கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

“தலைமைப் பீடத்தைத் தகர்த்தெறியுங்கள். உங்கள் கலகம் நியாயமானது.”

கலாச்சாரப் புரட்சிக் காலத்தில் மாவோ - 1966

"தோழனே ஓடு, பழைய உலகம் உன் பின்னால் வருகிறது.”

பாரிஸ் மாணவர் போராட்டச் சுவரெழுத்து - 1968

“பாலஸ்தீன மக்களின் மீதான இனக்கொலையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலிய  இராணுவத்திற்கு ஆயுத உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பல்கலைக்கழகம் முதலீடு செய்வதையும், பல்கலைக் கழகத்தில் அத்தகைய நிறுவனங்கள் முதலீடு செய்வதையும் பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்த வேண்டும்.”

நியூயார்க் கொலம்பியா பல்கலைக் கழக மாணவர்களின் பிரகடனம் - 2024

இஸ்ரேலியக் குண்டுவீச்சினால் காசாவில் 12 பல்கலைக் கழகங்கள், 92 பள்ளிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுத் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளன. 90 ஆயிரம் பல்கலைக் கழக மாணவர்கள் கல்வி சார்ந்து நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர்.

பாஸ்தீனத்திற்கு ஆதரவாக 140 அமெரிக்கப்  பல்கலைக் கழகங்களிலும், இங்கிலாந்தில் 30 பல்கலைக் கழகங்களிலும், ஸ்பெயினில் 75 பல்கலைக் கழகங்களிலும் மாணவர்கள் கூடாரம் அடித்துப் போராடி வருகிறார்கள். அமெரிக்காவில மட்டும் 3,000 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கான மாணவர்கள் பல்கலைக் கழகங்களிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் மாணவர்கள் போராட்டங்கள் அதன் ஆரம்ப நிலையிலேயே காவல்துறை கைதுகளால் தடுக்கப்படுகின்றன. மூன்று நாடுகளிலும் அமைதியாகக் கூடும் மாணவர்களின் மீது கடுமையான காவல்துறை வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் மாணவர்களின் கூடாரங்கள் புல்டோசர் கொண்டு தகர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் போராடும் மாணவர்களை முகமூடி அணிந்த இஸ்ரேலிய ஆதரவாளர்கள் தாக்குவதை காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலுடன் முதலீட்டு உறவு கொண்டிருக்கும் பல்கலைக் கழக நிர்வாகங்கள் மாணவர்ளைத் தாக்கப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல்துறையை அழைத்திருக்கிறது.

கொலம்பியப் பல்கலைக் கழகத்தில் தோன்றிய பொறி இன்று உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

உலகெங்கிலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்கலைக் கழகத்திற்குள் கூடாரம் அமைத்துப் போராடி வரும் இந்த மாணவர்களின் கோரிக்கைகள் என்ன?

- இஸ்ரேலுடன் தொடர்புபட்ட அனைத்து நிதித் தொடர்புகளையும், கல்வித்துறைசார் உறவுகளையும் தமது பலகலைக் கழகங்கள் கைவிடவேண்டும் (Divestment).

- பல்கலைக் கழகங்களில் பாலஸ்தீனம் சார்ந்த வரலாற்றைக் கற்பிக்க வேண்டும். பாலஸ்தீனக் கல்வியாளர்களைக் கற்பிக்க அனுமதிக்க வேண்டும்.

சில பல்கலைக் கழகங்கள் அரசுடன் இணைந்து மாணவர்களை ஒடுக்கிக் கொண்டிருக்க, பல பல்கலைக் கழகங்கள் மாணவர்களின் ஒரு சில கோரிக்கைகளையோ அல்லது முழுயைமையையுமோ ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டங்கள் இரண்டு முக்கியமான பிரச்சினைகளை உலகுக்கு அறிவித்திருக்கின்றன.

(1). ஆயுத உற்பத்தியில் பல்கலைக் கழகங்கள் முதலீடு செய்கின்றன. ஆயுத உற்பத்தியாளர்கள் பல்கலைக் கழகங்களில் முதலீடு செய்கிறார்கள். இதன்வழி போரழிவின் பகுதியாக பல்கலைக் கழகங்கள் ஆகியிருக்கின்றன.

(2). பல்கலைக் கழகங்கள் சமூகக் கருத்துருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றைக் காலனிய மூளைகள் இன்றும் கட்டுப்படுத்துகின்றன. இதற்கு மாற்றான சிந்தனையமைப்புகளையும் தமது கற்றல் திட்டங்களுக்குள் பல்கலைக் கழகங்கங்கள் கொண்டு வர வேண்டும்.

அயர்லாந்தில் டப்ளின், ஸ்விட்சர்லாந்தில் ஜெனோவா, இங்கிலாந்தில் கோல்ட்ஸ்மித், ஸ்பெயினிலுள்ள 75 பல்கலைக் கழகங்கள்  பாலஸ்தீன ஆதரவு மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. அமெரிக்காவில் இல்லினாய்ஸில் உள்ள வடமேற்குப் பல்கலைக்கழகம், ஒலிம்பியாவில் உள்ள எவர்கிரீன் ஸ்டேட் காலேஜ், வாஷிங்டன், நியூ ஜெர்சியில் உள்ள நியூ பிரன்சுவிக்கில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் மினியாபோலிஸில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழகம் ஆகியவை மாணவர்களுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளன. இவர்கள் போராட்ட முகாம்களைத் தொடர அனுமதித்துள்ளனர். இஸ்ரேலுடனான நிதித் தொடர்புகள் விலக்கிக் கொள்ளப்படும், கற்றலில் பாலஸ்தீனப் பிரச்சினை உள்வாங்கப்படும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன.

சின்னச் சின்ன நகர்வுகள்தான். இவை காட்டுத் தீயின் வலிமை கொண்ட பொறிகள்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்கள் பெரிய முதலீட்டு நிறுவனங்களுக்கு நிகரானவை. இவை சர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் தங்கள் பல்கலைக் கழகம் மனிதர்களுக்கும் புவிக்கும் தீங்கு விளைவிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதை விரும்புவதில்லை. இந்தப் பதற்றம் காலப்போக்கில், மரபார்ந்த பல்கலைக்கழகச் சமூகம் குவிக்கக் கூடிய அதிகாரத்தைத் தக்க வைக்க மாணவர்களின் மீதான அடக்குமுறை, கல்விப்பாடங்ளில், கற்பித்தலில் அதிநவீன தணிக்கை முறைகளுக்கு வழிவகுத்தது.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் அமெரிக்காவின் கொலம்பியா பலகலைக்கழகத்தில் தொடங்கிய மாணவர்களின் கூடாரப் போராட்டம் இன்று உலகெங்கிலும் தீர்மானமான பாதிப்பை உருவாக்கியிருக்கிறது. பாலஸ்தீன இஸ்ரேல் பிரச்சினை குறித்து அதிக நூல்கள் எழுதிய இங்கிலாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் இலன் பெப்பே சொல்கிறபடி :

அமெரிக்காவில் தொடங்கிய மாணவர்களின் எதிர்ப்பு இயக்கம் தற்போது மேற்கத்திய உலகம் முழுவதும் பரவி வருவதால் இஸ்ரேல் மீதான பல்கலைக் கழகங்களின் புறக்கணிப்பு அதிகரித்துள்ளது. மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்கும்படி பல்கலைக் கழகங்களை வற்புறுத்துவதில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள சூழலில், இஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களில் இருந்து தமது பல்கலைக் கழகங்கள் விலக வேண்டும் என்று கோரிய கல்வியாளர்களைத் தம்முடன் அவர்கள் இணைத்துக் கொண்டனர்.

இஸ்ரேலின் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் மூத்த அரேபிய விரிவுரையாளர் நதேரா ஷல்ஹ_ப் கெவோர்கியன் தாம் பணியாற்றிய பல்கலைக் கழகத்தை இராணுவ உற்பத்தியில் அதன் தொடர்பை விமர்சித்த காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரது சக ஊழியர்களின் உதவியுடன் போலீசார் அவரை நீண்ட விசாரணைக்கு அழைத்து வந்து கைகளையும் கால்களையும் கட்டி இரவு முழவதும் குளிர்  அறையில் அடைத்தனர்.

இறுதியாக, காசாவில் அறுவைச்சிகிச்சை நிபுணராக இருந்த ஸ்காட்லாந்து கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் இயக்குனரான கசான் அபுசித்தாவின் சாட்சியத்தினால், காசாவில் பாவிக்கப்பட்ட  இஸ்ரேலிய இராணுவ ட்ரோன் தயாரிப்பாளரான எக்ஸ்டெண்டில் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் செய்த முதலீட்டைப் பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். இஸ்ரேலிய ஆயுதத் தொழிலில் இதுவும், இதேபோன்ற கல்விச் சாலைகளிளினதும் உடந்தையானது இஸ்ரேலியக் கல்வியாளர்களையும் அவர்களின் அரசையும் உலகெங்கிலும் மேலும் தனிமைப்படுத்தியிருக்கிறது(1).

மாணவர்களின் இந்தப் போராட்டங்களை அமெரிக்க, மேற்கத்திய அரசுகள் யூத இன வெறுப்புப் (Anti Semitic) போராட்டங்கள் என நிரல்படுத்துகின்றன. யூத மாணவர்களை இவர்கள் அச்சுறுத்துகிறார்கள் எனப் பிரச்சாரம் செய்கிறார்கள். 

கனடிய நிறுவனமான ஸ்டார்பக்ஸின்(Starbucks) முதலாளி ஹோவர்ட் ஷல்ட்ஸ், கணினி நிறுவனமான டெல்(Dell) முதலாளி மைக்கேல் டெல்,  டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் சகோதரரும் நிதியாளருமான ஜோசுவா குஷ்னர் போன்ற பெரும் யூதச் செல்வந்தர்கள் மாணவர்களின் போராட்டத்தை முறியடிக்க நிதியளிப்புச் செய்வதற்காக ஒரு வாட்ஸ்ஏப் குழுவையே உருவாக்கியிருக்கிறார்கள்(2).

அரசுகளின் வன்முறை, வெள்ளை இனவெறி அடக்குமுறை இரண்டு முக்கிய இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, முதலில் எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்களின் மனதை விரக்திக்கு ஆட்படுத்துவது, அவர்களின் எழுச்சியூட்டும் எழுச்சியை பயனற்றது என்று நிராகரிப்பது. இரண்டாவதாக இயக்கத்தின் பிரதான கோரிக்கைகளிலிருந்து அவர்களைத் திசைதிருப்புவது. ஆக்கத்திறனுடன் அச்சமற்றும் தன்னலமற்றும் செயல்படும் மாணவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் புறக்கணிப்பு, காசா போர்நிறுத்தம் (Ceasefire)  எனும் கோரிக்கைகளை வீறுடன் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான மாணவர்களின் இந்த எழுச்சி நமது நினைவுகளில் வரலாற்றின் பல நிகழ்வுகளை நம்மை மீள் நோக்கச் செய்கிறது. உலகை மாற்றிய நிகழ்வுகளில் பிரதானமானது அக்டோபர் புரட்சி. அதனைத் தொடர்ந்து வருகிறது நாற்பதுகள் தொடக்கம் காலனிய ஆதிக்க எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராட்டங்கள். பிரான்சில் படிக்கச்சென்ற சீன மாணவர்கள் சீனா திரும்பியபோது மார்க்சியச் சிந்தனையையும் உடன் ஏந்திச் சென்றனர். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் பலரும் அம்பேத்கரும் இவ்வாறு தமது அயலக வாழ்வில் விடுதலைச் சிந்தனையை அகலித்துக் கொண்டார்கள். அரபுலகின் ஒரே சோசலிச நாடாக ஒருபோது இருந்த தெற்கு யேமானின் தலைவர்கள் 60-70களில் லெபனான் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் படித்து நாடு திரும்பியவர்கள். ஜார்ஜ் ஹபாஸ், காசன் கனாபாணி போன்றவர்கள் செயலாற்றிய பாலஸ்தீன மக்கள் விடுதலை இயக்கம் இங்கு படித்து நாடு திரும்பியவர்களால்தான் உருவாக்கப்பட்டது.

மேற்குலகில் இதற்கு இணையான ஒன்று 1968 பாரிஸ் மாணவர்-தொழிலாளர் எழுச்சி.

அறுபதுகளில் மாணவர்கள், உதிரிப்பாட்டாளிகள், வேலையற்றவர்கள், கலைஞர்கள், பிற சமூக இயக்கங்கள் சார்ந்தவர்களைப் புரட்சிகர சக்திகளாக மதிப்பிட்ட ஒரு கருத்தியல் போக்கை புதிய இடதுசாரிகள் முன்வைத்தனர். ஹெர்பர்ட் மார்க்யூஸ் இந்தப் போக்கை முன்வைத்தவர்களில் முக்கியமான கோட்பாட்டாளர். மூன்றாம் உலகின் விடுதலைப் போராட்டங்களை இவர்கள் தீவிரமாக ஆதரித்தனர். மாவோ, ஹோசிமின், சேகுவேரா இவர்களது ஆதர்சம். சீனத்தின் கலாச்சாரப் புரட்சியில் மாணவர்கள் முன்னோடிகளாகச் செயல்பட்டனர். பிரெஞ்சு மாணவர் எழுச்சியை பிரெஞ்சுக் கம்யூனிஸ்டுக் கட்சி போலவே லூயி அல்தூசர் ஆரம்பத்தில் ஆதரிக்கவில்லை. அவர் பிற்பாடு தனது நிலைபாட்டை மாற்றிக் கொண்டார். ழான் பவல் சார்த்தர் முழுமையாக ஆதரித்தார்.

‘மாணவர்கள் திட்டவட்டமான இலக்குகள் அற்றவர்கள். அவர்களது போராட்டங்கள் வெற்றிபெறவில்லை. அவர்கள் வன்முறையாளர்கள்’ எனப் பலவாறான விமர்சனங்கள் இன்றும் உள்ளன.

பாரிஸ் மாணவர் எழுச்சி இன்று வரை பேசப்பட என்ன காரணம்? பெண்ணிலை நோக்கு பெரும் சமூகத்தில் பரவ அது ஒரு காரணம். தேசிய விடுதலைப் போராட்டங்களின் அறநிலைபாட்டை அவர்கள் உலகெங்கும் எடுத்துச் சென்றார்கள். தொழிலாளர்கள் கூலி உயர்வு, வேலை நிலைமை தொடர்பாக அவர்கள் குரல்கொடுத்தார்கள்.  புதியதொரு உலகை அவர்கள் கனவு கண்டார்கள்.

மாவோ மாணவர்கள் பற்றிக் கூறியது இங்கு பொருத்தமானது :

ஒரு இளைஞன் ஒரு புரட்சியாளர் என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்க வேண்டும்? நாம் எப்படி இதனை வரையறுக்க முடியும்? ஒரே ஒரு அளவுகோல் மட்டுமே இருக்க முடியும். பரந்த அளவிலான தொழிலாளர்கள் விவசாயிகளுடன் அவர் தன்னை ஒருங்கிணைக்க விரும்புகிறாரா இல்லையா என்பதோடு நடைமுறையில் அவர் அவ்வாறு செய்கிறாரா எனப் பார்க்க வேண்டும்.  அவர் அவ்வாறு செய்யத் தயாராக இருந்து, உண்மையில் அவ்வாறு செய்தால், அவர் ஒரு புரட்சியாளர். இல்லையெனில் அவர் ஒரு புரட்சியாளர் அல்லாதவர் அல்லது எதிர்ப்புரட்சியாளர். இன்று அவர் திரளான தொழிலாளர்கள் விவசாயிகளுடன் தன்னை இணைத்துக் கொண்டால் இன்று அவர் ஒரு புரட்சியாளர். நாளை அவர் அதைச் செய்வதை நிறுத்தினாலோ அல்லது சாதாரண மக்களை ஒடுக்குவதாலோ அவர் ஒரு புரட்சியாளர் அலலாதவராக, எதிர் புரட்சியாளராக மாறுகிறார்(3).

இன்று பாலஸ்தீன ஆதரவு மாணவர்களின் எழுச்சியை மதிப்பிடுபவர்கள், இந்தப் போராட்டம் காலனியாதிக்கத்திற்கு எதிரான (anti colonial), நிற ஒதுக்கலுக்கு எதிரான (against aparthied), குடியேற்றக் காலனியத்திற்கு (settlers colonialism) எதிரான போராட்டம் என வரையறுக்கிறார்கள். இது இன்று சூழலியலுக்கான, பூமியைப் பாதுகாப்பதற்கான, எட்வர்ட் சைத் வாதித்த கலாச்சார ஏகாதிபத்தியத்கெதிரான (against cultural imperialism) போராட்டமாக இருக்கிறது. அந்த வகையிலேயே வியட்நாமிய ஆதரவுப் போராட்டத்துடன் இதனை ஒப்பிடுகிறார்கள்.

இந்தியாவில் நக்சலைட் எழுச்சியிலும் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியிலும் மாணவர்கள் மகத்தான பங்காற்றினர். நம் காலத்தில் அதற்கான சாட்சி ஜேஎன்யூ மாணவர்கள். ஆஸாதி என்பதை காஷ்மீரி மக்களே முதலில் முழங்கினர். அது செக்யூலர் முழக்கம். அதனை ஜேஎன்யூ மாணவர்கள் தேசிய முழக்கமாக ஆக்கினர். இன்குலாப் எனும் முழக்கம் பகத்சிங்குடன் வைத்துக் காணப்படுவது. இந்திய சுதந்திரத்திற்கான இன்னொரு பாதை என அதற்குப் பொருள். இந்தியா கேட்டில் மாணவர்களின் போராட்டத்தில் ஆஸாதி, இன்குலாப் ஜிந்தாபாத் என இந்த இரு முழக்கங்களே எழுப்பப்பட்டன.

பாலஸ்தீன மாணவர்களின் மீதான அமெரிக்க,மேற்கத்திய அரசுகளின் வன்முறையை 1968 பாரிஸ் மாணவர்களின் அனுபவத்துடன், 2020 இல் ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்ட அனுபவத்துடன் நாம் இணைத்துப் பார்க்க முடியும். பாரிஸ் காவல்துறை வன்முறையில் 800 மாணவர்கள் காயப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.

ஜேஎன்யூ வன்முறையில் போராடிய மாணவர்களின் உடல், உடைமை, பொருட்கள் சார்ந்து வன்முறையைத் திட்டமிட்டவர்கள், முன்னெடுத்தவர்கள், பங்கு கொண்டவர்கள் 20 ஏபிவிபி மாணவர்கள் மற்றும் அவர்களால் திரட்டப்பட்ட 20 வெளியாட்கள். இது தாக்குதலில் பங்குபற்றியவர்களின் நேரடி சாட்சியங்களால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தாக்குதலுக்குக் காவல்துறை தூண்டுதலாக இருந்திருக்கிறது. பல்கலைக் கழகத் துணைவேந்தர் நடைபெற்ற போராட்டத்தைப் புறந்தள்ளி, மாணவர்கள் முன்வைத்த  விடுதிக் கட்டணம்,  கல்விக்கட்டண உயர்வு போன்றவற்றைப் பற்றி உரையாட மாணவர்களைச் சந்திக்காமல், அவர்களைப் புறந்தள்ளி பல்கலைக கழக நிர்வாகம் கணினி வழியில் இது பற்றி அறிக்கைகள் மட்டும் விட்டு வந்ததால், இடதுசாரி அமைப்பு மாணவர்கள் கணினி சர்வரை மூடியிருக்கிறார்கள். இடதுசாரி மாணவர்கள் இதனைச் செய்யக் காரணம் துணைவேந்தரின் அலட்சியம் அல்லது புறக்கணிப்பு. இடதுசாரி மாணவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. பல்கலைக் கழகத்தில் முகமூடி அணிந்து, இரும்பு, கட்டைகள், கற்கள் கொண்டு தாக்கியவர்கள் ஏபிவிபி அமைப்பினர் மற்றும் அவர்களது கையாட்களான வெளியாட்கள்.

தமிழகத்தின் சென்னை ஐஐடியில் மாணவர்கள் மாணவிகள் நிர்வாகத்தின் பாரபட்சமான நடவடிக்கைகளால் பலர் தற்கொலை செய்து கொண்டனர். காரணங்களாக அங்கு பணியாற்றும் பார்ப்பனப் பேராசிரியர்களின் சாதி, மத உளவியல் சித்திரவதைகள் சொல்லப்பட்டன. ஐஐடி மாணவர்கள் ஐஐடியின் கட்டமைப்புசார் பிரச்சினைகளில் குறை கண்டு மாணவர் மனநலம் குறித்து வெளியிலுள்ள துறைசார் நிபுணர்களின் தலையீடு தேவை என்று கேட்கும்போது, ஐஐடி நிர்வாகம் தனது கட்டமைப்புசார் ஓர்மை பற்றிப் பேசி அந்த அறவொழுக்கத்தைச் சமூக ஊடகங்கள் கொச்சைப்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொன்னது. இந்தியாவெங்கிலும் இன்றும் கல்லூரிகளில சாதிய, மத ஒதுக்கல்களால் தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன. உஸ்மானியப் பல்கலைக் கழகத்தில் சாதிய ஒதுக்கலால் நிகழ்ந்த ஆய்வு மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை இந்திய மனசாட்சியை உலுக்கியது. இவ்வாறு உலகெங்கும் போராடும் மாணவர்களின் மீது ஒடுக்குமுறை அரசுகள் ஒரே விதமான வன்முறையைச் செலுத்தி வருகின்றன. எனினும், நீதிக்கான போராட்டங்கள் என்றும் ஓய்வதில்லை.

மாணவர்களின் போராட்டங்கள் தேசிய எழுச்சியை, ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்களின் எழுச்சியைத் தட்டி எழுப்புகின்றன. அவை சர்வதேசிய உணர்வாகவும் வெளிப்பட்ட தருணங்கள் உண்டு. அப்படியான முதல் அலை வியட்நாம் ஆதரவுப் போராட்டங்களாக வடிவம் எடுத்தன. பாரிஸ், பெர்லின், பிராக், நியூயார்க் என அது பரவியது. அன்றும் மாணவர்கள் அரச வன்முறைக்கு ஆளாகினர். அதன் இரண்டாம் அலை பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக எழுந்திருக்கிறது. காசா போர்நிறுத்தத்தைக் கோருவதோடு ஆயுத உற்பத்தியில் இருந்து பல்கலைக கழங்கங்கள் வெளியேறவும் அவர்கள் கோருகிறார்கள். கருத்துரிமையோடு புவியைப் பாதுகாப்பதாகவும் அவர்களது கோரிக்கைகள் இருக்கின்றன.

மாணவர்களின் போராட்டங்கள் வரலாற்றில் சாதித்தது என்ன என்பதற்கான சாட்சியமாக பாரிஸ், பெர்லின், நியூயார்க் போரட்டங்களை நேரில் கண்ணுற்ற எட்வர்ட் மார்க்யூசின் வார்த்தைகள் பின்வருமாறு:

இந்த நேரத்தில், இந்த நிகழ்வு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் ஏன் கருதுகிறேன் என்பதை நான் உங்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். முதலாவதாக அறிவுஜீவிகளின் தாழ்வு மனப்பான்மையால் இன்னும் பாதிக்கப்படுபவர்களை ஒருமுறை குணப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் மாணவர்கள் என்ன செய்ய முடியும் என்பதைத் தொழிலாளர்களுக்குக் காட்டினர். தொழிலாளர்கள் அந்த முழக்கத்தையும் மாணவர்களின் முன்மாதிரியையும் பின்பற்றினர் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. மாணவர்கள் உண்மையில் புதிய அலையினர். அவ்வவுதான். ஏனெனில் நடந்தது ஒரு புரட்சி அல்ல, ஆனால் ஒரு செயலின் புதிய அலை. உண்மையில் அது தன்னிச்சையாக மக்கள் திரள் செயல்பாடாக மாறியது. என் பார்வையில் அதுதான் அந்தப் போராட்டத்தின் தீர்க்கமான புள்ளி.

அவர்கள் பல்கலைக்கழகத்தை அரசியல்மயமாக்க வேண்டும் என்றனர். முழுமையான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் வேண்டும் என்றனர். மாணவர் தலைவரான கோன பெண்டிட் பல சந்தர்ப்பங்களில், அமெரிக்கக் கொள்கையின் ஆதரவாளர்கள், வியட்நாமில் போரை ஆதரிப்பவர்களைப் பொறுத்துக் கொள்வது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அவமானப்படுத்துவதாகும் என்று அறிவித்தார். இந்த சமூகத்தில் இன்னும் எஞ்சி இருக்கும் சுதந்திரத்தின் கடைசி எச்சங்களை வீழ்த்தி, அவர்களின் கொள்கையாலும் பிரச்சாரத்தாலும் சகித்துக் கொள்ளச் செய்வதாக பேச்சுச் சுதந்திரத்துக்கான உரிமை விளங்கக் கூடாது. இவர்கள் உலகின் பெரும் பகுதியை ஒரு புதிய காலனித்துவ களத்தில் புரட்டிப் போடுபவர்கள்  என்பது மாணவர்களால்  மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டது(4).

பாலஸ்தீன ஆதரவு மாணவர் எழுச்சி தொடங்கிய அதே கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நவீன அரபு அரசியல் மற்றும் அரபு அறிவுமரபு வரலாறு பற்றிக் கற்பிக்கும் பேராசிரியர் சோசப் மஸ்சாத் இவ்வாறு சொல்கிறார்:

இன்று நாம் மீண்டும் இந்த யுத்தத்தின் பிடியில் சிக்கியுள்ளோம். பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனக்கொலையை எதிர்ப்பது என்பது யூதர்களின் மீதான பாலஸ்தீனிய இனப்படுகொலை ஆதரவு என தற்போதைய ஆர்வெல்லியன் மொழியில் மொழிபெயர்க்கப்படுகிறது. இஸ்ரேலிய யூத இன மேலாதிக்கத்தையும் காலனித்துவ நிறவெறியையையும் எதிர்ப்பது என்பது யூத வெறுப்பின் வடிவமாக மொழிபெயர்க்கப்படுகிறது. பல்கலைக்கழக வளாகங்களில் கல்விச் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட்ட பேச்சையும் நசுக்குவது என்பது அவற்றை வலியுறுத்தும் ஒரு வடிவமாகிறது.

பல்கலைக்கழகங்களில் உள்ள நவதாராளவாத உயர்மட்டத் தலைவர்கள், அவர்களது தனியார் மற்றும் பொது நிதி வழங்குபவர்கள, அரசாங்கத்தில் உள்ள அவர்களது கூட்டாளிகள் இனப்படுகொலைக்கான எதிர்ப்பைக் கிடைக்கும் ஒவ்வொரு சக்தியாலும் ஒடுக்க முடியும் என்ற மாயையில் உழைக்கிறார்கள், இது அமெரிக்காவிற்குள் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவான எதிர்ப்பை உறையச் செய்து, அமெரிக்க மேற்கத்திய உயரடுக்கு வட்டங்களின் இஸ்ரேலிய ஆதரவைப் பாதுகாக்கும் என நம்புகிறார்கள். கடந்த ஏழு மாதங்களில் மாணவர்களும் ஆசிரியர்களும் நிரூபித்தது என்னவென்றால், கருத்தியல் மேலாதிக்கத்தை மீண்டும் இவர்கள் நிலைநிறுத்துவது என்றென்றும் முடிவுக்கு வந்து விட்டது. அரசும் பல்கலைக்கழக நிர்வாகங்களும் எவ்வளவு நிர்ப்பந்தத்தைப் பயன்படுத்துகிறார்களோ அந்த அளவுக்கு அவர்களது மேலாதிக்கம் அழிக்கப்பட்டு வருகிறது (5).

2023-2024 காசாப் போர் என்பது அமெரிக்க, மேற்கத்திய, காலனிய, வெள்ளையின மேலாதிக்க ‘உலக ஒழுங்கின்’ முடிவு. இதனை பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் தமது எழுச்சியின் வழியில் உலகுக்குத் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்கள்.

ஆதாரங்கள்:

1. Should academic institutions boycott Israel? by Ilan Pappé / The Guardian / 01 June 2024.
2. Pro-Israel billionaires urged New York crackdown on Gaza protests: Report / Alzajeera / 16 May 2024.
3. Mao/ The Orientation of the Youth Movement / 4 May 1939.
4. Herbert Marcuse and the Student Revolts of 1968: An Unpublished Lecture / Jacobin 31 March 2021.
5. Student protests upend hegemony on Israel and Palestine forever/ Joseph Massad/ Middle East Eye/ 09 May 2024.

- யமுனா ராஜேந்திரன்