குடி குடியைக் கெடுக்கும் என்பது போத்தல் மொழி. இந்த போத்தல் மொழி தெரியாத தமிழ்க்குடிமகன் தமிழ்நாட்டில் இருக்க முடியாது என்றே சொல்லலாம். இந்தக் குடி எந்தக் குடியை எப்படிக் கெடுக்கும் என இதுவரைக்கும் யாருக்கும் கேள்வி இல்லை. கேள்வி இருந்திருந்தால் இக்கட்டுரைக்கு அவசியம் இருந்திருக்காது. மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்பதும் இன்னொரு போத்தல் மொழி. மதுவால் நாட்டுக்கு உயர்வு எனப் பொது உரையாடல் ஆங்காங்கே நடக்கிறது. உயிருக்குக் கேடு என்பது குறித்துப் பெரிதாக உரையாடல் நடப்பதில்லை. ஆகையால் இந்த போத்தல் மொழியிலும் சீர் திருத்தம்(!) தேவைப்படுகிறது. சரி, நீங்கள் கேட்கலாம். அதெப்படி ஒரு குமுகத்தில் குடிக்காமலேயே அத்தனை பேரும் இருந்திட முடியுமா? நூறு வீதம் குடியில்லாத குடிகளை  கொண்ட குமுகம் ஒன்றை கண்டிட முடியுமா? இல்லாத ஊருக்கு வழி சொல்வது போலல்லவா இருக்கிறது.

உலகில் வாழும் எந்த ஒரு மக்கள் கூட்டமும் மதுவின்றி இயங்குவதில்லை. இயங்கியதுமில்லை. மது மக்கள் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. குளிர் சூழலில் (வட துருவத்திற்கு அருகில்) வாழும் மக்களின் உடல் சூட்டிற்காக,க ளிப்பிற்காக,போரில் ஈடுபடுவதற்காக, சில வேளைகளில் மருந்தாகக் கூட  மது எடுத்துக் கொள்வர். தமிழ்ச் சூழலில் களிப்பிற்காக, உடல் அலுப்பிற்காக, போர் புரிவதற்காக மது எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. மது என்ற சொல்லுக்கு இன்றைய பொருள் வேறாகத் திரிந்து விட்டது. சீமைச் சாராயத்தை மது என்று நாம் இன்றைக்கு புரிந்து வைத்திருக்கிறோம்.

“இக்கு, நனை, தேன், முருகு, தோப்பி, நறவு, பிரசம், தணியல், சுரை, படு, வேரி, மட்டு, தேறல், சாறு, பானம், வடி, பிழி, மது, வழி, தொண்டி, யானம், அரிட்டமும், சாதியும், கள் ஆகுமே அருகிக் கல்வையும், விளம்பியும், ஆகும்” என்று திவாகர நிகண்டு கள்ளின் பெயராக இத்தனை பெயர்களை அடுக்குகிறது. இப்பெயர்கள் அனைத்தும் பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளைக் குறிக்கவில்லை. அரிசியிலிருந்து, பழங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஊறல்களையும் தேறல்களையும் மேற்கண்ட பெயர்களில் அழைக்கலாம்.

சங்க இலக்கியம் ஏராளமான இடங்களில் கள் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்திருக்கிறது. உழைக்கும் மக்களின் உடல் அலுப்பிற்குப் பனங்கள், தென்னங்கள் ஆகிய பானங்கள் சரியான தீர்வாக இருக்கும். வயலில் உழைப்புச் செலுத்திய உழவர்கள் கள்ளை அருந்திய செய்தியை சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது.

கள்ளை உண்ட உழவர்கள் மகிழ்ந்திருந்த காட்சியை அகநானூற்றில் நக்கீரர் இவ்வாறு பதிவு செய்கிறார்.

“கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர்”

அதியமான் நெடுமானஞ்சியிடம் சிறிய அளவே கள் இருந்தாலும் அதை எமக்கு கொடுத்துச் சிறப்பிப்பார். நிறைய கள் இருந்தால் எமக்கு கொடுத்து மீதியை அவர் அருந்துவார் என்று ஔவையார் கள்ளினைத் தானும் மன்னன் அதியமானும் பகிர்ந்துண்டதை புறநானூற்றில் பாடுகிறார்.

சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே

பெரிய கள் பெறினே

யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே”

வள்ளுவரின் கள் உண்ணாமை அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள குறள்கள் அறிவோடு, மானத்தோடு தொடர்பு படுத்தி எழுதப்பட்டவை. சான்றோன், அரசன் ஆகிய மேல் தட்டு வர்க்கத்தினரை மையப்படுத்திச் சொல்லப்பட்டவை. உழைக்கும் வர்க்கத்தின் பார்வையில் இருந்து மதுவை வள்ளுவர் அணுகவில்லை என்பது வருத்தமே. 

கள்வெறி (வெறி என்றால் போதை) கொண்டு ஆநிரை கவர்வதும்   போருக்குச் செல்வதும் சங்க இலக்கியங்களில் மிகையாக காண முடிகிறது. அதியமானும் அவ்வையும் அமர்ந்து கள் அருந்திய செய்தியும் மேற்சொன்ன பாடலில் பதிவாகி உள்ளது. மதுவோ கள்ளோ அது ஓர் குமுகத்தின் உறுப்பாகும். வரலாறு நெடுக ஒவ்வொரு குமுகமும் தனக்குத் தேவையான மதுவை அரிசியில் பழங்களில், பனையின்/தென்னையின் சாறிலிருந்து இப்படி உற்பத்தி செய்து நுகர்ந்து வந்திருக்கிறது. இதில் எந்தப் பிழையும் இல்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் கொடைத் திருவிழாவில் மதுவைக் கொடையாகத் தெய்வத்திற்கு படைத்துப் பின்னர் ஊரார் பகிர்ந்து கொள்வது 90கள் வரைக்கும் பரவலாக இருந்து வந்திருக்கிறது. குறுவைக் களஞ்சியம் எனும் “மரபு நெல்” அரிசியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இம்மதுவானது அந்த வட்டார மக்களின் பண்பாட்டு அறிவாகும். இந்நெல்லில் மாவுச் சத்து அதிகமாக இருப்பதால் மது உற்பத்திற்கென்றே இது பெயர் பெற்றது. ஒட்டு நெல் வகைகள் அறிமுகமான பின்னர் குறுவைக் களஞ்சியம் சாகுபடியில் காணாமல் போய் விட்டது. அதனால் மது உற்பத்தியையும் மக்கள் மறந்து தொலைத்து விட்டனர். பொருள் அழிகிறது. அதனோடு சேர்ந்து அறிவும் அழிகிறது. அதனோடு சேர்ந்து பண்பாடும் அழிகிறது. மதுக் கொடை குறித்து ஆ. சிவசுப்பிரமணியன் “மந்திரங்களும் சடங்குகளும்” நூலில் எழுதி இருக்கிறார்.

உழைப்புச் செலுத்தும் உழைக்கும் மக்களின் கிரியா ஊக்கியாக மது இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்கள் தொடர்ந்து உழைக்க, தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபட, அவர்களை நகர்த்துவதில் மதுவின் பங்கு கணிசமானது. எனினும் எந்த மாதிரியான மது வகை என்கின்ற கேள்வியே இங்கு முன் வைக்கப்படுகிறது. எந்த மதுவை நிராகரிக்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டி இருக்கிறது. தற்சார்பாய்ப் பண்டைய அறிவுத் தொடர்ச்சியின் விளைவால் உற்பத்தி செய்து கொண்ட மது மக்களுக்குத் தீங்கு இல்லாததாக இருந்தது. சீமைச் சாராயத்தின் வரவு கள்ளச் சாராயத்திற்கு வழி வகுத்தது. பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள்ளினில் போதைத் தன்மை குறைவான வீதமே இருக்கிறது. அதே வேளையில் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் வலுவையும் வழங்குகிறது. மக்களின் உற்பத்திசார் அறிவில் இருந்து மது அகற்றப்பட்டது. மது நுகரும் பண்டமாக மக்களுக்கு அறிமுகமாகத் தொடங்கிய நாளிலிருந்து குமுக நோய் வீரியமாக பரவத் தொடங்கியது. கள்ளச் சாராயமும் கள்ளில் வேதிப் பொருட்களைக் கலந்து உற்பத்தி செய்யப்படும் முறையற்ற மதுவும் உடலுக்குத் தீங்கானவை. இவற்றை எதிர்ப்பதோடு மட்டுமின்றி இவ்வகை உற்பத்தியைத் தடை செய்ய வேண்டும். கள்ளச் சாராயத்தைத் கட்டுப்படுத்தும் நோக்கில் பனைபடு பொருளான “கள்” எனும் உணவு பொருளுக்கு தடை விதித்து நிறுவனமயப்பட்ட மதுக் கொள்கையினை கொண்டு வந்தனர். மேற்சொன்ன கள்ள சாராயத்தின் பொருட்டு ஏற்படும் குமுகத் தீமைகளை விட  ஆலை உற்பத்தியான சீமைச் சாராயத்தால் அதிகத் தீமைகள் ஏற்படுகின்றன என்பது கசப்பான உண்மை. இந்தத் தீமைகளைக் கவனிக்கத் தவறி விட்டோம். அல்லது கட்டுப்படுத்தத் தவறுகிறோம்.

சீமைச் சாராயத்தை அரசே நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கிய பின் தமிழ்க் குமுகம் பாரிய சீரழிவுகளைச் சந்தித்து வருகிறது. அரசு ஒருபுறம் இலக்கு வைத்து மது விற்கிறது. மறுபுறம் திரைப்படம் போன்ற வெகு மக்கள் ஊடகங்களில் மது குடிப்பது, மதுவைக் கொண்டாடும் வகையில் உரையாடல்/பாடல் காட்சிகள் அமைப்பது போன்ற போக்குகள் இளைஞர்கள்/பெண்கள்/மாணாக்கர்கள் ஆகியோரை மது நுகர்வை நோக்கித் தள்ளுகின்றன. “Weekend Drinker, Occasional Drinker, Social Drinker, Party Drinker” போன்ற குமுக ஊடகச் சொல்லாடல்கள் மது குடிப்பதை ஞாயப் படுத்துகின்றன. புனிதப் படுத்துகின்றன. செய்தி ஊடகங்கள் “மதுப் பிரியர்” என்று பெயரிட்டு பொறுப்பற்று செய்தி சொல்கின்றன. மது விடயத்தில் ஊடகங்கள் குமுக அறம் என்பதை எப்போதோ மறந்து விட்டன. தெருவிற்கு ஒரு குடிகாரன் என்ற காலம் போய் தெருவெங்கும் குடிகாரன் என்கிற நிலைக்குத் தமிழகத் தெருக்கள் மாறி விட்டன என்பது மிகை அல்ல.     

உழைக்கும் மக்களின் பொருளியல்/குமுக வாழ்வியலில் மது பெரும் சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. பணம் படைத்தவரும் குடிக்கிறார். பணம் அற்றவரும் குடிக்கிறார். குடிப்பதால் இவ்விருவரும் ஒரே அளவுகோளில் அளக்கப்படுவதில்லை. இருவரையும் குமுகம் ஒரே மாதிரி அணுகுவதுமில்லை. அன்றாடம் உழைக்கும் மக்களின் பொருளியல் நிலை இறங்கு நிலையில் போய்க் கொண்டிருப்பதை எந்த ஒரு பொருளாதாரக் குறியீடு அலகுகளும் குறியிட்டுக் காண்பிக்கவுமில்லை. மாறாக மது விற்பனையில் ஆண்டாண்டு வருமானம் கூடுவதை துறை அமைத்துக் கண்காணித்து வருகிற சூழல் நிலவுகிறது. குடும்பங்களின் மகிழ்ச்சி அளவீடு (Happiness Index) எடுத்துப் பார்த்தால் குடும்பங்களில் சாராயம் ஏற்படுத்தி இருக்கும் விளைவுகள் புரிய வரும்.

2003&இல் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மது விற்பனையின் வணிகத்தை அரசுடைமையாக்கியது. அன்று தொடக்கம் இன்று வரைக்கும் மது விற்பனை ஏறுமுகம்தான். ஒழுங்கமைக்கப்பட்ட, நிறுவனமயமாக்கப்பட்ட அரசுடைமையாக்கப்பட்ட “மது விற்பனை” மக்களின் நுகர்வை குறைக்கவில்லை மாறாகக் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகரிக்க வைத்திருக்கிறது.

நிறுவனமயமாக்கப்பட்ட மது வகைதொகையின்றி பாலின/வயது வேறுபாடின்றி அனைவரையும் உள்ளிழுத்திருக்கிறது. திராவிட கட்சிகளின் அரசு நிர்வாக முறையில் வேறுபாடுகள் இருந்தாலும் மதுக் கொள்கை என்று வருகின்ற பொழுது இரண்டு தரப்பிற்கும் வேறுபாடில்லை.              tasmac income

*** source - Indian Express

**விகடன் குழுமம் கோரிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தகவல்

* Frontline Hindu

மதுவின் வருவாய் அதிகரிப்பது போலத் தோன்றினாலும் அரசிற்கு நிகர லாபம் என்பது ஏமாற்றம் தருவதாக இருக்கிறது. தனியார் மது ஆலைகளிடமிருந்துதான் அரசு மதுவைக் கொள்முதல் செய்கிறது. வருவாயில் இருந்து கொள்முதல்,விற்பனை வரி,பணியாளர்கள் ஊதியம், இதர செலவுகள் போக இரண்டு வீதமே லாபம் வருவதாகக் கூறப்படுகிறது. விகடன் குழுமம் தகவல் உரிமைச் சட்டத்தின் படி 2009&-2019 ஆண்டுகளுக்கான மது வருவாய்க் கணக்கினை அரசிடம் கேட்டறிந்தது. அதன்படி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tasmac) நட்டத்தில் இயங்குவதாக அறிக்கை தெரிவிக்கிறது. மதுவை உற்பத்தி செய்யும் தனியார் ஆலைகளுக்கு எந்தச் சரிவுமில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. பல இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் மதுவிற்குப் பூரண மது விலக்கு கேட்டுப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மறுதலையில் மது விற்பனை பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்புக் கேட்டு அவரவர் குடும்பத்துடன் அவர்கள் சங்கத்தினூடாகப் போராட்டம் செய்திருக்கின்றனர். இப்படியான முரண் நகையுடன் தான் மது விலக்கும் மது வளர்ப்பும் தமிழகத்தில் நிலை பெற்றிருக்கிறது.   

புத்தம் புதிய இளைஞர்கள், பதின்ம வயதுச் சிறுவர்கள், பெண்கள், சிறுமியர்கள் மதுப் பழக்கத்திற்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. ஒரு புறம் புதிய இளைஞர்கள் மதுப் பழக்கத்திற்கு ஆளாவதைக் கண்காணித்துக் கட்டுப் படுத்துவோம் என்கிறார் மது விலக்கு அமைச்சர். மறுபுறம் அயல்நாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்து அவற்றிற்கெனத் தனியாகக் கடைகள் திறக்கப்படுகிறது. இதற்கு முந்தைய ஆட்சியின் அமைச்சர் (2016-&2021) மதுக்கடைகளை படிப்படியாக குறைப்போம் என்றார். ஆனால் முதன்மைச் சாலையின் முகப்பில் இருக்கும் கடைகளை மூட வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பைச் சமாளிக்கும் விதமாகக் கடைகளின் முகப்பை மூடிவிட்டு கொல்லைப் புறத்தை முகப்பாக்கி வெற்றி கண்டனர்.  எதிர்காலத் தமிழகத்தின் இயங்கு ஆற்றல் வீதிகளில் மனம் பிறழ்ந்து கிடப்பதைக் காணச் சகிக்க முடியவில்லை. நினைத்துப் பார்க்க முடியாத வன்முறைகள் நாளும் அரங்கேறுகின்றன. குறிப்பாக ஊரகங்களில் சாராய போதையும் சாதி வெறியும் இன்றைய இளைஞர் குழாமைச் சீரழித்து வருகின்றன. நகரங்களில் வழிப்பறி,கொள்ளை,கொலை போன்ற குற்றச் செயல்களின் அதிகரிப்பில் மதுவின் பங்கு முதன்மையானது. பள்ளிக் கூடங்களில், கல்லூரிகளில் மக்களிய ஆற்றல்கள் ஊடுருவ வேண்டும். கல்வி என்பதை இயந்திர கதியாக அணுகாமல் குமுகத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். பாடத் திட்டங்களில் சீர்திருத்தம் கொண்டு வருவதைப் போல கல்வி அமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். பொருள்சார் கல்வி முறையைக் காட்டிலும் குமுகத்திற்கு அறம்சார் கல்வி அவசியமாகிறது.

தந்தை குடிகாரராக இருப்பதால் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக  வளர்ந்து வரும் பிள்ளைகள் குமுகத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதில் தடைகள் ஏற்படுகின்றன. “குடிகாரன் மகன்”, “குடிகாரன் பொண்ணு”, “குடிகாரன் பொண்டாட்டி” போன்ற சொல்லாடல்களை எதிர்கொள்ள முடியாமால் கூனிக் கூறுகிப் போகிறார்கள். இவர்கள் வெளிப்படையாக இந்தச் சொற்களை சந்திக்காவிடினும் குடும்பத்தின் பொருளியல் நிலை இவர்களை இந்தச் சொற்களின் சொந்தக்காரர்களாக மாற்றுகிறது. குமுகத்தின் ஏளனப் பார்வை இவர்களைத் தாழ்வு மானப்பான்மைக்குள் விழச் செய்கிறது. இதனையொட்டி தற்கொலைகள் நடக்கின்றன. குடி கூடவே இருப்பவரையும் கொல்கிறது. குடி எனும் “சேர்ந்தாரைக் கொல்லி” ஒரு குற்றமும் அறியாத இளம் பருவத்தினரையும் தன்னோடு சேர்த்து அழித்து வருகிறது.

ஆண்டிற்கு 30 இலட்சம் பேர் மதுவினால் இறந்து போகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம்(உ.சு.நி) சொல்கிறது. மேலும் மதுவிற்கு எதிராக ஓர் அரசு 10 வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வழிகாட்டுகிறது. மது விற்பனை வணிக விளம்பரங்கள் மற்றும் விளையாட்டுகளில் மதுபான நிறுவனங்களின் பங்கேற்பு ஆகியவை கவலை அளிக்கும் செயல்பாடுகள் என உ.சு.நி தெரிவிக்கிறது. இந்திய ஒன்றியத்தில் துடுப்பாட்டப் போட்டிகளில் பெரும்பாலும் மது விற்பனை நிறுவனங்களின் ஆதிக்கம் இருப்பதை மறுக்க முடியாது. Sponsor என்று சொல்லப்படும் நிதி வழங்குபவர்களாக இந்த மதுபான நிறுவனங்கள் இருக்கின்றன. இளைஞர்கள் இந்த போட்டிகளின் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் மதுவிற்கு ஆட்படுகிறார்கள். போலவே கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் திரைப்படங்களில் பெருவாரியான காட்சிகள் மதுவின்றிக் காண்பிக்கப்படவில்லை என்பதும் கருதத்தக்கது.

வீட்டில் வளரும் குழந்தைகள், வீதியில் விளையாடும் பிள்ளைகள், குமுக இடங்களில் கூடும் இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் மதுவை தத்தம் புத்தியில் மிக இயல்பாக ஏற்றுக் கொள்ளும் (Social Acceptance) அளவிற்குத் தமிழ்ச் சூழல் மாறி வருகிறது. மதுப் பழக்கத்தால் கிட்டதட்ட 60 நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று லான்செட் கூறுகிறது. இந்திய ஒன்றியம் உலகின் மூன்றாவது பெரிய சாராயச் சந்தை என்றறியப்படுகிறது.

தாய் வழிக் குமுகமான தமிழர்களின் குடும்பங்களைப் பெண்கள் தான் இயக்கி வருகின்றனர். பெண்கள்தான் வழி நடத்தி வருகின்றனர். மதுவிற்கு அடிமையாகி வாழ்விழந்து வருவாய் இழந்து வீதிகளில் உயிரை/உடைமையை விடும் கணவன்/மகன்/உடன்பிறந்தான்  ஆகியோருக்காக வீதிகளில் மதுக்கடைகளை மூடச் சொல்லிப் போராடிய பெண்கள் மீது அரசுகள் கடுமையாக நடந்து கொண்டன. மது ஒழிப்பு என்பது தேர்தல் அறிக்கைகளை அலங்கரிக்கும் வெற்றுச் சொல்லாடலாகிப் போனதைத் தமிழர் கூட்டம் இன்னமும் உணரவில்லை.   

தீர்வு :

தமிழகக் சூழலில் மது மற்றும் மதுவினால் ஏற்படும் குற்றங்களும் உழைக்கும் மக்களின் பொருளாதாரச் சரிவுகளும் அவர்களின் வாழ்நிலை அவலங்களும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. நாம் கடந்த நாற்பது ஆண்டுகளாக  மது விலக்கு எனும் சொல்லியத்திற்கு உரிய பொருளை அளிக்கத் தவறி விட்டோம். பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை என்று சொல்கிற அறிஞர்களும் இருக்கின்றனர். நாம் கேட்பது பூரண மது விலக்கு அல்ல. நாம் கேட்பது நிறுவனமயப்பட்ட மது விற்பனைத் தடை. குவிமையப்படுத்தப்பட்ட இந்த மது விற்பனையால் அரசும் மக்களும் நன்மையோ இலாபமோ அடையவில்லை. மாறாக தனியார் மது உற்பத்தி ஆலை முதலாளிகளே பெரும்பலன் அடைந்து வருகின்றனர். நடைமுறையில் இருக்கும் மதுபான விற்பனை மற்றும் உற்பத்தியை ஒரே இரவில் மாற்றிட முடியாது. கீழ்க்கண்ட வழிமுறைகளின் மூலம் புதிதாகக் குடிக்க வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

  • விற்பனையைக் குறைப்பது
  • கடைகளை எளிதில் அணுக முடியாதவண்ணம் அமைப்பது
  • மதுவின் விலையை அதிகரிப்பது
  • தனியார் ஆலைகளிடம் பெறப்படும் கொள்முதலைக் குறைப்பது
  • வாரத்திற்கு இவ்வளவு என ஒருவருக்கு அளவை நிர்ணயிப்பது
  • மருத்துவரிடம் அனுமதிச் சான்றிதழ் பெற்று நுகர்வது

மறுதலையில்   மக்களின் நீண்ட நெடிய அனுபவ அறிவில் பிறந்த பானங்களை சில்லறை வணிகத்தில் விற்பனை செய்வதன் மூலம் மக்களும் நன்மை அடைவர். அரசும் அரசு நிறுவனங்களும் பயன் பெறும்.

பதநீர் மது விலக்கு பரப்புரைக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றார் ஜே. சி குமாரப்பா. அவரைப் பொறுத்தவரை கள் ஒரு போதை தரும் பானம். ஒரு காந்தியவாதியாக கள் மீது அவருக்கு இருந்த அதே பார்வை பனைபடு பொருட்களின் மீது இல்லை. மாறாகப் பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பதநீர் ஆகியவை உள்ளூர் பொருளாதாரத்தில் மக்களுக்கு நல்ல பயனளிக்கும் என்றார். அவர் காலத்தில் கரும்புச் சாகுபடியை அவர் கடுமையாக எதிர்த்தார். நன்செய் நிலங்களை கரும்பிற்குப் பயன்படுத்தி அதிலிருந்து ஆலைச் சர்க்கரையை கொள்முதல் செய்வதை விட காடு கரைகளில் பராமரிப்பு அவசியமின்றி வளர்ந்து நிற்கும் பனை மரங்கள் தரும் கருப்பட்டி, பனங்கற்கண்டு மேலானது என்றார். இன்றைக்கு எரி சாராயம் உற்பத்தி செய்யக் கரும்பு ஆலைகளில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட மொலாஸஸ் தான் அதிகமாகப் பயன்படுகிறது. மேலை நாடுகளில் மது உற்பத்தி செய்யப்படும் முறைகளை விட நம் ஊரில் உற்பத்தி செய்யும் முறைகள் மிகவும் கீழானதாகத்தான் இருக்கிறது.

மது விலக்கிற்குப் பனங்கள் போலவே தென்னங்கள்ளும் நாம் முன்வைக்கிற ஒரு தீர்வாகும். ஆண்டு முழுவதும் சீமைச் சாராயம் போல இந்தக் கள் வகைகள் கிடைக்குமா என்ற கேள்விக்குக் கிடைக்கும் என்றே பதில் சொல்கிறார் பனைச் செயற்பாட்டாளரும் போராளியுமான பாண்டியன். கோடை காலத்தில் கிடைக்கும் பனங்கள் உடலிற்கு குளிர்ச்சி தரக்கூடியது. எல்லா காலத்திலும் கிடைக்கும் தென்னங்கள் குளிர்/மழை காலத்தில் உடலிற்கு சூட்டைத் தரக்கூடியது என்கிறார். அந்தந்த நிலத்து மக்கள் அந்தந்தச் சூழலுக்கு ஏற்பப் பானங்களை அருந்தி வந்திருக்கின்றனர். நெய்தல் நிலத்தில் சுண்ட கஞ்சி, குறிஞ்சி நிலத்தில் தினை மாவில் உற்பத்தி செய்த தோப்பி, தேறல் முல்லை/மருத நிலத்தில் அரிசி வகைகளில் உற்பத்தி செய்த மது (rice beer) எனப் பன்முகத் தன்மையான பானங்களைத் தமிழர்கள் அருந்தி வந்திருக்கின்றனர். பன்முகத் தன்மையான பானங்களை அருந்தி வந்த தமிழர்கள் இன்று ஒற்றைத் தன்மையான நிறுவனமயப்பட்ட சாராயத்தை அருந்தி வருகின்றனர்.

கள் இறக்குவதற்கு தடையை நீக்க வேண்டும். அரசே கள்ளினை பனைத் தொழிலாளர்களிடம் இருந்து கூட்டுறவு முறையில் கொள்முதல் செய்து சில்லறை வணிகத்தின் மூலம் விற்பனை செய்ய வேண்டும். நம் மரபறிவில் இருந்த பல வகையான மது வகைகளை இனம் கண்டு முறையாக உற்பத்தி செய்து நெறிபடுத்தப்பட்ட முறையில் வணிகம் செய்திட வேண்டும். அரசுசார் நிறுவனங்களை ஏற்படுத்திக் கலப்படங்கள், முறையற்ற உற்பத்தி ஆகியவற்றைத் தடுத்திட அதிகாரம் அளிக்கலாம். இவ்வகையில் ஊரக மகளிருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஊரக பொருளாதாரத்தை வலுப்படுத்தலாம். குவிமையப்படுத்தப்பட்ட மது விற்பனையைப் பன்முகத் தன்மை கொண்ட மது உற்பத்தி மற்றும் விற்பனை மூலம் பரவலாக்கம் செய்கிற பொழுது ஜே. சி குமாரப்பாவின் கீழ்க்கண்ட சிந்தனை முழுமை பெறும்.

“நமக்கு பெரும் உற்பத்திகளை விட வெகு மக்களின் உற்பத்தி தான் சரியானது”

பார்வை நூல்கள் :

(1). பனை மரம், தமிழ்நாட்டு தாவரக் களஞ்சியம், இரா. பஞ்சவர்ணம்,

(2). குமரப்பாவிடம் கேட்போம், மொழியாக்கம் அமரந்த்தா, பரிசல் பதிப்பகம்

(3). பனை மரமே பனை மரமே, ஆ. சிவசுப்பிரமனியன், காலச் சுவடு

பார்வை இணைய தளங்கள் :

(1). <https://indianexpress.com/article/cities/chennai/tamil-nadu-sees-a-rise-in-liquor-sale-revenue-last-fiscal-8554082/>
(2). <https://frontline.thehindu.com/social-issues/booze-bumps-time-to-turn-around-tasmac-from-its-terrible-mess/article65662104.ece>
(3). <https://www.vikatan.com/government-and-politics/politics/tas-mac-liquor-sell-in-rs31243-crore-loss-what-is-the-reason>
(4). <https://www.hindutamil.in/news/supplements/ilamai-puthu-mai/54460-.html>
(5). <https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5353818/>
(6).. <https://www.thelancet.com/article/S0140-6736(18)31310-2/fulltext>
7. <https://www.who.int/news-room/feature-stories/detail/10-ar-eas-for-national-action-on-alcohol>