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம், வரிசை எண்-589, 1974

(2). The Tamil Country under Vijayanagar, Dr.A.Krishnaswami, Reader in History, Annamalai University, 1964

(3). ஆமுக்த மால்யத, கிருஷ்ண தேவராயர், தமிழில்: எம்.ஜி.ஜெகன்நாதராஜா, ஜி.குணசேகர், தெலுகு பல்கலைக்கழகம், ஹைதிராபாத், 1988

- அழகிய பெரியவன்